இப்படிப்பட்ட பக்குவ நிலைக்கு உங்களால் எப்படி மாற முடிந்தது? 

இப்படிப்பட்ட பக்குவ நிலைக்கு உங்களால் எப்படி மாற முடிந்தது? 

சூப்பர் ஸ்டார் பேட்டி
Published on

ஒரு நிரூபரின் டைரி - 49

ன்று ரஜினி ஒரு சர்வதேச ஸ்டார்.  அவர், ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில்  பிரஸ் மீட் நடத்தினால், திருமணம் போல ஜே ஜே வென்று அகில இந்திய அளவில் மீடியாக்காரர்கள் வருகிறார்கள்.  எந்த ஒரு தனிப்பட்ட பத்திரிகைக்கோ, சேனலுக்கோ ரஜினி பிரத்யேகமாக பேட்டி தருவது என்பது இப்போது நடவாத காரியமென்றே சொல்லலாம். ஆனால், ஒரு காலகட்டம் வரை, பத்திரிகையாளர்கள் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேட்டி காண முடிந்தது. அப்படி எனக்கே கூட இரண்டு முறை பேட்டி கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

1989 பொங்கல் சிறப்பிதழில் கவர் ஸ்டோரி, ‘ரஜினி’ என்று முடிவானது. அவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டு ஏவி.எம். ஸ்டூடியோவில்  ‘சிவா’ படத்தின் ஷூட்டிங்கிற்கு நானும் போட்டோகிராபர் யோகாவும் சென்றோம். ஷோபனாவுடன் ஒரு டூயட்டில் இருந்தார் ரஜினி. பிரேக்கில் சந்தித்தோம்.

“கேள்விகள் எல்லாம் ரெடியா?” என்று கேட்டார்.  “ரெடி” என்றதும், “எங்கே! கொடுங்கள் பார்க்கலாம்!” என்றார். நான் கொடுத்த கேள்விகளைப் படித்துவிட்டு, சில நிமிடங்கள் பேசாமல் அந்த பேப்பரையே பார்த்துக் கொண்டிருந்தார்.  என்னைப் பார்த்து, “இந்தக் கேள்விங்க எல்லாம், சினிமா பத்திரிகைகாரங்க கேட்கறா மாதிரி இருக்கே! நீங்க நல்லா வித்தியாசமான கேள்விகளா கேட்கலாமே?” என்றார்.

நான் மௌனமாக இருந்தேன். “ஒண்ணு பண்ணுங்க!  வேற கேள்விகள்  தயார் பண்ணிக்கிட்டு, நாளைக்கு வாங்க! பதில் சொல்றேன்!  ஓ.கே? சீ யூ டுமாரோ!” என்று சொல்லிவிட்டு, ஷாட்டுக்குக் கிளம்பி விட்டார்.

மறுநாள் மீண்டும் சந்தித்தேன். முன்பு போலவே கேள்விகளை வாங்கிப் பார்த்தார். பேப்பரைத் திருப்பிக் கொடுத்து, “பேட்டியை  ஸ்டார்ட் பண்ணுங்க!” என்றார். அந்தப் பேட்டி சுமார் ஒரு மணி நேரம் போனது. எல்லா கேள்விகளுக்கும் நிதானமாக பதில் சொன்னார்.

முதல் கேள்வியே “இன்று சமுதாயத்தில் வன்முறை அதிகமாக இருக்கிறதே! இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?” என்பதுதான்.

அதற்கு ரஜினியின் பதில்:

முதல் காரணம் இன்றைக்கு இருக்கக் கூடிய தலைவர்கள்! அதாவது அரசியல்வாதிகள், இரண்டாவது, மதத் தலைவர்கள்; மூன்றாவது சினிமா.  சமுதாயத்தில் நிலவி வரும் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் இவற்றால் கஷ்டபப்டும் இளைஞர்களை, இன்றைய அரசியல்வாதிகள் எக்ஸ்பிளாயிட் செய்கிறார்கள். ஆகவே, அவர்கள் வன்முறைக்குப் போகிறார்கள்.  நம் நாட்டில் என்று இல்லை. உலகம் முழுக்க வன்முறை தலைவிரித்தாட இவைதான் காரணம்” என்றார்.

