Heart attack...
Heart attack...Image credit - pixabay.com

நேர்காணல்: இதய நோய் ஏன் வருகிறது?

தயம் தொடர்பான நோய்களும் மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களும் உலக அளவில் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியர்களைப் பொறுத்தவரை, நமது வாழ்வியல் முறைகளைப் பொறுத்தவரை இதய நோய்ப் பிரச்னைகளுக்கு என்ன காரணம்? அதைத் தடுக்க முடியுமா? எப்படி முன்னெச்சரிக்கையுடன் இருப்பது?

இப்படிப் பல கேள்விகளோடு மருத்துவர் S. நாகராஜன் அவர்களை அணுகினோம். (S.Nagarajan MS.MCh ,- cardiothoracic surgeon (retd) Madras Medical College) சென்னை மருத்துவக் கல்லூரியின் இதய நோய் மருத்துவர், நிபுணர். சிறப்பான பதில்களை முன் வைத்தார் அவர்.

மருத்துவர் S.நாகராஜன்
மருத்துவர் S.நாகராஜன்
Q

எந்த வயதில் இதய நோய் வர வாய்ப்புள்ளது டாக்டர்?

A

பிறந்த குழந்தையிலிருந்து முதியவர் வரை யாருக்கு வேண்டுமானாலும் இதய நோய் வரலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பு இருக்கும்.

முதலில் பிறவிக் குறைபாட்டைப் பார்க்கலாம். இந்தியாவில் வருடத்திற்கு இரண்டு லட்சம் குழந்தைகள், இதயக் கோளாறுகளுடன் பிறக்கின்றன. குறிப்பாக பீகாரிலும், உத்திரப் பிரதேசத்திலும் விகிதாசாரம் கொஞ்சம் அதிகம்.

கான்ஜெனிடல் இதய நோய் (congenital heart disease) என்னும் பிறப்பில் வரும் இதயக் குறைபாடுகளுக்கு பல காரணங்கள் உள்ளன.

நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் செய்வது, கரு உருவான முதல் மூன்று மாதத்துக்குள் தாய்க்கு ஏதேனும் நோய் வருவது, அதற்காக தாய், சில தடுக்கப்பட்ட மருந்துகளை எடுப்பது போன்றவை முக்கிய காரணங்களாகின்றன.

சிசுவுக்கு இதயம் உருவாகும்போதே சில தவறுகள் ஏற்பட்டு, இதய சுவர்களில் ஓட்டையோ, நுரையீரல் தமனி போன்ற ரத்தக் குழாய்களின் வால்வுகளில் அடைப்போ அல்லது, பல சிக்கல்கள் ஒன்றாக ஏற்பட்டு வரும் (complex anomaly) பாதிப்பாகவோ இருக்கலாம். எனவே சொந்தத்தில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

மேலும், முதல் 12 வாரங்கள் தாய் எந்த மருந்து என்றாலும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு உட்கொள்வது அவசியம்.

குழந்தை கருவில் இருக்கும்போதே இதய பாதிப்புக்களை ஃபீடல் ஸ்கேனர் (fetal scan) மூலம் கண்டறிய முடிகிறது. கர்ப்ப காலத்தில், மருத்துவர்கள் பெரும்பாலும் குழந்தையின் வளர்ச்சியை சரிபார்க்க டாப்ளர் ஸ்கேன் (doppler scan) எடுக்க அறிவுறுத்துகின்றனர். நம் ஊரில் பல பெண்கள் இன்னும் இந்த கர்ப்ப கால ஸ்கேன் பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை.

Q

கர்ப்பத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், பின்னாளில் கரு உருவாகும்போது இதய பாதிப்பு வருமா டாக்டர்?

A

வராது. ஆனல் குழந்தை உண்டான பிறகு, தெரியாமல் இத்தகைய மாத்திரைகள் உட்கொண்டால் கருவுக்கு பாதிப்பு வர வாய்ப்பு உண்டு.

Q

பிறந்தபோது இதயம் சரியாக இருந்து பின்னர் இளம் வயதிலேயே சிலருக்கு பாதிப்பு வருகிறதே...?

A

இதயத்தில் நான்கு வால்வுகள் உள்ளன என்பது நமக்குத் தெரியும். அயோர்டிக்(aortic valve), மிட்ரல்(mitral valve), ட்ரைகஸ்பிட் (tricuspid valve), மற்றும் பல்மனரி( pulmonary valve). சிறு வயதில் இவை பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் பிரதானமானது  ருமாடிக் ஜுரம் என்னும் முடக்கு வாதம் (Rheumatic fever).

