ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் கோபிசந்த் தோட்டகுரா விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். யார் இந்த கோபிசந்த் மற்றும் இவரது சாதனைகள் என்னென்ன என்பதை விளக்குகிறது இந்தத் தொகுப்பு.
சுற்றுலா செல்வது என்றால் பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் கோடைகாலம் வந்துவிட்டால் போதும், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இவர்கள் மலைப் பகுதிகள், நீர்வீழ்ச்சிகளுக்குத் தான் அதிகமாக செல்வார்கள். ஆனால், இந்தியாவில் ஒருவர் மட்டும் விண்வெளிக்கே சுற்றுலா சென்று வந்துள்ளார். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! ஆம், இந்தியாவின் ஆந்திர மாவட்டத்தைச் சேர்ந்த கோபிசந்த் தோட்டகுரா விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசினுக்குச் சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி நிறுவனம், மனிதர்களை விண்வெளி சுற்றுலாவிற்கு தொடர்ந்து அழைத்துச் செல்கிறது. கடந்த ஆறு முறை விண்வெளி சுற்றுலாவை வெற்றிகரமாக முடித்த இந்நிறுவனம், ஏழாவது முறையாக ஆறு பேர் கொண்ட குழுவை விண்வெளி சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் கோபிசந்த் தோட்டகுராவும் ஒருவராவார்.
விண்வெளி சுற்றுலா செல்ல பெரும் செலவு ஆவதோடு, தைரிய மனப்பான்மையும் வேண்டும். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து, நியூ ஷெப்பர்ட் எனும் விண்கலத்தின் மூலம் ஆறு பேர் கொண்ட குழு, விண்வெளி சுற்றுலாவை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமிக்குத் திரும்பியுள்ளது. உலகமே வியந்து பார்க்கும் இந்த விண்வெளி சுற்றுலா பயணத்தில் கோபிசந்துடன், அமெரிக்காவின் முன்னாள் விமானப்படை கேப்டன் எட் டுவைட், பிரெஞ்ச் கிராஃப்ட் ப்ரூவரின் நிறுவனர் சில்வைன் சிரோன், சர்வதேச முதலீட்டாளர் மேசன் ஏஞ்சல், ஓய்வு பெற்ற கணக்காளர் கரோல் ஷாலர் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியரும் தொழிலதிபருமான கென்னத் எல்.ஹெஸ் ஆகிய 5 பேரும் சென்றனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா தான் கோபிசந்த் தோட்டகுரா அவர்களுக்கு சொந்த ஊர். 30 வயதான இவர், அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஏரோநாட்டிக்கல் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார். இவரது குடும்பத்தில் விமானிகள் உள்ளதால், சிறு வயதில் இருந்தே விமானங்களில் பறப்பது இவருக்கு பிடித்தமான ஒன்று. விமானப் பயணத்தில் அதீத ஆர்வம் கொண்ட கோபிசந்த் தனது எட்டாவது வயதில், கேஎல்எம் என்ற விமானத்தின் காக்பிட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். மேலும், இவர் வணிக ரீதியிலான ஜெட் விமானங்கள் மட்டுமல்லாது, உலக அளவில் மருத்துவ சேவைக்கான ஜெட் விமானங்களையும் இயக்கும் வல்லமை படைத்தவர். இவர் ப்ரிசர்வ் லைஃப் கார்ப் என்ற நிறுவனத்தைத் தொடங்கி வளர்ந்து வரும் தொழிலதிபராகவும் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து விமானங்களை இயக்குவது, ஏரோபாட்டிக்ஸ், புஷ் பைலட்டிங், ஹாட் ஏர் பலூனிங் மற்றும் சீப்ளேன் ஆபரேஷன்ஸ் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்துள்ளார். ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மலையாக கருதப்படும் கிளிமாஞ்சாரோ மலையையும் வெற்றிகரமாக ஏறி சாதனைப் படைத்துள்ளார் கோபிசந்த்.
கடந்த 1984 ஆம் ஆண்டு, இந்தியாவின் இராணுவ விங் கமாண்டராக பணியாற்றிய ராகேஷ் சர்மா முதன்முறையாக விண்வெளிக்குச் சென்றார். இவருக்கு அடுத்ததாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கோபிசந்த் தோட்டகுரா.