“அப்போது வன்முறையைக் கைவிட்டு, சமூகம் நல்வழிப்பட என்ன வழி?’  என்பது அடுத்த கேள்வி.  அதற்கு, “ஆன்மிகம்தான் வழி.  மனிதனின் மனம் அமைதியாக இருந்தால்தான், அவன் வன்முறையை நாடமாட்டான்.  ஆன்மிகம் என்பதை நான்  பக்தியிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறேன். ஆகவேதான் என்னை ஆன்மிகவாதி என்று சொல்லிக் கொள்கிறேன். நான் எந்த மதத்தியும் சேர்ந்தவன் இல்லை. முதலில் நான் மனிதன்; பிறகு இந்தியன். அவ்வளவுதான்!” என்று பதிலளித்தார்.

“உங்களுக்கு ராகவேந்திர சுவாமிகள் மீது ஈடுபாடு வந்தது எப்படி?”

“நான் 8 வயது முதல் 13 வயது வரை பெங்களூரில் உள்ள ராமகிருஷ்ண ஆசிரமத்தில் வாழ்ந்தேன். அங்கே எனக்கு சமஸ்கிருதமும், உபநிஷதங்கள் மற்றும் பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்.  எங்கள் குடும்பத்துக்கே குருவான ஸ்ரீ ராகவேந்திரரை நான் என் ஆன்மிக குருவாகக் கொண்டிருக்கிறேன்.  நான் என்பது என் உடம்போ, மனதோ இல்லை. எனது ஆன்மா. கடவுள் எனக்குள்ளே இருக்கிறார்.”

“இப்படிப்பட்ட பக்குவ நிலைக்கு உங்களால் எப்படி மாற முடிந்தது?”

“ராமகிருஷ்ணா மிஷன் அளித்த அடித்தளம்தான்.  அதன் பின் நான் பெற்ற அனுபவம்.  ஒரு குறுகிய காலத்துக்குள்ளாகவே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தையும் பார்த்துவிட்டேன்.  இந்த காலகட்டத்தில் எனக்கேற்பட்ட அனுபவங்கள்தான் என் மாற்றத்துக்குக் காரணம்.  நான் நல்ல நடிகன் இல்லை. ஆனால் ஒரு நல்ல அப்சர்வர். நிறைய கவனிப்பேன்; சிந்திப்பேன்; கேள்விகள் கேட்டுக் கொள்வேன். பதிலைத் தேடுவேன். ஆண்டவன் கொடுத்திருக்கும் அறிவை உருப்படியாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். மேலும், மனிதனை பக்குவப்படுத்தும் இன்னொன்று வயசு.  இவை எல்லாவற்றையும்விட, கடவுளின் ஆசியால்தான் இப்படி மாற முடிந்தது.”

“ரஜினி இப்படி பதில் கூறினாலும், நம் எல்லோருக்குமே  ரஜினி என்றதும்,  ஒரு வேகம், முரட்டுத்தனம்தானே நினைவுக்கு வருகிறது?” எனது இந்த சந்தேககத்தையும் அவரிடம் கேட்டேன்.

“ நான் வீண் வம்பை விலைக்கு வாங்குவது போல நடந்துகொள்வதில்லை. ஆனால், நான் சாதுவும் இல்லை; எனக்கு நியாயம் என்று தோன்றும் விஷயங்களில் முரட்டுத்தனம் காண்பிப்பது எனது இயற்கையான குணம்” என்று அவர் சொல்லிவிட்டார்.

மிகச்சாதாரணமான தொடக்கத்தில் இருந்து ஏற்பட்டிருக்கும் உங்களின் முன்னேற்றம் உங்களுக்கு பிரமிப்பூட்டுகிறதா?” இது அடுத்த கேள்வி.

இல்லை; மற்றவர்களைப் போல எனக்கு இது பிரமிப்பைத் தரவில்லை.  மற்றவர்கள் என்னைத் தொலைவில் இருந்துதான் பார்க்கிறார்கள்.  இந்த முன்னேற்றத்துக்குப் பின்னால் எத்தனை கடுமையான உழைப்பு இருந்திருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். அதனால்தான் எனது முன்னேற்றம் எனக்கு பிரமிப்பூட்டவில்லை.

 உங்களைச் சுற்றி நடக்கும் உலக விஷயங்கள் உங்களை பாதிக்கிறதா? உங்களை ஏதாவது செய்யத் தூண்டுகிறதா?

“உலகத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களும்  என்னை பாதிக்காது போனாலும்,  நான் நேருக்கு நேர் காணும் பசி, பட்டினி, வறுமை, வேலையில்லாத் தீண்டாட்டம் இவை எல்லாம் என்னை மிகவும் பாதிக்கின்றன.  இப்படிக் கஷ்டப்படுகிறவர்களுக்காக கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.  நிச்சயம் செய்யத்தான் போகிறேன்”

“அரசியலில் சேர்ந்தா?”

