
ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்கம் (ADR) இந்தியாவில் உள்ள முதல்-மந்திரிகள் மற்றும் மந்திரிகளின் சொத்து விவரங்கள், அவர்கள் மீதுள்ள வழக்கு விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதுபோல் தற்போதும் இந்தியாவில் உள்ள வசதி படைத்த முதல்-மந்திரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை விவரங்களை பார்த்தால் பலரும் ஆச்சர்யப்படும் வகையில் உள்ளது.
இந்தியாவில் மாநில சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள முதல் - மந்திரிகளின் சராசரி சொத்து ரூ.52.59 கோடி. நாட்டில் உள்ள தனி நபரின் நிகர தேசிய வருமானம் (2023 - 2024ம் ஆண்டு கணக்குப்படி) ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 854 ஆக இருந்தபோது, ஒரு முதல் - மந்திரியின் சராசரி சுய வருமானம் ரூ.13 லட்சத்து 64 ஆயிரத்து 310 ஆக இருந்தது. இது சராசரி தனிநபர் வருமானத்தை விட 7.3 மடங்கு அதிகம். நாட்டில் உள்ள 31 முதல் - மந்திரிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடியாக உள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) அறிக்கையின்படி, ஆந்திரப் பிரதேச முதல்வர் என் சந்திரபாபு நாயுடு 931 கோடிக்கு மேல் சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார முதல்வராக உள்ளார்.
ஆச்சர்யம் என்னவென்றால் மேற்கு வங்காள முதல் - மந்திரி மம்தா பானர்ஜிதான் மிகவும் ஏழை முதல் - மந்திரியாக உள்ளார். அவரது சொத்து மதிப்பு வெறும் ரூ.15 லட்சம்தான்.
அருணாச்சல பிரதேசத்தின் பெமா காண்டு ரூ.332 கோடிக்கு மேல் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் பெரிய பணக்கார முதல்வர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். கர்நாடகாவின் சித்தராமையா ரூ.51 கோடிக்கு மேல் சொத்துகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ரூ.55 லட்சம் சொத்துக்களுடன், ஏழைகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், பினராயி விஜயன் ரூ.118 கோடியுடன் அதே பட்டியலில் மூன்றாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 14-வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.8 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.8,88,75,339 சொத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எந்தக் கடனும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரு காண்டு ரூ.180 கோடி அளவுக்கு அதிக கடன்களை வைத்துள்ளார். சித்தராமையாவுக்கு ரூ.23 கோடியும், நாயுடுவுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் கடன்கள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 (42 சதவீதம்) முதல்வர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளையும், 10 (32 சதவீதம்) பேர் கொலை முயற்சி, கடத்தல், லஞ்சம் மற்றும் கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகளும் உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 31 முதல் - மந்திரிகளில் 2 பேர் மட்டுமே பெண்கள். ஒருவர் மம்தா பானர்ஜி, மற்றொருவர் டெல்லி முதல் - மந்திரி அதிஷி.
சில முதல் மந்திரிகளின் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருந்தாலும் அவர்களுக்கும் பணக்கார முதல் மந்திரிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது!