

‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் வரும் கவுண்டமணி - செந்தில் நடித்த நகைச்சுவைக் காட்சியில் இடம் பெற்ற “பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?” எனும் சொற்றொடர் இன்றும் சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்கள் பேச்சுகளிலும் பயன்பாட்டிலிருந்து வருகிறது. “பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?” எனும் இந்தச் சொற்றொடரைக் கொண்டு, பாடலாசிரியர் பா. விஜய் எழுதிய 'அரண்மனை' திரைப்படத்தில் வரும் பாடலும் பிரபலம்தான். அது சரி, இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
பெட்ரோமாக்ஸ் (Petromax light) என்பது மாண்டில் எனப்படும் வளிம வலைத்திரி மற்றும் மண்ணெண்ணெய் பயன்பாட்டில் எரியக் கூடிய ஒரு அழுத்த புகை போக்கி விளக்கு ஆகும். ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த ‘ஏகுரிச் மற்றும் கிரெத்சு’ என்ற நிறுவனத்தின் தலைவர் மாக்சு கிரெட்சு என்பவர் இவ்விளக்கை முதன் முதலில் வடிவமைத்தார். பெட்ரோலியம் என்ற எரிபொருளின் பெயரும் மாக்சு என்ற கிரெத்சின் முதற் பெயரும் சேர்க்கப்பட்டு பெட்ரோமாக்சு என இவ்விளக்குக்குப் பெயரிடப்பட்டது.
அக்காலத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்த வெண்மெழுகினை எரிபொருளாகக் கொண்டு ஒரு விளக்கை உருவாக்க அவர் முயன்றார். வெண்மெழுகிலிருந்து வளிமம் ஒன்றை அவர் உருவாக்கினார். இவ்வளிமம் மிக உயர்ந்த கலோரி அளவைக் கொண்டிருந்தது. அத்துடன் மிகச் சூடான நீலத் தீச்சுடரையும் தந்தது. கிரெட்சு ஆவியாக்கிய வெண்மெழுகினைக் கொண்டு அழுத்த விளக்கு ஒன்றைத் தயாரித்தார்.
இவ்விளக்கு முதலில் மீத்தைலேற்றப்பட்ட மதுசாரத்தைக் கொண்டு சூடாக்கப்பட்டது. மூடிய கலன் ஒன்றில் வெண்மெழுகு கைப்பம்பு ஒன்றின் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. வளிம வலைத்திரியில் இருந்து பெறப்பட்ட வெப்பம் மூலம் வெண்மெழுகு ஆவியாக்கப்பட்டது. இது பின்னர் காற்றுடன் சேர்ந்து வலைத்திரியை எரிக்கப் பயன்பட்டது. 1916 ஆம் ஆண்டளவில் இவ்விளக்கும் இதன் பெயரும் உலகெங்கும் பரவியது.
இந்தியாவிலும் இவ்விளக்குகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. கோயில் விழாக்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சில சடங்கு நிகழ்வுகளில் மக்கள் கூடும் இரவு வேளைகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலையில், இருளடைந்து விடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் வெளிச்சத்தை ஏற்படுத்த பெட்ரோமாக்ஸ் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. இதே போன்று, மாலை வேளையில் நடைபெறும் சமய ஊர்வலங்கள், மணமகன் ஊர்வலம் போன்ற நிகழ்வுகளிலும் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் கொண்டு செல்லப்படும் நடைமுறை வழக்கத்திலிருந்தன.
மண்ணெண்ணெய் பயன்பாட்டிலிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கைப் போன்று, எரிவாயுவைப் பயன்படுத்தி எரியும் புதிய பெட்ரோமாக்ஸ் விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்த போதும், அதற்குப் பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை. ஏனெனில், விழாக்களின் போது, மின்னிணைப்பு துண்டிக்கப்படும் நிலையில், மின்னியற்றி ஈன்பொறி (Generator) கொண்டு மின்னுற்பத்தி செய்து அங்கு உடனுக்குடன் ஒளியேற்றம் செய்ய முடிகிறது.
மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டவுடன், சேமித்து வைத்திருக்கும் மின்சக்தியைக் கொண்டு, உடனடியாக மின்வசதியினைத் தரும் தடையிலா மின் வழங்கி (Uninterrupted Power Supply - UPS) வரவு, சாதாரணமாக விளக்குகளில் மின்கலம் (Battery) பொருத்தப்பட்டு மின்சாரத்தைச் சேமித்துக் கொண்டு, மின் இணைப்பு துண்டிக்கப்படும் போது, அதே விளக்கு மின்னிணைப்பு இல்லாமலே எரியும் வசதி கொண்ட மின் விளக்குகள் வரவு போன்றவை பெட்ரோமாக்ஸ் விளக்குகளின் பயன்பாட்டைப் பெருமளவில் குறைந்துவிட்டன.
இருப்பினும், பேரிடர் காலங்களில் மின்னிணைப்புகள் பல இடங்களில் துண்டிக்கப்படும் நிலையில், அவற்றைச் சீர் செய்வதற்காக இரவு நேரப் பணிகளின் போது பயன்படுத்துவதற்காக பெட்ரோமாக்ஸ் விளக்குகள் இன்னும் பயன்பாட்டிலிருக்கின்றன என்பதும் உண்மை.