“நான் இப்பவும் அரசியல்வாதி இல்லை; எதிர்காலத்திலும் ஆக மாட்டேன்” என்று சொல்லிச் சிரிக்கிறார்.

“உங்கள் வாழ்க்கை உங்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடம் என்ன?”

“எனக்கு மிகவும் பிடித்த வாசகம்: Happiness begins when ambition ends. அதாவது அபிலாஷைகள் குறையக் குறைய, நிம்மதி, சந்தோஷம் அதிகமாகிறது.

கடைசி கேள்வியாக, “இன்றைக்கு சமுதாயத்தில் வன்முறை அதிகரிக்க சினிமாவும் ஒரு காரணம் என்று சொன்னீர்கள். சினிமாவில் ரஜினியின் படங்களில் வன்முறை அதிகமாகவே உண்டு. ஆக, வன்முறை கூடாது என்று சொல்லும் ரஜினிகாந்த் மறைமுகமாக சமுதாயத்தின் வன்முறைக்குக் காரணமாகிறாரே?’ என்று கேட்டதும், நிதானமாக ஆனால் அழுத்தமாக  “சினிமா என் தொழில்! வாழ்க்கையின் ஒரு பகுதி! எனவே, நான் எனது உணர்ச்சிகளை, கொள்கைகளைச் சொல்ல அடுத்தவர்களின் சினிமாவைப் பயன்படுத்துவது நியாயமில்லையே?  நான் நினைப்பதைச் செயல்படுட்த்தணும்னா துறவியாகி, இமாலயத்துக்குத்தான் போகணும்.  (சிரிப்பு) படங்களில் வன்முறை இருப்பது உண்மைதான். ஆனால், அநியாயத்துக்கான வன்முறையில் ஈடுபடுவதில்லையே?  வன்முறையின் முடிவில் நடப்பது நல்லதுதானே?’ என்று லாஜிக்காகப் பேசினார்.

அது ஒரு மறக்க முடியாத சந்திப்பு

அதற்கு முன்பாக 1985 கல்கி விடுமுறை மலருக்காக அவரை சந்தித்தேன். சாலிகிராமத்தில் இருந்த கிருஷ்ணா கார்டனில் ஒரு இந்திப் பட  ஷூட்டிங்கில் இருந்தார். கிணற்றில் விழுந்துவிட்ட ஒரு பெண்ணைக் காப்பாற்ற, குதிரையில்  விரைந்தோடி வந்து, கிணற்றுக்குள் குதிப்பதான காட்சி. 

அந்தக் காட்சியை முடித்துவிட்டு வந்த ரஜினி, ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு, ஒரு தட்டு தட்டிவிட்டு உட்கார்ந்தார். “இது ராபிட் ஃபயர்  பேட்டி!” என்றதும் சிரித்தார்.

நான் ஏற்கனவே தயாராய் வைத்திருந்த கேள்விகளை மடமடவென்று கேட்க, அவர் தனக்கே உரிய ஸ்டைலில், ஸ்பீடாக பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.  கேள்விகள் முடிந்தவுடன், “இப்போது நான் சில திரை உலக பிரபலங்களின் பெயர்களைச் சொல்லுவேன். நீங்கள் ஒரு சில வார்த்தைகளில் அவர்களைப் பற்றி உங்களுடைய விமர்சனங்களை சொல்லணும்” என்று சொன்னேன்.  தயங்கமல் பட் பட்டென்று சொன்னார்.

அடுத்து கல்கி வாசகர்களுக்காக  அவருடைய ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுக்கும்படிக் கேட்டதும்,  என் குறிப்பு நோட்டிலேயே போட்டுக் கொடுத்தார்.

ஒரு முறை போயஸ் கார்டனுக்குச் சென்று ரஜினியின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ரஜினி பற்றிக் கேட்டு ஒரு கட்டுரை எழுதினேன்.

போயஸ்கார்டனில் இருக்கும் ராகவ வீரா அவென்யூவில் நுழைந்து  ஒரு ரைட் அப்புறம் ஒரு லெஃப்ட் திரும்பினால்  சத்யமேவ ஜயதே என்று எழுதப்பட்ட 18ஆம் எண் வீடுதான்  ரஜினியின் வீடு. 17ஆம் நெம்பர் வீட்டில் வசித்தவர் அனில்குமார் என்ற சிடி பேங்க் அதிகாரி. அவரது மனைவி ஒரு குழந்தைகள் மருத்துவர்.

