தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தைத் தடுக்க அரசே டாஸ்மாக் மூலம் மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கள்ளச் சாராயம் காய்ச்சும் இடங்களுக்கு அவ்வப்போது சென்று, அங்குள்ள ஊறல்களை அழிக்கும் பணிகளையும் மதுவிலக்கு காவல் துறையினர் செய்து வருகின்றனர்.
இச்சூழலில், சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய பலருக்கும் தலைவலி, வயிற்று வலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 60 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிகழ்வு மாநிலம் முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சோதனையில் கள்ளச்சாராயம் விற்ற ஒருவரிடமிருந்து மெத்தனால் கலந்த 200 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு இரு மூத்த அமைச்சர்களை உடனடியாகக் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி, சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இவ்வகையான கள்ளச்சாராய இறப்புகள் விழுப்புரம் மாவட்டத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும், சமீப காலத்தில் நிகழ்ந்துள்ளதை நாம் நினைவு கூற வேண்டியுள்ளது. எனவே, தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையில் தீவிர கண்காணிப்பும், கட்டுப்பாடும் தேவைப்படுவதை நம்மால் உணர முடிகிறது. இவ்வாறான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுவதை நாம் சாதாரண நிகழ்வுகளாக எடுத்துக்கொள்ள முடியாது.
மனிதன் பணம், ஆடம்பரம் என்ற பண்பாட்டிற்குள் நுழைந்த பிறகு நிம்மதியை இழக்கத் தொடங்கினான். நாளடைவில் பழ ரசம் என்ற பேரில் மது ரசத்திற்கு அறிமுகமானான். மூளையின் உணர்திறனை மட்டுப்படுத்தும் போதையின் அளவை அதிகரிக்கும் யுக்திகளும் காலப்போக்கில் தோற்றுவிக்கப்பட்டன.
மக்களால் 'கள்ளு' என்ற மதுபானம், பண்டைய தமிழகத்தில் பெரும்பாலும் ’பனங்கள்ளு’ ’தென்னங்கள்ளு’ என்னும் பெயர்களில் பருகப்பட்டு வந்தன. இவை இயற்கையாகவே கிடைத்ததால், இவற்றால் மக்கள் தங்களுக்கு எந்த ஆபத்து இருக்காது என்று நம்பினர். காலப்போக்கில் பலருக்கு இவற்றின் போதை போதாமல் போக, மேலைநாட்டு மது பான வகைகள் அவர்களுக்கு அறிமுகம் ஆகின. இன்னும் சிலர் தாங்களாகவே முன்வந்து அதிக போதை தரக்கூடிய எரிசாராயத்தைத் தயாரித்து விற்க ஆரம்பித்தனர். அதைப் பருகியதால் உயிரிழப்புகள் பல ஏற்படத் தொடங்கின. அதனால் இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலேயே கள்ளுக்கடை மறியல், மது ஒழிப்பு என்று பல போராட்டங்கள் நடைபெற்றன.
நாடு விடுதலை அடைந்த பிறகு, அரசாங்கங்கள் உருவாயின. பிறகு வருவாய்க்காக அரசே மதுக்கடைகளைத் திறந்தது. ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்ற வாசகத்துடன் மது பானங்கள் விற்பனைக்கு வந்தன. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகவில்லை. மக்களோ, தனியார் மதுக்கடைகளையே நாடினார்கள். அதனால், அரசாங்கம் தனியார் மதுக்கடைகளை இழுத்து மூட ஒரு வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கியது. அந்த வார்த்தைதான், ’கள்ளச்சாராயம்'. அரசாங்கத்தின் நடவடிக்கையாலும் கள்ளச்சாராயம் ஒழிந்தபாடில்லை. குடித்தே பழகிவிட்ட மக்களுக்கோ குடிக்காமல் இருக்க முடியவில்லை. அதனால் அரசாங்க மதுபானங்களைப் பருகத் தொடங்கினர். ஆனால், கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் சொல்லிக்கொள்ளும் பொதுவான காரணங்கள் காதல் தோல்வி, மனக்கவலையை மறக்க, பொழுதுபோக்கு, உடல் வலியைப் போக்க, சுறுசுறுப்பிற்காக, தைரியத்திற்காக ஆகியவை ஆகும். அதுமட்டுமல்லாமல், இன்றைய திரைப்படக்காட்சிகளும் இதற்கு ஊக்கிகளாக அமைகின்றன.
