

மங்கோலிய சக்கரவர்த்தி செங்கிஸ்கானின் மனவலிமை, தாய் ஹோலுனின் ஊக்கவுரைகள், எதிரியின் மனதை அச்சப்படுத்தும் உத்திகள் ஆகியவை இந்தக் கட்டுரையின் மையம். டெமுஜின் சிறுவயதிலேயே குதிரை, வில், வாள் பயிற்சியில் தேர்ச்சி பெற்று, போரில் எதிரி படையை மனதளவில் பலவீனப்படுத்தி பேரரசர்களுக்கெல்லாம் பேரரசனாக உயர்ந்த வரலாறு கூறப்படுகிறது.
ஒரு காரியத்தை செய்வதற்கு பயப்படுகிறாயா? எனில் அதை செய்யாதே.
ஒரு காரியத்தில் முழுமையாக இறங்கி விட்டாயா? எனில் பயப்படாதே. இது மங்கோலிய சக்கரவர்த்தி மாவீரன் செங்கிஸ்கானின் தாரக மந்திரம் ஆகும்.
நாடோடிகளான மங்கோலியர்களில் பல இனக் குழுக்கள் உண்டு. அதில் ஒரு இனக்குழுவின் தலைவராக இருந்த டெமுஜினின் தந்தையை இன்னொரு இனக் குழுவினர் விஷம் வைத்துக் கொன்று விட்டனர். டெமுஜின் என்பது செங்கிஸ்கானின் இயற்பெயர் ஆகும்.
அடுத்த வாரிசாக டெமுஜின் இருந்தாலும் அவனுக்கு 13 வயது என்பதால் தலைமை பொறுப்பு கொடுக்க மறுத்துவிட்டனர். ஆனால் அவனது தாய் ஹோலுன் கூறிய, "நீ மிகவும் வலிமையானவன். உன்னால் முடியும் மகனே! உன் நிழல் மட்டுமே எப்போதும் உனக்கு துணை.
வேறு யாரும் இல்லை" போன்ற வார்த்தைகளின் காரணமாக நான்கு வயதிலேயே குதிரையில் நின்று சவாரி செய்தல், வில் வித்தை, வாள் பயிற்சியில் டெமுஜின் திறமை கொண்டிருந்தான்.
கி.பி. 1204 இல் டெமுஜினில் படைகளுக்கும் ஜமுக்காவின் படைகளுக்கும் நடைபெற இருந்த போரில் வெல்பவர் அரியணை ஏற முடியும் என்ற நிலையில் டெமுஜினின் வீரர்கள், எதிரி படை நம்மை விட பல மடங்கு அதிகம். எதிரியின் குதிரைப் படையை நம் குதிரை படையோடு ஒப்பிடவே முடியாது எனக் கூறியதை கேட்டு டெமுஜின் பதற்றம் அடையவில்லை.
எதிரிகளுக்கு உன் மேல் ஒரு வித அச்சத்தை உண்டாக்கி விட்டால் எதிரியின் பலம் பாதியாக குறைந்து எளிதில் வெற்றி பெறலாம் என்ற அன்னையின் அறிவுரையை மனதில் கொண்டிருந்தான் டெமுஜின்.
எதிரி வீரர்களின் மனவலிமையை விட எனது வீரர்களின் மனவலிமை அதிகம் என டெமுஜின் அறிந்திருந்ததால் பதட்டம் அடையாமல் தனது வீரர்களுக்கு வித்தியாசமான கட்டளை ஒன்று பிறப்பித்தான்.
இரவு எல்லோரும் நெருப்பை மூட்டி நன்றாக ஓய்வெடுக்கும் போது ஐந்து பேராக குளிர் காயாமல் ஒவ்வொருவரும் ஐந்தைந்து இடங்களில் நெருப்பு மூட்டி குளிர் காயுங்கள் என்பதுதான் அந்த கட்டளை.
நிலவில்லாத இரவில் எதிரி படையினர் மலைக்குன்றின் மீது நோட்டமிட்ட பொழுது பூமியில் எக்கச்சக்கமாக நெருப்பு நட்சத்திரங்கள் தென்பட்டதை பார்த்த எதிரி படையினரின் மனதில் டெமுஜினின் படை பல மடங்கு பெரியது என்ற எண்ணம் தோன்றியது. இதற்கு பயந்து முகாமிலிருந்து இரவோடு இரவாக ஒரு பகுதியினர் தப்பிச் சென்று விட்டனர்.
அன்னையின் உத்தியைக் கையாண்டு எதிரிப்படை வீரர்களை மனதளவில் பலவீனப்படுத்தினான் டெமுஜின். போரில் மிகப்பெரிய வெற்றி பெற்று பேரரசர்களுக்கெல்லாம் பேரரசனாக மங்கோலியர்களின் தலைவனாக செங்கிஸ்கான் முடி சூட்டிக்கொண்டார்.
வலிமையான உடலைக் கொண்டு இருந்தாலும் மனதளவில் பலவீனமான இருந்தால் தோற்று விடுவான். மனதை வலிமைப்படுத்த நேர்மறை எண்ணங்கள் மிகவும் முக்கியம். நம்மை ஊக்கப்படுத்த நல்ல நண்பனோ நல்ல குருவோ இல்லாமல் போனாலும் நேர்மறை எண்ணங்கள் இருந்தால் அது நம்மை ஒருபோதும் கைவிடாது.
ஆகவே, மகனே! முதலில் எதிரிகளுக்கு உன் மேல் ஒரு வித அச்சத்தை உண்டாக்க வேண்டும். அதைச் செவ்வனை செய்து விட்டாலே எதிரியின் பலம் பாதி குறைந்துவிடும். பயத்தோடு வந்து மோதும் எவனும் வெற்றி பெறவே மாட்டான் என்ற டெமுஜினின் தாய் சொன்ன ஓர் மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் நாமும் கடைபிடித்தால் ஒருவன் மன வலிமை பெற்று வாழ்வில் நினைத்த இடத்தை பெற்று விடுவான்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், மாவீரன் செங்கிஸ்கானின் உத்திகளைப் பின்பற்றுவதன் மூலம் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் அசைக்க முடியாத மனத் திண்மத்தையும், எத்தகைய கடின சூழலையும் எதிர்கொண்டு வெற்றி பெறக்கூடிய தன்னம்பிக்கையையும் முழுமையாகப் பெறலாம்.