காது கொடுத்துக் கேளுங்களேன்..!

Traffic Horn Sound
Traffic Horn Sound

ஆட்டோமாடிக் சிக்னல் சிவப்புத் தடை போட்டிருந்ததால் எல்லாவகை வாகனங்களும் உறுமியபடியே நின்றிருந்தன. அந்த உறுமலில் ‘எப்போதடா பச்சை விளக்கு எரியும், சீறிப் பாயலாம்’ என்ற அவசரப் பரபரப்புத் தெரிந்தது.

நேரம் கரைந்து பச்சை விளக்கு எரிவதற்கு இன்னும் ஐந்து விநாடிகள் இருக்கும் சமயத்தில், திடீரென ஒரு ஹாரன் ஓலம் கேட்டது. பாதிச் சாலையையே அடைத்துக் கொண்டிருந்த ஒரு லாரி, தான் புறப்படத் தயாராக இருப்பதை அறிவிக்கத் தன் ஏர்ஹாரனால் ஒலியெழுப்ப, அதற்கு முன்னால் நின்றிருந்த ஸ்கூட்டர் ஓட்டி வந்த ஒரு பெரியவர் அப்படியே திடுக்கிட்டு நடுங்கிவிட்டார். அவருக்கு இருந்த பதட்டத்தில், வண்டியை விட்டு இறங்கி, ஸ்டாண்டைப் போட்டு, காதைப் பொத்திக் கொண்டே லாரி ஓட்டுநரிடம் சண்டைக்கும் போய்விட்டார்.

இது சென்னை நகர சாலைகளில் காணக்கிடைக்கும் சம்பவம்தான். இதில் வேடிக்கை என்னவென்றால், பெரிதாக ஒலியெழுப்பியபடி பின்னால் வரும் வாகனம், பேருந்தோ, லாரியோ அல்லது சரக்கு வேனோ என்று நினைத்து, பயந்து இடது ஓரமாக ஒதுங்கி அதற்கு வழிவிட, இரு சக்கர வாகனம் ஒன்று நம்மை வெகு அலட்சியமாகக் கடந்து செல்வதுதான்! ‘அடச்சே!’ என்று வெறுப்புடன் நாம் அலுத்துக் கொள்வதுதான் மிச்சம்.

சாலையில் போவோரை பயமுறுத்த வேண்டும்; அவர்கள் திடுக்கிட்டு ஒதுங்குவதை வேடிக்கை பார்க்க வேண்டும்; ஓடும் வாகனங்கள் மட்டுமல்லாமல், நடைபாதையில் செல்லும் பாதசாரிகளும் தம்மைப் பார்த்து மிரள வேண்டும்; தன் நண்பர்கள் அந்தப் புதுமை ஒலிபெருக்கியைப் பார்த்துப் பொறாமைப்பட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்து சாலை நாகரிகத்தைப் புறக்கணிக்கிறார்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலர். அவர்களுக்கென்னவோ சாலையே விளையாட்டு மைதானம்தான். ஆனால் அதைப் பயன்படுத்தும் பிறருக்கு மயானமாக அல்லவா ஆகிவிடும் போலிருக்கிறது!

இன்னொரு அநாகரிகமும் நகர சாலைகளில் அரங்கேறுகிறது. ஏதேனும் காரணத்துக்காக போக்குவரத்து தடை பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தமக்கு முன்னால் நின்றிருக்கும் வாகனங்கள் ஒரு அங்குலம் கூட நகர முடியாத நெருக்கடியை கவனித்தும் சிலர், பின்னாலிருந்தவாறு தொடர்ந்து ஹாரன் ஒலியை எழுப்பி கொண்டே இருப்பார்கள். முன்னேறிச் செல்ல முடியாதபடி முந்தைய வாகனங்கள்

பொதுவாக கிராமப்புறங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லும்போது, சாலையில் குறுக்காகக் கடந்து செல்லும் கால்நடைகளை பயமுறுத்தி எச்சரித்து சாலையை விட்டு விலகச் செய்வதற்காக ஏர் ஹார்ன் ஒலிபெருக்கியைப் பொருத்திக் கொள்வது வழக்கம். இந்த ஒலியைக் கூட ஊருக்குள் நுழையும்போது பயன்படுத்தக்கூடாது என்றும் விதி இருக்கிறது. ஆனால் பெரிய வாகனங்களை ஓட்டுபவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. ஊருக்குள்ளும் மிக உற்சாகமாக ஒலி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கவலை அளிக்கும் கள்ளச்சாராய இறப்புகள்!
Traffic Horn Sound

நெரிசல் மிகுந்த நகரச் சாலைகளில் இப்படி வாகனங்கள் அலறுவது நிறைய பேருக்கு இருதயத் துடிப்பைத் தாறுமாறாக்குகிறது. இப்படி விபரீத ஒலியெழுப்பும் கருவிகளைப் பொருத்திக் கொள்வது வாகன உற்பத்தி சட்டத்தின் கீழ் முறைகேடானது என்றார் வாகனப் பொறியாளர் ஒருவர். இந்தந்த வாகனத்துக்கு இந்தந்த ஒலி என்று வகைப்படுத்தி அது இத்தனை டெஸிபலுக்குள்தான், அதாவது ஒலியலை வேகம் கொண்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று வரைமுறையும் செய்திருக்கிறார்கள். அந்த ஒலி, மனிதக் காதுகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்ற ஒலிமாசு சட்டம் இதற்கு வழிவகை செய்கிறது. அதோடு, புதிதாக ஒரு வாகனம் வாங்கும்போது எந்தவகையான எச்சரிக்கை ஒலி அமைப்பு இருந்ததோ அதேதான் அந்த வாகனம் காலாவதி ஆகும்வரை இருக்க வேண்டும்; தம் விருப்பம்போல மாற்றிக் கொள்வதைச் சட்டம் அனுமதிப்பதில்லை என்றும் அவர் விளக்கினார். ஆனால் நடப்பு அப்படியா இருக்கிறது?

வாகன ஒலியை விடுங்கள், தன் வீட்டில் ஏதாவது நிகழ்ச்சி என்றால், ஒலிபெருக்கித் திரைப்பாடல்கள் மூலம் தெருவையே அலற விடுகிறவர்களும் இருக்கிறார்கள். சில திருமண மண்டபங்களில் மெல்லிசை, இரைச்சலால் கொல்லிசையாக மாறி, உறவினர்களும், நண்பர்களும், இயல்பாக, சந்தோஷமாகப் பேசிக் கொள்ள முடியாதபடி செய்து விடுகிறது. துரதிருஷ்டவசமாக இப்போது இரைச்சலே இசை என்றாகிவிட்டபோது, பாடுபவர்களையும் குறை சொல்ல முடியாதுதான். போதாக்குறைக்கு பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் மக்களின் பலவகைப்பட்ட கூக்குரல்கள், உரத்த குரல் சண்டைகள் என்று நகரே தத்தளிக்கிறது. கடற்கரை அலைகள்கூட, அங்கே கூடியிருக்கும் மக்களின் சந்தடியில், தம் ஓசையைக் குறைத்துக் கொள்கின்றன.

அதிர்ந்து பேசுவதே அநாகரிகம் என்ற பண்பு வளர்ந்தால்தான் எல்லாவித இரைச்சல்களும் கட்டுப்படும்.

என்ன, நான் சொல்வது கேட்கிறதா? என்ன, ஒரே இரைச்சலாக இருக்கிறதா, ஒன்றும் கேட்கவில்லையா? சரிதான் போங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com