HBD Illayaraja Sir! இசை(விஞ்)ஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Ilayaraja Birthday
Ilayaraja Birthday

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் ராமசாமி ஐயாவுக்கும், சின்னத்தாய் அம்மாளுக்கும் பிறந்த ராசையா அட... நம்ம இசைஞானி இளையராஜா சார்க்கு (ஜூன் 03) அழகான 81வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

எத்தனையோ மதிப்புமிக்க ரத்தினங்களை இசைஞானி போகிறபோக்கில் நமக்கு அளித்துள்ளார். இவர் இசை மட்டும் தெரிந்த வெறும் ஞானி அல்ல... இசை ரசிகர்களின் மன மெல்டிங் பாயின்ட்-ம் தெரிந்த இசை ‘விஞ்ஞானி.’

ஆர்மோனியம் இவர் விரல்பட்டு குழையும்… நெகிழும்… வளையும்.

இதயத்திற்கு நெருக்கமான இசை இவரால் மட்டுமே சாத்தியம்.

துள்ளல் இசை, மென் சோகம், ஒரு தலை காதல், விரகதாபம் உற்சாகம், நெருக்கம், அந்நியோன்யம், தெய்வீகம்...

இப்படி எல்லாவித உணர்வுகளையும் அவர் இசையில், அவர் இசையில் அவர் பாடிய பாடல்களைக் கேட்டால் நமக்குப் புரியும்.

'ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தப்பக்கம் குருவிக்கூடு
ஆண் குருவிதான் இரையைத் தேடி போயிருந்தது
பெண் குருவிதான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது
வீட்டைத் தேடி ஆண் குருவிதான் வந்து சேர்ந்தது
கூட்டுக்குள்ளே குருவி ரெண்டும் ஒண்ணா சேர்ந்தது'... இதயக் கோயிலில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல் துள்ளல் இசைகானம். நம்மை அறியாமல் தாளமிட வைக்கும் தனித்தன்மை கொண்ட கிராமிய பாடல். (மேற்கத்திய இசைக் கோர்வை ராஜா சாரால் மட்டுமே சாத்தியம்.)

'துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு சொல்லி கொடுத்தது காற்று உறவோடுதான்..'
ஒருதலைக் காதலை இதைவிட வேறு ஒரு பாடலில் சொல்லிவிட முடியுமா?! இசைக்காகவே படைக்கப்பட்ட ஒரு மனித கடவுள் 

'ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்'

‘கீதாஞ்சலி’ என்ற படத்தில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடலை யாராவது பிடிக்கவில்லை என்று சொல்வார்களா? ராஜ தேவனின் தாலாட்டு. ஆயிரம் கவலைகள் இருந்தாலும் அன்பின் தாலாட்டுப் போல இந்தப் பாடலும் இசையும்! (அன்று முதல் இன்று வரை உன்னை எண்ணியே வாழ்கிறோம்...ஐயா)

'வாட(டை) வாட்டுது
ஒரு போர்வை கேக்குது இது ராத்திரி நேரமடி..
'சக்களத்தி’ என்ற படத்தில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடல் ஒரு கணவனின் தவிப்பை / தாபத்தை அழகாக உணர்த்தும்.
இரவில் அமைதியாக இந்தப் பாடலைக் கேட்க மனம் அமைதியாய் நம்மை ஆசிர்வதிக்கும்.

'தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல!'
எத்தனை பிரச்னைகள் நம்மை சூறாவளிபோல் தாக்கினாலும் இந்தப் பாடலைக் கேட்க மனம் அமைதி நிலையை எட்டும். அட போப்பா... இதெல்லாம் ஒரு பிரச்னையா? அப்படின்னு ஜஸ்ட் லைக் தட் நம் வேலையை மகிழ்ச்சியாக பார்க்கவைக்கும் சர்வ வல்லமை பெற்ற பாடல்.

