'க்ளூகோமா' என்ற கொடிய கண் நோய்! கண்களை 'பார்த்து'கொள்ளுங்கள் ப்ளீஸ்!

Glaucoma
Glaucoma
Published on

ஒரு மனிதரின் ஐம்புலன்களில் பிரதானமாக விளங்குவது கண் என்பார்கள். அருகிலுள்ள மற்றும் தொலைதூர காட்சிகளையும், வண்ணங்களை வகைப்படுத்தியும், வாசகங்களை படித்தும் பல நிதர்சனங்களை, உண்மைகளை மூளைக்குத் தெரிவிக்கும் அற்புதச் செயலைச் செய்கிறது கண். ஒரு பார்வை வீச்சில் 180 டிகிரி கோணத்தில் புலப்படும் எதையும் அடையாளம் காணும் அரிய செயல் புரியும் அங்கம் அது.

இப்போது பார்வை இழப்பைத் தவிர்க்கப் பல முன்னேற்றங்களை விழியியல் விஞ்ஞானம் கண்டுபிடித்துவிட்டது. ‘கண் பார்வை மங்குகிறது, எதிரே உள்ள பொருள் மங்கலாகத் தெரிகிறது,‘ என்ற குறையைப் பிறரிடம் தெரிவிப்பதை கௌரவக் குறைச்சலாகக் கருதிய காலம் போய்விட்டது. தம் விழிகள், தம் பார்வை என்ற சுய உணர்வோடு முதுமை ஆட்கொண்டாலும், பார்வையை மட்டும் இழந்துவிடக்கூடாது என்ற ஏக்கம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. 

பொதுவாகப் பார்வை இழப்பு என்பது எதனால், எப்படி வருகிறது?

பிறந்தபோது எந்த அளவில் இருக்கிறதோ அதே அளவில், கொஞ்சமும் வளராமல் இறுதிநாள்வரை இருக்கும் ஒரே உடல் உறுப்பு கருவிழிதான் என்பது ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு. சர்க்கரை நோய் பாதிக்காதவரை, உடல் உறுப்புகளிலேயே அடிபட்டால் உடனே சரியாகிவிடக்கூடிய சாத்தியமும் விழிக்கு உண்டு. இதற்கு முக்கிய காரணம், இயற்கை அந்தக் கண்ணிலேயே சுரக்க வைத்திருக்கும் திரவம்தான். அதுவே கண் உபாதைகளுக்கு மருந்து என்று சொல்லலாம். இப்படி ஓர் அற்புதமானமான அங்கத்தை நாம் பல சமயங்களில் அலட்சியப்படுத்துவதாலேயே பார்வை இழப்பு என்ற நஷ்டத்துக்கும் ஆளாகிறோம். 

இழக்கும் பார்வையை மீட்டுத் தர மருத்துவ விஞ்ஞானம் பல புது உத்திகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவற்றில் ஒன்று கண்ணாடி அணிவது.

பார்வைக் குறைபாட்டை சமன் செய்யும் வகையில் அந்தக் கண்ணாடி, திறன் கொண்டிருக்கும். கண்ணாடி அணியாமல் ஒரு பொருளைப் பார்ப்பதற்கும், அணிந்தபின் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்வை குறைந்தவரால் உணர முடியும்.

இன்னொன்று, இயற்கையான விழி லென்ஸை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றிவிட்டு அதற்கு பதிலாக செயற்கை லென்ஸைப் பொருத்துவது. (கண் புரைக்கான சிகிச்சை)

இதையும் படியுங்கள்:
காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதன் சாதக பாதகங்கள்! 
Glaucoma

