தமிழ் திரைத்துறையின் 'சகலகலா வல்லவன்' - 'கமர்ஷியல் கிங்' எஸ் பி முத்துராமன்!

ஏப்ரல் 7 எஸ் பி முத்துராமன் அவர்கள் 90வது பிறந்த நாள்.
Happy Birthday to S.P. Muthuraman!
Happy Birthday to S.P. Muthuraman!Image credit: cinemapettai.com
Published on

ந்தியத் திரையுலகில், மறக்க முடியாத தென்னிந்திய நடிகர்களில் கமல், ரஜினி இருவரும் முன்னணியில் இருப்பவர்கள். இவர்கள் மனதில் மறக்கமுடியாத இடத்தைப் பிடித்திருப்பவர் இயக்குனர் எஸ் .பி. முத்துராமன்.

சில வருடங்களுக்கு முன், எஸ் பி முத்துராமன் அவர்கள் சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியது அனைவரும் இன்று கண்களை கலங்க வைத்து சிந்திக்க வைத்தது.  "நான் திரைத்துறையில் பெரும் வெற்றிகரமான இயக்குனராக இருந்தபோதும் என் மனைவியை மகிழ்விக்க மறந்துவிட்டேன்" என்றும், "காலம் பொன் போன்றது சென்றால் வராது... தயவுசெய்து மனைவி இருக்கும்போதே அவரிடம் அன்பு செலுத்துங்கள். மனைவி மறைந்துவிட்ட நிலையில் அதை இப்போது நான் அணுஅணுவாக உணர்கிறேன். ஆனால் என்ன பயன்?" என்றும் குறிப்பிட்டார்.

அவரது 90வது பிறந்தநாளான இன்று (07-04-2025) சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்த அவரை நான் சந்தித்து ஆசிகள் பெற்றபோது, மேற்படி அவர் சொன்னதை நினைவுகூர, நெகிழ்ந்து போனேன்.

காரைக்குடியை பிறப்பிடமாகக் கொண்ட சுப. முத்துராமன் திரைத்துறை மீது கொண்ட ஆர்வத்துடன் ஏவிஎம் நிறுவனத்தில் எடிட்டராகவும் இயக்குனர் பணியிலும் பயிற்சியுடன் ஈடுபட்டு அந்நிறுவனத்தின் ஆஸ்தான  உதவி இயக்குனர் ஆனவர்.

எஸ் பி முத்துராமனுடன் சேலம் சுபா
எஸ் பி முத்துராமனுடன் சேலம் சுபா

குழந்தை நட்சத்திரமாக கமல் அறிமுகமாகிய களத்தூர் கண்ணம்மாவில் உதவி இயக்குனராக பணியாற்றி, பின் சிறந்த இயக்குனர் அடைமொழியுடன் பெரும் வெற்றிப் படங்களைத் தந்தவர்.

1972 ல் தயாரிப்பாளர் குகநாதன் தந்த வாய்ப்புதான் இவர் இயக்கத்தில் வெளிவந்த  முதல் படமான 'கனிமுத்து பாப்பா'. அடுத்து இயக்கிய 'பெத்த மனம் பித்து' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

உதவி இயக்குநர், படத்தொகுப்பு பணி, புரொடக்‌ஷன் என ஒரு திரைப்படத்தின் சகல பணிகளிலும் ஈடுபட்டு திரைத்துறையின் நெளிவு சுளிவுகளைக் கற்று  இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் வசூலைக் குவித்ததால் 'கமர்ஷியல் கிங்'காக வலம் வந்தவர். ஆம். இவர்  இயக்கிய சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் 90 சதவீதம் படங்கள் வணிக வெற்றியை பெற்றது சாதனை.

கமலைத் தூக்கிக் கொஞ்சி நடிப்பு கற்றுத்தந்த பெருமைக்குரிய இவர், இயக்குனர் பாலச்சந்தரின் கண்டுபிடிப்பான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திறமைக்கேற்ற வேடங்களைத் தந்து அவரின் நடிப்புத் திறமையை பட்டை தீட்டி திரையுலக வானில் மின்னவைத்தவர் என்ற பெருமையையும் கொண்டவர்.

கமர்ஷியல் படங்களைத் தந்த இவர், சிறந்த எழுத்தாளர்களின் கதைகளுக்கும் மதிப்பு தந்தவர். எழுத்தாளர் புஷ்பா தங்கதுரையின் 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' நாவலை அதே பெயரில் கமலை வைத்து இயக்கி சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றார்.

புவனா ஒரு கேள்விக்குறி
புவனா ஒரு கேள்விக்குறி

வில்லனாக பார்த்த ரஜினியின் திரை வாழ்வுக்கு திருப்பு முனை தந்த படம் 'புவனா ஒரு கேள்விக்குறி'. இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் படமான இது,  எழுத்தாளர் மகரிஷி எழுதிய  நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்தப் படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் என இரு ஃபிலிம்பேர் விருதுகளை வென்றது.

