1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் நாள். தூத்துக்குடியில் உள்ள வல்லநாட்டில் பிறந்தவர் ‘கலைமாமணி’ டெல்லி கணேஷ் அவர்கள். எளிமையானவர். வாசிப்பை நேசமாகக் கொண்டவர். ஆரவாரமில்லாத சற்று அடக்கமாக, அதே நேரம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடிப்பாற்றலைக் கொண்டவர். இயல்பான நடிப்புக்குச் சொந்தக்காரர். டப்பிங் கலைஞர். தனக்கு எந்த வேடம் வழங்கப்படுகிறதோ அந்தப் பாத்திரத்துக்குள் தன்னை பிசகின்றி அச்சு அசலாக பொருத்திக்கொள்ளக் கூடியவர்.
தனது முதல் படத்திலேயே (1977 - பட்டினப்பிரவேசம்) கனமான பாத்திரத்தை ஏற்று நடித்து, தொடர்ந்து பல படங்களில்... நல்ல, தீய, கொடூரமான, உன்னதமான பலவித கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டியவர். அவரின் ஒரு சில படங்களை (12) நினைவு கூறுதல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல...
* ‘சிந்து பைரவி’ - குடிப்பழக்கத்துக்கு அடிமையான மிருதங்க கலைஞர் குருமூர்த்தியாக...
* ‘சிதம்பர ரகசியம்' சஸ்பென்ஸ் உடையும் வரை நல்லவராக தோற்றமளிக்கும் கறுப்பு பூனையாக...
* தேசிய விருது பெற்ற 'பசி' திரைப்படத்தில் ஷோபாவின் தந்தையாக, விளிம்பு நிலை மனிதராக (சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவராக) தன்னை முழுவதுமாக அழித்து வேறொரு புதிய மனிதராக...
* ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் பொறுப்பற்ற, குற்ற உணர்வு மிக்க தந்தையாக. உணர்வுபூர்வமாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
* ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படம் பாலக்காட்டு தமிழ் பேசி நகைச்சுவையில் பட்டையை கிளப்பியது… (அதிலும் சாம்பாரில் விழுந்த ஒற்றை மீனை வைத்துக்கொண்டும், வெற்றிலை பெட்டியை கையில் வைத்துக்கொண்டும் இவரும் கமலும் சேர்ந்து கொதிக்க கொதிக்க சிரிக்க வைத்த லூட்டியை மறக்க முடியுமா?)
* ‘நாயகனி’ன் மும்பை தாராவியில் வாழும் தமிழராக… வேலு நாயக்கரின் இந்தி மொழிபெயர்ப்பாளராக… பவ்யமாக (அந்தக் கதாபாத்திரத்தை இவரை தவிர வேறு யாராலும் செய்திருக்க முடியாது)
* 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' மகனுக்கு செலவழித்த பணத்தை வருடக்கணக்காக டைரி போட்டு கணக்கெழுதும் நடுத்தரவர்க தகப்பனாக...
* ‘பெண்மணி அவள் கண்மணியில்’ மருமகள் தன் மனைவி மேல் வைக்கும் திருட்டு பட்டத்தை தான் செய்ததாக ஒத்துக்கொண்டு வெளியேறி "என் பொண்டாட்டியை வீட்டில் இருக்கிறாப்ல நான் செஞ்சுட்டேன் ஹாஹாஹா"ன்னு ஒருசிரிப்பு சிரிப்பார் பாருங்கள். நடிப்பின் இலக்கணமாகவே மாறி இருப்பார் அந்தச் சிரிப்பு ஏழ்மையின் கெக்களிப்பு
* ‘அவ்வை சண்முகி’ காதில் பூ வைத்துக்கொண்டு, ஷண்முகி மாமியை பாலோ பண்ணும் சுயநலமும் குயுக்தியும் நிறைந்த நபராக…
* ‘ராகவேந்திரா’ திரைப்படத்தில் அப்பண்ண சாமியாக வாழ்ந்திருப்பார்.
* ‘நேர்கொண்ட பார்வை’யில் ஸ்வேதாவின் தந்தையாக ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மகளின் கையறு நிலையை மாற்ற எதுவும் செய்ய முடியாத தந்தையின் தவிப்பை வசனமே இல்லாமல் மிகக் கச்சிதமாக வெளிப்படுத்தி இருப்பது... மேதமைக் காட்சி.
*1989 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் அதில் பிரான்சிஸ் அன்பரசு என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அதகளம் பண்ணி இருப்பார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமாகவே அச்சு அசலாக பிரதிபலிப்பதுதான் அவரின் ஸ்பெஷாலிட்டி.
ஏழ்மை, இயலாமை, குற்ற உணர்வின் பலவீனம் அறியாமை, வெகுளித்தனம், நடுத்தர வர்க்கத்தின் பிடிவாதம், விசுவாசத்தின் அடிப்படையிலான கண்மூடித்தனமான பற்றுதல் கோழைத்தனம், சார்ந்திருத்தலின் மனநடுக்கம்... இப்படி மனித வாழ்வின் எதார்த்தங்கள் பலவற்றை அனாயசமாக திரையில் மிளிரச் செய்த கலைமாமணி ‘டெல்லி கணேஷ்’ அவர்களின் பிறந்த தினம் இன்று. அகவை 80ல் அடியெடுத்து வைக்கும் அவரை வாழ்வாங்கு வாழ மென்மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துகிறது கல்கி குழுமம்.