தெய்விகக் குழலிசை மேதை மாலி: நூற்றாண்டை ஒளிரச்செய்யும் ‘விண்ட் வாக்கர்’ அரிய கண்காட்சி!

புல்லாங்குழல் மாலியின் நூற்றாண்டு விழா மற்றும் அபூர்வ பொக்கிஷங்கள் நிறைந்த கண்காட்சியின் பின்னணிப் பார்வை.
குழலிசை மேதை மாலி - புல்லாங்குழல் மாலி
குழலிசை மேதை மாலி - புல்லாங்குழல் மாலி
Updated on
Kalki Strip
Kalki Strip

'கலியுகக் கண்ணன்' திரைப்படத்தில் “மாலி அவர்களின் புல்லாங்குழல் இசை இது, உன்னால் இப்படி இசைக்க முடியுமா?”, என்று பகவான் கிருஷ்ணனிடம் கேள்வி கேட்பதுபோல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்த அளவிற்கு தெய்வீகமானதொரு இசை, புல்லாங்குழல் இசை மேதை, மாலி என்று அழைக்கப்படும் டி ஆர் மகாலிங்கம் அவர்களின் இசை.

The Museum of Performing Arts, MOPA Foundation, ‘Wind Walker’ என்ற தலைப்பில், புல்லாங்குழல் இசைக்கலைஞர் J A ஜெயந்த் அவர்களுடன் இணைந்து, புல்லாங்குழல் இசைமேதை மாலி அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், மூன்று நாள் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான இசை ரசிகர்களை மட்டுமல்லாது, இளம் இசைக்கலைஞர்கள், பள்ளிக்குழந்தைகள், அவ்வளவு ஏன், இசை பற்றி அறியாதவர்கள் கூட இந்த கண்காட்சியைக் கண்டு களித்திருக்கின்றனர்.

இந்த ஆண்டு முழுவதும், பல்வேறு வகையில் மாலி அவர்களை, மாலியின் தனித்துவமிக்க சங்கீதத்தை மையமாகவைத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்களுக்கு இசை விருந்து வழங்கும் ஜெயந்த் அவர்களை சந்தித்து, இது குறித்து கேட்டபோது, "2024-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இசைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, '2026-இல் மாலி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு ஒரு கச்சேரி நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்று ஒரு சபா நிர்வாகி கூறினார். அப்போதுதான், மாலி போன்ற இசை மேதையை வெறும் கச்சேரிகளால் மட்டும் நினைவுகூராமல், அவரது இசையையும், சிந்தனையையும், ஆளுமையையும் பல்வேறு பரிமாணங்களில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

"அந்த எண்ணமே ஒரு விரிவான நூற்றாண்டுத் திட்டமாக மாறியது. மாலி அவர்களின் இசையை மையமாகக் கொண்ட கேட்பரங்குகள், சொற்பொழிவுகள், விளக்க நிகழ்ச்சிகள், ஆவணக் கண்காட்சிகள் என ஆண்டு முழுவதும் தொடரும் நிகழ்வுகளை வடிவமைக்க எண்ணம் தோன்றியது.

"மாலி அவர்கள் கிருஷ்ணகான சபாவில் வழங்கிய இறுதிக் கச்சேரியின் ஒரே ஒரு வீடியோ பதிவு மட்டுமே இருப்பதாகத் தெரிந்தபோது, அவரைப் பற்றிய ஆவணங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்தேன்," என்கிறார்.

ஜெயந்த் மேலும் பேசுகையில், "என் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவர் இசைக்கலைஞர் சவிதா நரசிம்மன். அவருடைய MOPA பவுண்டேஷன் மூலம் பிரம்மாண்டமான இந்த கண்காட்சி அனைவரையும் ஈர்க்கும் ஒரு கலைப் பொக்கிஷமாக உருவாகி யிருக்கிறது. நுணுக்கமாக ஒவ்வொரு விஷயத்தையும் அவர் அணுகியதை பிரமித்து ரசித்தேன்.