குடிப்பதால் மூளையின் செயல்பாடு குழம்பி, ஒழுக்க நெறிமுறை தவறி நடக்கச்செய்கிறது. பெரிய குற்றங்களை செய்யத் தூண்டுகிறது. மது நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுவதால் மது குடித்தவுடன், சிறிது நேரத்திற்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், நாளடைவில் எல்லா நோய்களையும் கொண்டு வந்து, சிறிது சிறிதாக அவர்களின் உயிரைப் பறிக்கிறது. தொடக்கத்தில் மகிழ்ச்சிக்காக குடிக்கத் தொடங்குபவர்கள், பிறகு அதற்கு அடிமையாகி விடுகிறார்கள்.
மது குடிப்பதினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் இறுக்க நோயும், கல்லீரல் புற்று நோயும் ஏற்படலாம். மது வயிற்றுக்குள் செல்லும்போது குடலில் புண்ணும் ஏற்படுகிறது. வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது. தோளிலும், காலிலும் தசை நார் இழப்பு ஏற்படுகிறது.
மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை குறைகிறது. தொற்று நோய்கள் வந்தால் அவர்கள் எளிதில் குணமடைவதில்லை. மதுவுக்கு அடிமை என்பது உடல் ரீதியான, மன ரீதியான, சமூக ரீதியான பிரச்னையாகும். ஆகவே, இவர்களை குணமாக்க உளவியல் ரீதியாகவும் அணுக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் அருந்துவதால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், விவாகரத்துப் பிரச்னைகள், பணியில் கவனமின்மை, வேலையிழப்பு, பொருளாதாரப் பிரச்னைகள், அதிக செலவு, ஏளனப் பேச்சுகள், சமூகத்தில் மரியாதை குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இன்று நாட்டில் நடைபெறும் அதிகக் குற்றங்களுக்குக் காரணம் மதுவே ஆகும். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிகப் பங்கு மதுவுக்கே உண்டு. தற்போது பெண்களும் குடிக்கத் தொடங்கி விட்டது வேதனைக்குரியது. ஆணும், பெண்ணும் குடிகாரர்களாக இருந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை மிகவும் மோசமாகி விடுகிறது. இது அக்குடும்பத்தின் எதிர்கால சந்ததிகளின் வாழ்வையும் பாதிக்கிறது.
மது பழக்கத்தால் ஒழுக்கக்கேடும், சமுதாயச் சீரழிவும் ஏற்படுகிறது. குடிப்பழக்கம் அநாகரிக உச்சத்தின் தொடக்கமாக அமைகிறது. ஆடம்பரச் செலவாக மதுவிற்காக சம்பாதித்த பணமெல்லாம் போக, கலங்கி நிற்கும் குடும்பங்கள் பலப்பல.
மதுக்கடைகளை மூடச் சொல்லும் மனிதன், தான் மதுக்குடிப்பதை மட்டும் நிறுத்தத் தயாராக இல்லை. குடிக்கும் மக்கள் திருந்தியிருந்தால் என்றோ மது ஒழிந்திருக்கும். எதற்கெடுத்தாலும் அடுத்தவரையே குறை சொல்லி பழகிவிட்டோம் நாம். தாம்தான் திருந்த வேண்டுமென்று தெரிந்தாலும் அதை செயலாக்க நம் குடிமக்கள் தயாராக இல்லை.
தன்னில் இருந்தே சமூக மாற்றம் தோன்றும் என்பதை குடிகாரர்கள் மறந்துவிடக்கூடாது. தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் கவலை தரும் மது ஒழிந்தால்தான் நாடும், வீடும் வளத்தைக் காண முடியும். இளைய தலைமுறை இதை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரமிது.