

‘திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!’ என்று சொல்லப்படுகிறது. அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்னி சாட்சியாக, அனைத்து உறவுகளும் திரண்டிருக்க, மங்கல நாணை மணமகள் கழுத்தில் மணமகன் பூட்டுவதையே திருமணம் என்றார்கள் நம் முன்னோர்கள். நிச்சயதார்த்த நிகழ்ச்சியை மணமகள் வீட்டில்தான் நடத்துவார்கள். பங்கேற்க வரும் மணமகன் வீட்டார்,’இந்தப் பெண் இனி எங்கள் வீட்டுக்கு உரியவள்!’ என்பதை உணர்த்தும் விதமாக, நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் கழுத்தில் தங்கச் சங்கிலி அணிவிப்பார்கள். வரதட்சணை என்ற வம்பன் வாலாட்ட ஆரம்பித்த பிறகு, அது சற்றே மாறி,‘பொன்னிருந்த இடத்தில் பூவை வை’க்க ஆரம்பித்தார்கள். ஆம்! நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் தலையில் பூவை வைத்து உறுதி செய்து கொள்ளும் வழக்கம் வந்தது.
அப்புறம் அண்டா, குண்டாவிலிருந்து அத்தனையையும் வரதட்சணையாகக் கேட்டு, வாங்கும் பழக்கம் புழக்கத்திற்கு வந்து விட்டது. இன்னுங் கொஞ்ச நாட்களில் ஆகாய விமானம் கூட வரதட்சணை லிஸ்டில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது ஒரு புறமிருக்க, ரெஜிஸ்ட்ரார் ஆபீசில் நண்பர்களின் சாட்சிக் கையெழுத்துடன் மண வாழ்க்கை அமைத்துக் கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
என்ன?ஆணவக் கொலைகளும், அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகளும் மனதை வருத்துவதையும் இங்கு பதிவு செய்தாக வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில்தான் நமது மும்பை மாநகரின் முலுண்ட் (Mulund) பகுதியில் வசிக்கும் பெண் வீட்டாருக்கு மணமகன் ஒருவர், தன் திருமணத்திற்காகப் போட்ட நிபந்தனைகள் செய்திகளில் இடம் பிடித்துள்ளன. புதிதாக ஏதாவது கேட்டு மணமகள் வீட்டாரை ஷாக்கில் உறைய வைத்து விட்டாரோ என்றுதானே பயப்படுகிறீர்கள். என்ன செய்வது? ‘மஞ்சக் காமாலை வந்தவனுக்குப் பார்ப்பதெல்லாம் மஞ்சளாகவே தெரியும்’ என்பதைப்போல, வரதட்சணைக் கொடுமைகளிலேயே நாம் பழகி விட்டதால், அந்தப் பயம் வருவது இயல்புதான்!
ஆனால், இது ரிவர்ஸ்!
எதிர்பாராத அந்த நிபந்தனைகள் ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் அளிப்பவை!
எளிமை, கண்ணியம், பாரம்பரியம், பெருமை இவற்றைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளவை.
அந்த அன்பு மணமகனின் கண்டிஷன்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?
1. திருமணத்திற்கு முன்பாக பெண்-மாப்பிள்ளை இருவரும் பல போஸ்களில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் ‘போட்டோ ஷூட்’ தேவையில்லை. முதல் பாலிலேயே சிக்சர்!
2. மணப்பெண் சேலையணிந்து கண்ணியமாகக் காட்சி தரல் வேண்டும். லெஹங்கா போன்றவை வேண்டாம்.
3. திருமண நிகழ்வின்போது, காதுகளைச் செவிடாக்கும் கனத்த சப்த இசைக்குப் பதிலாக, மெல்லிய, மனம் வருடும் இசையே ஒலிக்கப்பட வேண்டும்.
4. மணமாலை மாற்றிக் கொள்ளும் மகிழ்வான தருணத்தில், மாப்பிள்ளை, பெண்ணைத் தவிர வேறு தேவையற்ற நபர்கள் யாரும் மணமேடையில் இருக்கக் கூடாது.
5. மணப்பெண்ணையோ, மாப்பிள்ளையையோ யாரும் தொடுவதோ, தூக்குவதோ கூடாது. அப்படி யாரும் செய்ய முன்வந்தால், அவர்கள் உடனடியாக மண்டபத்தை விட்டே வெளியேற்றப்பட வேண்டும்.
6. புரோகிதர் மந்திரம் ஓதுகையில் எவரின் குறுக்கீடும் இருக்கக் கூடாது.
7. போட்டோ கிராபர்கள் நடக்கின்ற நிகழ்ச்சிகளை அதன் போக்கிலேயே உஷாராகப் படம் எடுக்க வேண்டும். மீண்டும் போஸ் கொடுக்கும்படி எவரையும் வற்புறுத்தக் கூடாது. நடப்பது புனிதமான மண நிகழ்வுகள். சினிமா ஷூட்டிங் அல்ல, திருப்பித் திருப்பி எடுப்பதற்கு.
8. மணமேடையில் இப்படி, அப்படி என்று கூறி, போட்டோ கிராபர்கள் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
9. மணவிழா காலையிலேயே நடத்தப்பட்டு, அனைத்து உறவினர்களும் மாலைக்குள் பாதுகாப்பாகத் தங்கள் இல்லம் திரும்ப ஏதுவாக நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், தாமதமாக இரவு உணவு சாப்பிடுவதால் ஏற்படும் அஜீரணச் சிரமங்கள் தவிர்க்கப்படும்.
10. மணமேடையில், பலர் முன்னிலையில் மாப்பிள்ளை -பெண்ணைக் கட்டிப் பிடிக்கச்சொல்லியோ, முத்தம் கொடுக்கச் சொல்லியோ யாராவது சொன்னால், அந்த அநாகரீக நபர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.
இப்படி மாப்பிள்ளை போட்ட அத்தனை கண்டிஷன்களையும் மணவீட்டார் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்களாம். என்ன? மணமகனின் அத்தனை கோரிக்கைகளும் நமது பாரம்பரியத் திருமணங்களில் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டவைதான்!
திருமணத்திற்குக் காத்திருக்கும் இளஞ்ஜோடிகளே! அந்த மாப்பிள்ளை போல் நீங்களும் இவற்றையெல்லாம் பின்பற்றி உங்கள் மண வாழ்க்கையை மகிழ்வாக அமைத்துக் கொள்ளுங்களேன்.
நீங்கள் வேண்டுமானால் மேலும் ஒன்றைப் புதிதாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். அது என்ன என்கிறீர்களா? ‘வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் இல்லை’ என்பதுதான்!
அப்புறமென்ன? கெட்டி மேளம்! கெட்டி மேளம்!