புல்லாங்குழல் மாலி
இசைக்கலைஞர் ஜெயந்த் - இசைக்கலைஞர் சவிதாவுடன் அனுராதா கண்ணன்

"மாலி அவர்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரைத் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்த அரிய நினைவுப் பொருட்கள், புகைப்படங்கள், கடிதங்கள், விருதுகள் ஆகியவற்றைச் சேகரித்தோம். மாலி அவர்களின் நண்பரின் மகன் சிவகுமார், மாலியினுடைய ‘சங்கீத நாடக அகாடமி’ விருதுப் பத்திரத்தையும் ‘பத்ம ஸ்ரீ’ விருதுப் பத்திரத்தையும் கண்காட்சிக்காக தந்து உதவினார். அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் வசிக்கும் மணி சுந்தரேசன் என்பவர் மாலி அவர்கள் பயன்படுத்திய புல்லாங்குழல் ஒன்றை இந்த கண்காட்சிக்கு கொடுத்து உதவினார். ஆனால் நாங்கள் தொடர்பு கொண்ட பலரிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய செய்தி.

"என் தாத்தா T S சங்கரன் அவர்கள் மாலி அவர்களின் பிரதம சீடர்களில் ஒருவர். அவருக்கு மாலி அவர்கள் எழுதிய பல கடிதங்கள் என்னிடம் இருந்தன. இக்கடிதங்களுடன் அவருடைய ஆடைகள் அவர் பயன்படுத்திய கைகடிகாரம் அவரது புல்லாங்குழல் போன்ற பொருட்களும் கண்காட்சியில் வைக்கப் பட்டிருக்கின்றன.

"நூற்றாண்டு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, 1940-களில் மாலி அவர்கள் வாசித்த அரிய ஒலிப்பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு, அவரது இசை நுட்பங்கள், புல்லாங்குழல் வாசிப்பில் அவர் உருவாக்கிய புதுமைகள் ஆகியவற்றை விளக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளை நான் வழங்கியதை youtube இலும் காணலாம்.

"வரும் இரண்டு மாதங்களுக்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் 22 கச்சேரிகளை நடத்துகிறேன். இந்திய கர்நாடக இசையில் முதன்முறையாக நான்கு புல்லாங்குழல்கள் இணைந்து வாசிக்கும் 'Flute Ensemble' நிகழ்ச்சியையும் உருவாக்கியுள்ளோம். நவம்பர் மாதம் இந்தக் குழுவுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, லண்டன், லிவர்பூல் உள்ளிட்ட நகரங்களிலும் மாலி அவர்களின் இசையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளேன்," என்று அவர் தெரிவித்தார்.

உரையாடலின் நிறைவில், தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட ஜெயந்த், "சிறுவயது முதலே என் தாத்தா T S சங்கரன் அவர்களும், என் பரமகுரு மாலி அவர்களும்தான் என் ஆதர்சங்கள். இன்று என் தாத்தா இருந்திருந்தால், தன் குருவின் நூற்றாண்டு இவ்வாறு கொண்டாடப்படுவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார்” என்றார்.

சவிதா நரசிம்மன், மாலி பற்றிய ஒரு விளக்கப்படம் தயாராகி வருவதாகவும் அது இந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், டிசம்பர் மாதத்தில் பல்வேறு இடங்களில் இக்கண்காட்சியை எடுத்துச் செல்ல பல்வேறு அமைப்புகள் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

புல்லாங்குழல் மாலி
சங்கீத கலாநிதி டி. எம். கிருஷ்ணா - புல்லாங்குழல் மாலி

இந்தக் கண்காட்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய சங்கீத கலாநிதி டி. எம். கிருஷ்ணா அவர்கள், மாலி அவர்களைப் பற்றி குறிப்பிடுகையில்,

