காசுக்கு பாதி; கூழுக்கு மீதி! இந்தக் கதை தெரியுமா?

காசுக்கு பாதி; கூழுக்கு மீதி! இந்தக் கதை தெரியுமா?

காசுக்கும்; கூழுக்கும் பாடலா...? ஆமாம்... வியப்பாக இருக்கிறதா? இதன் விபரம்:

பண்டைய காலத்தில் சோழ வள நாட்டில் வசித்து வந்த சிலம்பி எனும் அழகிய தாசி ஒருவருக்கு தமிழ் மீது மிகவும் பற்று இருந்தது. கவி கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற பெரிய புலவர்களிடமிருந்து தமிழ்ப் பாடலொன்றை எழுதி வாங்கிவிட வேண்டுமென்கிற ஆசை நெடுநாளாக சிலம்பி மனதில் இருந்து வந்தது. அவர்கள் எங்கே இங்கேயெல்லாம் வரப் போகிறார்களென எண்ணிய சமயம், கவி கம்பர், சோழ மன்னனிடம் ஏற்பட்ட சிறு சண்டை காரணமாக, வெளியே வந்து ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தார். ஒருநாள் சிலம்பி வசிக்கும் ஊருக்கு வந்தவர் இரவுப் பொழுதைக் கழிக்க வேண்டி, காலியாக இருந்த சிலம்பியின் வீட்டுத் திண்ணையில் படுத்தார்.

எதேச்சையாக வெளியே வந்த சிலம்பி அவரைப் பார்த்து அடையாளம் கண்டு உணவளித்து பின்னர் உள்ளே வந்து படுக்குமாறு கேட்டுக்கொண்டாள். கம்பருக்கு உள்ளே சென்று படுக்க ஒரு மாதிரியாக இருந்ததால், திண்ணையிலேயே படுக்கிறேன் என்றார்.

அச்சமயம் சிலம்பி, “ஐயா! எனக்காக ஒரு பாடல் தங்களின் திருக்கரங்களால் எழுதித் தாருங்கள். எவ்வளவு சன்மானம் கொடுக்க வேண்டும்?” எனக் கேட்க,,

அவரோ, “பாடல் ஒன்றுக்கு நூறு பொற்காசுகள்” என்றார்.

“ஐயா! என்னிடம் 50 பொற்காசுகளே உள்ளன. நீங்கள் பாதிப்பாடலை எழுதித் தாருங்கள். மீதிப் பாடலை, பணம் சேர்ந்தபிறகு உங்களிடம் கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்” என சிலம்பி வேண்டினாள்.

கம்பர் சற்று மனமிளகி “நீ எனக்கு சாப்பாடு அளித்து தங்க இடம் கொடுத்தால், மீதிப் பாடலையும் எழுதி விடுகிறேன்”

“வேண்டாம் ஐயா! யாசகமாக யாரிடமும் நான் பெற மாட்டேன். மீதிக் காசைக் கொடுத்துத்தான் பெறுவேன்... பாதிப்பாடலை மட்டும் எழுதினால் போதும்” என்றாள் சிலம்பி. பாதிப் பாடலை சுவரிலே எழுதிய கம்பரும், மறுநாள் காலையில் எழுந்து சென்றுவிட்டார்.

சிலம்பி, அவர் எழுதிய வரிகளை தினமும் படித்துக் கொண்டிருந்தாள்.

சில நாட்கள் சென்று, ஒளவையார் அதே ஊருக்கு இரவு நேரம் வருகையில், எல்லார் வீடுகளிலும் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, சிலம்பி வீட்டில் மட்டும் விளக்கெரிந்து கொண்டிருந்தது.

இதையும் படியுங்கள்:
கோடைக்கால அலர்ஜிகளுக்கு குட்பை சொல்லுங்கள்!
காசுக்கு பாதி; கூழுக்கு மீதி! இந்தக் கதை தெரியுமா?

ஒளவையார் அங்கே செல்ல, சிலம்பி அவரை வரவேற்று சூடான களிக்கூழினை அன்புடன் சாப்பிட அளித்து உபசரித்தாள். பசியாறிய ஒளவை, தற்செயலாக சுவரைப் பார்க்கையில், அரைகுறையாக ஒரு பாடல் எழுதி இருப்பதைக் கண்டு, சிலம்பியிடம் விபரம் கேட்க, அவளும் சொல்ல, நடந்தது தெரிய வந்தது.

“கம்பர் மாதிரி  நான் பெரிய கவி இல்லை. நிறைய பணம் எல்லாம் கேட்க மாட்டேன். நீ பசிக்களித்த களிக்கூழ் ஆயிரம் பொன்னிற்கு சமம். பாடல் அரைகுறையாக உள்ளது. கம்பரின் பாடலுக்கு இசைப்பாட்டு எழுதி நிறைவு செய்கிறேன்” என ஒளவை கூற, சரி என்று தலை அசைத்தாள் சிலம்பி.

ம்பர் எழுதிய பாடலின் இரு வரிகள் (பாதிப் பாடல்)

தண்ணீரும் காவிரியே! தார் வேந்தன் சோழனே!

மண்ணாவதும் சோழ மண்டலமே!

ஔவையாரின் ஈற்றடிகள்

..... பொன்னாவாள்

அம்பர்ச் சிலம்பி! அரவிந்தத்தாள் அணியும்

செம்பொன் சிலம்பே சிலம்பு!

முழுப் பாடலின் பொருள்

* தண்ணீரென்றால் காவிரி நீர்தான்.

* நல்ல மன்னனென்றால் கொன்றை மாலையணியும் சோழனே!

* நல்ல நாடென்றால் சோழ மண்டலமே!

சிறந்த பெண்ணென்றால் அம்பர் எனும் ஊரில் வாழும் சிலம்பியே!

சிறந்த பெண் சிலம்பி!

செம்பொன்னாலான சிலம்பே (கொலுசே)!

காசு வாங்கி எழுதிய கம்பரின் பாடல் பாதி; கூழ் குடித்து எழுதிய ஔவையின் இசைப்பாடல் மீதி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com