

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் அல்லது மீம்களை ஸ்க்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கும்போது, 'No Cap', 'She Ate', 'Caught in 4K' மாதிரி வார்த்தைகளை பார்த்து, 'இது என்ன புதுசா இருக்கு?'னு யோசிச்சிருக்கீங்களா?
ஒரு மீமைப் பார்த்துவிட்டு, 'இது என்ன வார்த்தை?'' என்று குழம்பிய அனுபவங்கள் இங்கு பலருக்கும் உண்டு. குறிப்பாக இன்ஸ்டகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ், எக்ஸ்(twitter) தள பதிவுகள் போன்ற சமூக ஊடங்களில் அடிக்கடி தோன்றும் புதிய ஸ்லாங், இன்றைய இளைஞர்களின் அன்றாட உரையாடல்களிலும் இடம்பிடித்துவிட்டன.
சமூக ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கு தளமாக மட்டுமல்லாமல், புதிய கலாச்சாரங்களையும், புதிய மொழிகளையும், உருவாக்கும் இடமாகவும் மாறிவிட்டன. குறிப்பாக Gen-z தலைமுறையினர் பயன்படுத்தும் புதிய 'ஸ்லாங்' வார்த்தைகள், இணையத்தில் எல்லா மூலைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
"Rizz'', "Sigma", "Delulu'', "Ghosting" போன்ற வார்த்தைகள் முதலில் கேட்கும் போது புதிதாகத் தோன்றலாம். ஆனால், இவை வெறும் fun -காக மட்டுமல்லாமல், இளம் தலைமுறையினரின் எண்ணங்கள், உறவுகள் மற்றும் டிஜிட்டல் கலாச்சாரத்தின் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் சொற்களாகவும் மாறியுள்ளன.
ஒருவரின் கவர்ச்சியைப் பாராட்ட "Rizz '' என்றும், கூட்டத்தோடு சேராமல் தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து வாழ்பவரை "Sigma'' என்றும், கற்பனை உலகில் அதிகமாக வாழ்பவரை "Delulu" என்றும் அழைப்பது இன்றைய நெட்டிசன்களின் வழக்கமான பேச்சாகிவிட்டது. அதேபோல், காரணமே சொல்லாமல் திடீரென தொடர்பைத் துண்டிப்பது "Ghosting" என்றும், காதலுக்கும் நட்புக்கும் இடையேயான உறவை "Situationship'' என்றும் குறிப்பிடுவார்கள்.
இந்த வார்த்தைகள் வெறும் இணைய ஜோக்குகளாக மட்டுமே இல்லாமல், இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை, உறவுகள், எண்ணங்கள் மற்றும் சமூக ஊடக தாக்கத்தை வெளிப்படுத்தும் புதிய மொழியாக உருவெடுத்துள்ளன. ஒரு மீம்ஸ் ஏன் வைரலாகிறது? ரீல்ஸ் ஏன் கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெறுகிறது? என்பதற்கான பதில்களும் பல நேரங்களில் இந்த ஸ்லாங் வார்த்தைகளுக்குள்ளே மறைந்திருக்கின்றது.
ஒரு காலத்தில் அகராதிகளில் இருந்த வார்த்தைகளே மொழியை நிர்ணயித்தன. ஆனால் இன்று, மீம்களும், ரீல்ஸ்களும், நெட்டிசன்களின் தினசரி உரையாடல்களும் புதிய வார்த்தைகளை உருவாக்குகின்றன. அடுத்த முறை யாராவது "No Cap!", "She Ate!", அல்லது "Caught in 4K!" என்று சொன்னால், குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இணையத்தின் இந்த புதிய மொழியைப் புரிந்துகொள்வதே, டிஜிட்டல் தலைமுறையுடன் இணைந்து பயணிப்பதற்கான முதல் படியாக இருக்கிறது.
இன்றைய உலகில் மொழி என்பது புத்தகங்களில் மட்டும் வாழ்வதில்லை; அது ஒவ்வொரு மீமிலும், ஒவ்வொரு ரீல்ஸிலும், ஒவ்வொரு வைரல் டிரெண்டிலும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால், நாளைய ட்ரெண்ட் வார்த்தை என்னவாக இருக்கும் என்பதைக் கணிக்க முடியாவிட்டாலும், ஒரு விஷயம் மட்டும் உறுதி — Gen Z-வின் இந்த புதிய மொழி, இணைய கலாச்சாரத்தின் அடுத்த அத்தியாயத்தை எழுதிக்கொண்டே இருக்கும்!