"மாலி அவர்கள் ராகங்களை வழங்குவதில் மட்டுமல்ல, லயக் கணக்குகளைக் கையாள்வதிலும் அபாரமான திறமை பெற்றவர். அவரது இசையின் தனிச்சிறப்பு, அவர் வெளிப்படுத்திய அசைக்க முடியாத நிதானம்.... அந்த நிதானம் என்பது இயல்பாக வந்ததல்ல; எந்தவித பதற்றமும் இல்லாமல், இசையோடு ஒன்றிப்போய், முழுமையான மனஅமைதியுடனும் தெளிவுடனும் அவர் இசையை வழங்கியதன் வெளிப்பாடாகும்.

"மாலி போன்ற கலைஞர்களை நாம் மிக எளிதாக 'மேவரிக்', 'இசை மேதை' என்று போற்றிவிட்டு, அவரை சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபட்ட ஒருவராகக் கருதிவிடுகிறோம். அவ்வாறு கூறுவது அவருடைய மகத்துவத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும், அதே நேரத்தில் அந்த மகத்துவத்தின் வேர்களை மறந்துவிடுகிறோம்.

அந்த அபாரமான மேதைமைக்கு பின்னால் இருந்தது அளவற்ற உழைப்பு; இடைவிடாத சாதனை; ஒவ்வொரு ஸ்வரத்தையும், ஒவ்வொரு ராகத்தையும், ஒவ்வொரு லய நுணுக்கத்தையும் உள்ளார்ந்து தேடிய தவம்,”, என்று கூறினார்.

கண்காட்சியில் இடம்பெற்றிருந்த அரிய ஆவணங்கள், புகைப்படங்கள், இசைக்கருவி மற்றும் நினைவுப் பொருட்கள் வழியாகவும், இசை வரலாற்றாய்வாளர் வி. ஸ்ரீராம் அவர்களின் ஆழமான உரையின் மூலமாகவும், பின்னணியில் ஒலித்த மாலி அவர்களின் தெய்வீகமான புல்லாங்குழல் இசையின் வழியாகவும், அந்தக் கூற்று எவ்வளவு உண்மையானது என்பதை உணர முடிந்தது.

புல்லாங்குழல் மாலி
மாலா சந்திரசேகர் அவர்கள், புல்லாங்குழல் இசை - புல்லாங்குழல் மாலி

கண்காட்சியில் இரண்டு புல்லாங்குழல் இசைக் கச்சேரிகளும் ஏற்பாடாகி இருந்தன. தொடக்க நாள் அன்று திருமதி மாலா சந்திரசேகர் அவர்கள், புல்லாங்குழல் இசைக்கருவியில் மாலி அவர்கள் ஏற்படுத்திய மாற்றங்கள், அவர் பயன்படுத்திய நுட்பங்கள் ஆகியவற்றை விளக்கமாக சொல்லி தன்னுடைய கச்சேரியை வழங்கினார். நிறைவு நாளன்று ஜெயந்த் அவர்கள் மாலி அவர்களின் புல்லாங்குழலைக் கொண்டு கச்சேரி வழங்கினார். இரண்டு கச்சேரிகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இனிய இசை ரசிகர்களை மாலி அவர்களின் நினைவுகளால் ஆக்கிரமித்தது என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?

அந்த அற்புதமான இசை வாழ்விலிருந்து சில ஒளித்துளிகள், சில மறக்கமுடியாத தருணங்கள்...

1926-ஆம் ஆண்டு ராமசாமி ஐயர் – பிரகதாம்பாள் தம்பதியருக்கு பிறந்த டி. ஆர். மகாலிங்கம், இசை உலகம் முழுவதும் 'மாலி' என்று போற்றப்படும் புல்லாங்குழல் மேதை. பொருளாதார வசதி குறைந்த குடும்பத்தில் பல குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே உடல்நலக் குறைவு இருந்தது.