அவர்களின் அனுபவம்: “எங்களுக்கு ரஜினியின் அடுத்த வீடு என்பதில் பெரிய திரில் இல்லை. ஆனால், எங்களது சொந்தக்காரர்கள் பலருக்கும் அது பெரிய விஷயம். ஒரு முறை, எங்கள் வீட்டுக்கு வந்த உறவினர்கள் சிலர், ரஜினியை பார்க்க விரும்பினார்கள். அவர்கள் வீட்டு செக்யூரிடி மூலமாக  ரஜினியின் மேனேஜருக்குத் தகவல் சொன்னோம். அப்போது ரஜினி ஊரில் இல்லை.

அடுத்த சில நாட்களில் அவர் ஊரிலிருந்து திரும்பியதும், எங்களை வரச் சொல்லி தகவல் வந்தது. ஆனால், எங்கள் உறவினர்கள் ஊர் திரும்பி விட்டதால்,  என் மாமியார் மட்டும் போய் பார்த்துவிட்டு வந்தார்” என்று கூறினார் அனில்குமார்.

நான் சந்தித்த இன்னொரு அக்கம்பக்கம் மேனன் தம்பதிகள். “ரஜினி இந்த வீட்டுக்கு வருவதற்கு பல வருடங்கள் முன்பிலிருந்தே நாங்கள் இங்கு வசிக்கிறோம்.  ரஜினிக்கு வீட்டை விற்றவர் அகமத் சயீத் என்ற டாக்டர்.  கனடாவில் வசித்த அவர், முற்றிலும் மேற்கத்திய ஸ்டைலில் அந்த வீட்டைக் கட்டி இருந்தார். ஆனால், ரஜினி, அதை தன் விருப்பத்துக்கேற்ப மாற்றிவிட்டார்” என்றார்  லலிதா மேனன்.

மேலும் அவர் சொன்னது:”ஆரம்ப காலத்தில் புத்தாண்டு வாழ்த்து, ஸ்வீட் பாக்கெட்  எல்லாம் அனுப்பி வைப்பார்  ரஜினி.  ராகவேந்திரா கல்யான மண்டப திறப்பு விழாவுக்கு கூட அழைப்பிதழ் கொடுத்தார். தன் படங்களின் பிரி-வியூவுக்கு கூப்பிட்டதுண்டு. எங்கள் வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தபோது,  விஷயம் கேள்விப்பட்டு, உடனே வந்தது பக்கத்து வீட்டுக்காரரான ரஜினிதான்” என்றவர்  “இப்போது டச் விட்டுப் போச்சு” என்று கூறினார்.

எழுபதுகளின் துவக்கத்தில் இந்தப் பகுதியில் மனைகளை விற்ற ரியல் எஸ்டேட் காரர் பெயர்தான்  ராகவ வீரா.  இப்பகுதிக்கு தன் பெயரையே வைத்துவிட்டார் அவர்.

அது சரி? போயஸ் கார்டன் பெயர்க்காரணம் என்ன தெரியுமா? 1837ஆம் வருட வரைபடத்தின்படி, இந்த ஏரியா முழுக்க போ (Mr. Poe)  என்பவருக்குச் சொந்தமாக இருந்தது.  அதுவே பிற்காலத்தில் போயஸ் தோட்டமாகிவிட்டது.

ஒரு முறை நான் ரஜினியை,  லேனா தமிழ்வாணனின் வீட்டில் சந்தித்தேன். ரஜினி ஏன் அங்கு வந்தார்? லேனாவின் மகன் அரசு திருமணத்தன்று ரஜினி நேரில்  வரமுடியாது போகவே, அதன் பிறகு புதுமணத் தம்பதியரை லேனாவின் வீட்டுக்கு வந்து சந்தித்து வாழ்த்தி, பரிசளித்தார்.  ரஜினி வந்தபோது, என்னையும் தன் வீட்டுக்கு அழைத்திருந்தார் லேனா.

அன்று, மணமக்களுக்கு ரஜினி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

ஒரு பெரிய புத்தகம்!

என்ன புத்தகம்?

ரஜினி பெரிதும் மதித்து, வியக்கும் சிங்கப்பூர் அதிபர் லீ குவான் யூவின் வாழ்க்கை வரலாறுதான்!

(தொடரும்)

logo
Kalki Online
kalkionline.com