இதனால் வரும் இதய நோய் (Rheumatic heart disease (RHD)), உலக அளவில் 40 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் மூன்று லட்சம் பேர் இதனால் இறந்துபோகிறார்கள்.

இது, ஸ்ட்ரெப்டோ காக்கஸ் என்ற வைரஸ் காரணமாக  (streptococcus)  தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு, அதனால் உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.

இந்நோய்பொதுவாக இதயம், மூட்டுக்கள், சருமம் மற்றும் மனித மூளையைப் பாதிக்க கூடியது. ருமாடிக் ஜுரம் வந்தால் முட்டிகள் வீங்கி வலி மற்றும் ஜுரம் வரும்.

சாதாரண வலி என்று சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது சில சமயம் இதய பாதிப்பு தெரியாமல் போய்விடும். நமது நாட்டில் சிறு வயது இதய பாதிப்புக்கு இந்த ஜுரமே அனேகமாக  காரணமாகிறது.

மூச்சுத் திணறல், மயக்கம், படபடப்பு போன்றவை ஏற்பட்டால், எக்கோ கார்டியோகிராமில் தெரிந்துவிடும்.

தொண்டையில் இந்தக் கிருமிகளின் பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீரை காய்ச்சிக் குடிப்பது அவசியம்.

குழந்தைகள் சாக்லேட் பிஸ்கட் சாப்பிட்டால் உப்பு போட்டு வாய்க் கொப்பளிக்கச் செய்ய வேண்டும். கூடுமானவரை, குளிர் சாதனப் பெட்டியில் வைத்த ஜூஸ் போன்றவற்றை குழந்தைகளுக்குத் தருவதைத் தவிர்த்தல் நல்லது.

மாற்று வால்வு பொருத்தும் அறுவைச் சிகிச்சை பயன் தரும் என்றாலும்  செலவு அதிகமாகும்.

 

வால்வு ...
வால்வு ...Image credit - pixabay.com
Q

நடுத்தர வயதில் எத்தகைய இதய நோய் வரும்?

A

40 வயதுக்கு மேல் வரும் மாரடைப்பு, இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது வருவது. ரத்தக் குழாய்கள்தாம் அனைத்து உறுப்புக் களுக்கும் ஆக்ஸிஜனும் குளுகோசும் எடுத்துச் சென்று, எரி பொருளாக மாறி அவை இயங்கும் சக்தியைத் தருகின்றன.

மற்ற உறுப்புகளில் பல ரத்தக் குழாய்கள் இணைந்திருப்பது போல இதயத்தில் இல்லை. இங்குள்ள கரோனரி ஆர்டரி ரத்தக் குழாய்கள் மூன்றுமே, ஒன்றுக்கொன்று இணைப்பு இல்லாதவை. எந்த உறுப்புக்கு அவை செல்கிறதோ அங்கு ரத்தம் செல்லாமல் அந்த உறுப்பு வேலை செய்யாமல் நின்றுவிடும்.

இதற்கு முக்கியமான காரணம் நமது உணவுப் பழக்கம்.

சர்க்கரை, ரத்த அழுத்தம், மன அழுத்தம் அதிக வேலைப் பளு, அதிக உடல் எடை, போன்றவை இதய நோய் ஏற்பட பெரும்பாலும் காரணமாகின்றன.

சரியான தூக்கமின்மையும் நோய் வரக் காரணமாகிறது.

இடது கையில், அல்லது இடது தோள் பகுதியில் வலி வந்தால் மருத்துவரிடம் செல்வது அவசியம். இதய பாதிப்பாக இருக்கலாம். வலியே இல்லாமலும் மாரடைப்பு வரலாம்.

Q

இதய பாதிப்பு வராமலிருக்க நாம் செய்ய வேண்டிய பாதுகாப்பு முறைகள் என்னென்ன டாக்டர்?

A

உடற்பயிற்சி, யோகா தவறாமல் செய்து வர வேண்டும்.

நடைப் பயிற்சி நிச்சயமாக இருக்க வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்க, தியானம் செய்தல் அவசியம்.

நார்ச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள், தானியங்களை உணவில் சேர்க்கவேண்டும்.

எண்ணெய், சர்க்கரை, கொழுப்பு அதிகமான உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்த்து, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு நாளில் குறைந்த பட்சம் ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம். புகை, மது இவற்றை ஒதுக்க வேண்டும்.

நோய் வரும் முன், பாதுகாத்துக்கொள்வது அவசியமல்லவா?

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com