இசையை முறையாகக் கற்கும் வாய்ப்பு அவருக்கு பெரிதாக அமையவில்லை. அவரது சகோதரி தேவகி, தாய்மாமா கோபால ஐயரிடம் சங்கீதம் படித்தார். சகோதரி பாடிய பாடல்களை ஒருமுறை கேட்டாலே, அவற்றை அப்படியே புல்லாங்குழலில் இசைத்துக் காட்டும் அபூர்வமான கேள்வி ஞானம் அவருக்கு இருந்தது. மகன் ஒரு பிறவி மேதை என்பதை விரைவில் உணர்ந்த தந்தை ராமசாமி, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, சிறந்த இசைக் கச்சேரிகளுக்குத் தொடர்ந்து அழைத்துச் சென்றார். அதன் விளைவாக, மாலி தனது குழந்தைப் பருவத்தை இசைக்காகவே அர்ப்பணித்தார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; பாட்டி Vs பேத்தி
குழலிசை மேதை மாலி - புல்லாங்குழல் மாலி

முறையான கல்வி பெறாவிட்டாலும் அவர் படித்த இசைப் புத்தகங்கள் எண்ணற்றவை. தமது 16 வது வயதில் மூன்று இசைப் புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார். கணக்கிலும் அவர் புலி. கேரம் விளையாட்டில் வல்லுனர். கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் தனக்கென ஒரு குழுவை கூட வைத்திருந்தாராம்.

புல்லாங்குழல் மாலி
குழலிசை மேதை மாலி - புல்லாங்குழல் மாலி

ஐந்து வயதிலேயே எந்தக் குருவிடமும் பயிலாமல், கேள்வி ஞானத்தின் மூலம் ‘அட தாள விரிபோநி’ வர்ணத்தை வாசித்தார். தந்தை அவரை பல இசை மேதைகளிடம் அழைத்துச் சென்று வாசிக்க வைத்தார். முதன்முதலில் அவர் வாசிப்பைக் கேட்ட பல்லடம் சஞ்சீவ ராவ், அந்தச் சிறுவனின் திறமையைக் கண்டு வியப்பில் ஆழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஏழு வயதில் சென்னை தியாகராஜ வித்வத் சமாஜத்தில் தனது முதல் கச்சேரியை நிகழ்த்தினார். அந்தக் கச்சேரியைக் கேட்ட பரூர் சுந்தரமய்யர் மற்றும் முசிறி சுப்பிரமணிய ஐயர், சிறுவனின் மேதமையைப் பாராட்டும் வகையில் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

அதன் பின்னர், அவரது கச்சேரிகளுக்கு அழகாநம்பிப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை, பாப்பா வெங்கட்ராமையா, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலக்காடு மணி ஐயர் போன்ற இசை ஜாம்பவான்கள் பக்கவாத்தியம் வாசிக்க முன்வந்தனர். பெரிய வித்துவான்களுக்கு வழங்கப்படும் சன்மானமே அந்தச் சிறுவனுக்கும் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
அடேங்கப்பா! பல கோடிகளுக்கு விற்பனையான உலகின் 5 சிறந்த ஓவியங்கள்!
குழலிசை மேதை மாலி - புல்லாங்குழல் மாலி

ஒருமுறை அவரது கச்சேரிக்காக அரங்கம் நிரம்பி கதவுகள் மூடப்பட்டன. சிறுவன் மாலியும் அரங்கில் வெளியில் மாட்டிக்கொள்ள, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, சிறுவன் மாலியைத் தமது தோளில் சுமந்தபடி மேடைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் இன்று வரை நினைவு கூரப்படுகிறது.