"காதல் ஓவியம்
பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை
நம் ராஜ்ஜியம்
என்றென்றும் ஆனந்தம் பேரின்பம்'
அலைகள் ஓய்வதில்லை போல நம் நெஞ்சுக்குள் ஞானிபாடிய பாடல்கள் என்றுமே ஓயாது! ஓயாது!

'சின்னப்பொண்ணு சேல
செண்பகப்பூ போல
இங்கே மாராப்பு
மயிலே நீ போ வேணாம் வீராப்பு.'

மலையூர் மம்பட்டியான் இந்தப் பாடலைப்பாடும்போது கல்லுக்குள் ஈரம் கசிவது தெரியும்; புரியும்!

'நிலா அது வானத்து மேலே' ...இந்தப் பாடலை பிடிக்கலைன்னு சொல்றவங்க யாராவது இருப்பாங்களா? பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய பாடல்

'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' ‘கவிக்குயிலி’ல் அவர் பாடிய பாடலைக் கேட்டு குயில்கள் எல்லாம் மெய் மறந்தன. கண்ணை மூடிய நிலையில் இந்தப் பாடலைக் கேட்க ஆத்மா வெளியில் போய் விட்டு உள்ளே வரும்.

‘அந்த நிலாவத்தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக'… உயிரைத் தீண்டும் காதல்.

’அடி ஆத்தாடி இள மனசொன்னு
றெக்ககட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து அடிக்குது மனசுக்குள்ள சரிதானா!' எண்பதுகளில் காதலர்களின் ஃபேவரைட்!

‘எங்கே செல்லும் எந்தன் பாதை’
‘சேது’ படத்தில் பாடியிருப்பது நாம் நம்மையே கேள்வி கேட்க வல்லது. கல்லையும் கரைக்க வல்லது.

இதையும் படியுங்கள்:
பாகுபாட்டுக்கு ஆளாகும் பெண்கள்: நவீன உலகில் சமத்துவம் நிலைக்குமா?
Ilayaraja Birthday

‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் போவோம்
இனி காதல் தேசம்"
‘தர்மபத்தினி’ படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலில்.. இசையும், குரலும் அமுதும், தேனும்போல் ஒட்டியே இருக்கும். ராஜா சார் மனம் லயித்து பாடியிருப்பார் 

'தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே என் மனம் ஏனோ சாயுதே' அறுவடை நாளில் வந்த இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் ஞானியின் ஆலாபனை குரலுக்காகவே பாடலைக் கேட்டது ஒரு சுகம்.

உங்கள் இசை மட்டுமல்ல...
உங்கள் குரலும் எங்களை உள்ளே உள்ளே எங்கோ கூட்டிச் செல்லும். உங்கள் குரலை உணரத்தான் முடியும். விவரிக்க வார்த்தை இல்லை.

இவ்வளவு பாடல்கள் சொல்லிவிட்டு...

‘ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ...’ இந்தப் பாடலை சொல்லாமல் விடுவதா!?

‘ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் விடை வாகனமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே...’

மனதை மயக்கும் தேனிசை. தெய்வீகம் கமழும் பாடல். கர்நாடக இசையில் பட்டையைக் கிளப்பிய பாடல்.

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இசைஞானியின் இந்த இசையை எங்கோ ஒரு இடத்தில் யாரோ ஒருவன் ஏதோ ஒரு வாத்தியத்தில் வாசித்துக்கொண்டுதான் இருப்பான். அதைக்கேட்டு மானுடம் மட்டுமல்ல மரமும், செடியும் கூட மயங்கி கொண்டுதான் இருக்கும்.

கடவுள் இசையை அவர் உருவத்தில் படைத்திருக்கிறார்.

இதயத்திற்கு நெருக்கமான இசையைத் தரும் நீங்கள் இன்னும் நூறு வருஷம் நல்லா இருக்கணும் சார். கண்டிப்பாக நன்றாக இருப்பீர்கள்...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com