அறுவை சிகிச்சை என்றால் நான்கு நாள் மருத்துவமனை வாசம், ஒரு மாதம் வீட்டில் ஓய்வு என்றெல்லாம் இல்லை. முன்கூட்டியே செய்யப்படும் சில உடல் பரிசோதனைகளுக்குப் பிறகு, அதிக பட்சம் அரை மணிநேரத்தில் அந்த அறுவை சிகிச்சை முடிந்து விடுகிறது. உடனே புற வெளிச்சம் பாதிக்காத வகையில் கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பிவிடலாம். ஏழெட்டு நாட்களுக்கு தொலைக்காட்சி பார்க்காமல், கண்ணில் நேரடியாக சூரிய வெளிச்சமோ அல்லது வேறு பிரகாசமான ஒளியோ படாமல், பார்த்துக்கொண்டால் போதும். கூடவே மருத்துவர் பரிந்துரைக்கும் சொட்டு மருந்துகளைக் கண்ணில் விட்டுக் கொண்டு, மாத்திரைகளை உட்கொண்டால் போதும். அதிக பட்சம் பதினைந்தே நாட்களில் கண்ணாடி துணையின்றி கிட்டத்திலும், தொலைவிலும் உள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியும். (ஆனால் சாளேஸ்வரம் என்ற வாசிக்கும் வசதிக்குக் கட்டாயமாக, அவரவருக்குத் தேவையான பவர் உள்ள கண்ணாடி அணியத்தான் வேண்டும் என்கிறார்கள், மருத்துவர்கள்.)

இது, முதியவர்களுக்கு வரும் இயல்பான கண் புரைக்கான சிகிச்சை. ஆனால் இருபது, இருபத்தைந்து வயது இளைஞர்களுக்கு கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை கோளாறு இருந்தால், அவர்களும் பார்வையை சரிசெய்யும் லேஸர் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம்; கண்ணாடி அணிய வேண்டாம். 

இதையும் படியுங்கள்:
பொன்னானக் கண்ணே... 10 கண் பாதுகாப்பு பரிந்துரைகள்!
Glaucoma

பார்வைக் கோளாறு அல்லது பார்வை இழப்புக்கு இன்னொரு முக்கிய காரணம், க்ளூகோமா என்ற கண் நீர் அழுத்த நோய்தான்.

எப்படி ரத்த அழுத்தம் ரத்த நாளங்களை பாதித்து இருதயத்தை பலவீனப்படுத்துகிறதோ, அதேபோல, இந்த கண் நீர் அழுத்த நோயும், கண் நரம்புகளை பாதித்து பார்வையையும் பறித்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த நோய் சிலருக்கு இயல்பாகவே உண்டாகும்; சிலருக்கு பரம்பரை நோயாகத் தொற்றிக்கொண்டு வரவும் வாய்ப்பு இருக்கிறது. எந்த வயதினரையும் தாக்கவல்லது இந்த நோய். ஒவ்வொருவருமே முப்பது வயதைக் கடந்துவிட்டால் கண் அழுத்த நோய் தமக்கு இருக்கிறதா என்பதைப் பரிசோதனை செய்து கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். பரம்பரையாக இந்த நோயை சுமந்து வருபவர்கள், நாற்பது வயதைக் கடந்தவர்கள், ஏற்கெனவே கண்ணில் காயம் ஏற்பட்டவர்கள், கடுமையான கிட்டப் பார்வை கோளாறு கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்த உபாதை கொண்டவர்கள், மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் ஆஸ்துமா நோயாளிகள் ஆகியோர் எளிதாக இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.   

உள்ளே இருப்பது தெரியாமலேயே வளர்ந்து, பார்வையைப் பறிக்கும் கொடிய நோய் இது. பார்வை நரம்புகளை பலமிழக்கச் செய்து, பார்வையை மீட்கவே முடியாதபடி செய்யக்கூடியது. இந்தியாவில் இந்தக் கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு கோடியே நாற்பது லட்சம் பேரில் 90 சதவிகிதத்தினர், தாம் அந்த நோயால் பீடிக்கப்பட்டிருப்பதே அறியாமல் இருந்திருக்கிறார்கள்! 

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை செய்துகொண்டால் இந்த அரக்கன் நமக்குள்ளேயே அமர்ந்துகொண்டு நம்மையே வதைப்பதிலிருந்து நாம் விடுபட முடியும், பார்வை இழப்பைத் தவிர்க்க முடியும், அல்லது ஒத்திப் போடமுடியும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com