வெள்ளை வேட்டி, சட்டை, ஒளிவீசும் கண்கள், அதற்கு இணையாக மனதை உருக்கும் இசை—இவற்றால் மாலியின் கச்சேரிகளுக்கு ரசிகர்கள் அலைமோதினர். தடையற்ற கற்பனை, அசைக்க முடியாத ஸ்ருதி சுத்தம், அபாரமான கேள்வி ஞானம், புதுமையான விரல் நுட்பங்கள், மனிதக் குரலுக்கு நிகரான நாதம்—இவற்றின் மூலம் கர்நாடக இசைப் புல்லாங்குழலுக்கு அவர் ஒரு புதிய பரிமாணத்தை அளித்தார்.

இருபது வயது வரை இடைவிடாது கச்சேரிகள் வழங்கிய அவர், குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்ந்த பிறகு, பணத் தேவை ஏற்பட்டால் மட்டுமே கச்சேரி செய்யும் முடிவுக்கு வந்தார். அதற்குக் காரணமாக, அவர் மிகவும் நேசித்த சகோதரியின் மறைவு ஏற்படுத்திய ஆழ்ந்த மன உளைச்சல் கூறப்படுகிறது.

அவர் கச்சேரிக்கு வருவாரா என்ற பதற்றம் சபா நிர்வாகிகளுக்கும் ரசிகர்களுக்கும் வழக்கமாக இருந்தது. சில சமயங்களில் அரங்கிற்கு வந்தும் இசைக்காமல் திரும்பிச் சென்ற நிகழ்வுகளும் உண்டு. "ஏன் ஒப்புக்கொண்ட கச்சேரியை ரத்து செய்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "ஒப்புக்கொண்டால்தானே ரத்து செய்ய முடியும்!" என்று சிரித்தபடி பதிலளித்ததாகச் சொல்லப்படுகிறது.

புல்லாங்குழல் மாலி
கண்காட்சியில்... - புல்லாங்குழல் மாலி

சகோதரியின் மறைவுக்குப் பிறகு மனநலமும் உடல்நலமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டாராம். குடிப்பழக்கம், குதிரைப் பந்தயம் போன்றவற்றில் அவர் ஈடுபட்டிருந்தாலும், தன் வாழ்க்கையின் எந்தப் பகுதியையும் மறைக்காமல் வெளிப்படையாக வாழ்ந்தார்.

சிறுவயதிலேயே வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பல அரிய வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தபோதிலும், அவரது தந்தையின் விருப்பத்தால் அவற்றை ஏற்க இயலவில்லை. ஆனால், காலம் அவருக்காக வேறொரு பாதையை அமைத்தது. பின்னாளில் அமெரிக்கா சென்ற அவர், ரூஸ்வெல்ட் குடும்ப மரபைச் சேர்ந்த எலென் அவர்களைத் திருமணம் செய்து கொண்டு, பல ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்தார்.

வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் மீண்டும் இந்தியா திரும்பிய மாலி அவர்கள், உலகப் பற்றுகளைத் துறந்த ஒரு தவமுனிவரைப் போல அமைதியான வாழ்வை மேற்கொண்டார். தனது இறுதிக்காலம் நெருங்கி வருவதை உணர்ந்த அவர், தனது புகைப்படத்துடன் கூடிய ஒரு கடிதத்தை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்திருந்தார் என்பதும், அவரது வாழ்க்கையின் ஆழ்ந்த தத்துவப் பார்வையை வெளிப்படுத்தும் ஒரு அரிய நிகழ்வாகும்.

1986ஆம் ஆண்டு, இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திய வகையில், மாலி அவர்கள் இந்த மண்ணுலக வாழ்வை நிறைவு செய்து, அமரத்துவம் அடைந்தார். ஆனால், அவர் உருவாக்கிய இசை இன்றும் காலத்தைத் தாண்டி எண்ணற்ற இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பிறவி மேதையாகத் தோன்றி, புல்லாங்குழலின் ஒலிக்கு மனிதக் குரலின் உணர்வை அளித்த மாலி, கர்நாடக இசை வரலாற்றில் என்றும் அணையாத ஒளியாகத் திகழ்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com