எழுத்தாளர் சுஜாதாவின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் 1978-ல் வெளிவந்த 'ப்ரியா'. ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் தமிழ், கன்னடத்தில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு பிறகு தெலுங்கிலும், இந்தியிலும் 'டப்' செய்து வெளியிடப்பட்ட சிறப்புக்குரியது. மேலும் இளையராஜாவின் 50-வது படமான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

1990 ஆம் ஆண்டு வெளிவந்த 'தியாகு', சிவசங்கரி எழுதிய 'ஒரு மனிதனின் கதை' நாவலை அடிப்படையாக்கி எடுக்கப்பட்ட 'மது' குறித்த விழிப்புணர்வு படம்.  வணிக ரீதியாக தோல்வி என்றாலும் படம் பலவித விமர்சனங்களை சந்தித்து அனைவரையும் பேச வைத்தது. ரகுவரன் எனும் அற்புதக் கலைஞனை வெளிக்காட்டியது.

ரஜினிக்கும் முத்துராமனுக்கும் இடையே தொடர்ந்த நீண்டகால நட்பில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ரஜினி நடிப்பில் இவர் இயக்கிய  திரைப்படங்கள் மக்களை மகிழ்வித்தன. குறிப்பாக ரஜினிகாந்த் எனும் ஸ்டைல் நடிகரின் உள் அற்புதமான குணச்சித்திர நடிகரும் இருந்ததை நிரூபித்தது எனலாம்.  சான்றாக ரஜினியின் முதிர்ந்த நடிப்பில் வெளிவந்த 'ஆறிலிருந்து அறுபது வரை' படத்துக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருது ரஜினிக்கும், சிறந்த இயக்குனர் விருது முத்துராமனுக்கும் கிடைத்ததை குறிப்பிடலாம்.

இயக்குனர் பாலசந்தர் ஒருமுறை, 'சிவாஜிராவ் என்ற வைரத்தை கண்டு பிடித்தேன். ரஜினிகாந்த் என்று பெயர் வைத்து சினிமாவில் அறிமுகப்படுத்தினேன். என்னைவிட முத்துராமன் சார்தான் ரஜினிக்கு பலவிதமான கதாபாத்திரங்கள் தந்து அந்த வைரத்தை பட்டைத் தீட்டினார்' என்று குறிப்பிட்டதாக செய்திகள் உண்டு.

சகலகலாவல்லவன்
சகலகலாவல்லவன்

1982-ல் ஏவிஎம் நிறுவனம் சார்பில் இவர்  இயக்கிய கமலின் 'சகலகலா வல்லவன்' படம் அதுவரை தமிழில் வெளியான அனைத்துப் படங்களின் வசூல் சாதனையையும் உடைத்ததுடன் 1989 வரை அந்த சாதனையை பிற படங்களால் முறியடிக்க முடியவில்லை என்பது சிறப்பு.

ஒரு நாளைக்கு 18 மணிநேரம் பணி செய்து 'செய்யும் தொழிலே தெய்வம்' என்று உழைப்பின் முகவரியாக விளங்கிய எஸ் பி எம் அவர்கள் சொன்னது இது. "காலம் உயிர் போன்றது; சென்றால் வராது".

இவரது அயராத உழைப்பின் பலனாக கிடைத்த பெருவெற்றிகளுக்கு பின்னணியில் இருந்த தன் மனைவி கமலாவுடன் நேரங்களைக் கழிக்க முடியாமல் போனதற்காக வருந்தினாலும் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றிய மனைவியின் பெருமைகளை இன்றளவும் நினைவு  கூர்கிறார் இந்தப் பண்பாளர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: யாருக்காக அழுகிறான் அவன்?
Happy Birthday to S.P. Muthuraman!

ஏவி.எம்-மில் இருந்ததால் பெரும்பாலான இயக்குனர்களிடம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருந்தாலும் இவர் அதிகம் பணியாற்றிய இயக்குனர் திருலோகசந்தர்தான் குரு என்கிறார்.

எளிதாக கெடக்கூடிய திரையுலகில் எவ்வித கெட்ட பழக்கங்களும் இன்றி தான் எனும் அகந்தை  இல்லாமல் 'சினிமா என்பது ஒரு கூட்டுமுயற்சி' என்ற எண்ணத்துடன் அனைவருடனும் இணைந்து அனுசரித்து அன்புடன் பழகிய குணமே இவரின் வெற்றிக்கு அடிப்படை.

'கனிமுத்துப் பாப்பா'வில் துவங்கி 'தொட்டில் குழந்தை'யில் முடிந்த இவரின் வெள்ளித்திரை இயக்குனர் அவதாரம் சின்னத்திரையிலும் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அகவை கூடினாலும் உற்சாக இளைஞராக வலம் வரும் இவர் வெற்றிபெற நினைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பது திரையுலகின் பெருமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com