உலகம் முழுவதிலுமுள்ள தங்கத்தில் இந்திய பெண்களிடமே நிறைய இருக்கிறது என்று ஒரு ஆய்வு கூறியிருக்கிறது. இதுகுறித்தான முழு விவரத்தையும் பார்ப்போம்.
பொதுவாக பெண்களுக்கு அதிகம் பிடிக்கும் ஒன்று தங்கம். குறிப்பாக அயல்நாட்டு பெண்களைவிட, இந்தியாவில் அடுக்கடுக்காக செயின், தோடு, கொலுசு என தங்கத்திலேயே குளிப்பார்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்கத்தில்தான் ஆபரணங்கள் போடுவார்கள்.
ஒரு சாதாரண குடும்பத்தில்கூட குறைந்தபட்ச அளவு தங்கம் இருக்கும். அதுவும் பணக்கார குடும்பம் என்றால் சொல்லவே தேவையில்லை. இந்தியாவில்தான் அதிகபட்ச தங்கம் புலங்குகிறது. தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் இந்திய மக்கள்தான் அதிகம் சந்தோஷப்படுவார்கள் வருத்தப்படுவார்கள். தங்கம் மிகவும் முக்கியமான ஒன்றாகவே இருந்து வருகிறது.
அந்தவகையில் இந்திய நாட்டு பெண்களிடம் ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய 24,000 டன் தங்கம் உள்ளது. இது உலக ஆபரணத் தங்கத்தில் 11 விழுக்காடு என்று உலக தங்க மன்றம் (World Gold Council ) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகின் அதிக தங்கம் சேமிப்பு நாடுகள் ஐந்தையும் சேர்த்தாலும் இந்திய நாட்டின் பெண்களிடமே அதிக தங்கம் இருக்கிறதாம்.
அமெரிக்கா 8,000 டன், ஜெர்மனி 3,300 டன், இத்தாலி 2,450 டன், பிரான்ஸ் 2,400 டன், ரஷ்யா 1,900 டன் தங்கத்தை வைத்திருக்கிறது. இவற்றின் ஒட்டுமொத்த இருப்பைக் கருத்தில் கொண்டாலும், இந்திய நாட்டுப் பெண்களுக்கு சொந்தமான தங்கத்தின் அளவைவிடக் குறைவாகவே இருக்கும்.
இந்திய நாட்டுக் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக உலக தங்கத்தில் 11 விழுக்காட்டை வைத்திருக்கின்றன. இது அமெரிக்கா, அனைத்துலகப் பண நிதியம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் இருப்பைவிட அதிகமாக உள்ளது என்று Oxford Gold குரூப் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய பெண்கள் அதிகம் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழகம் மட்டும் 28 விழுக்காட்டை கொண்டிருக்கிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான உலக தங்க மன்றத்தின் ஓர் ஆய்வில், இந்திய குடும்பங்கள் 21,000 டன் முதல் 23,000 டன் வரை தங்கத்தை வைத்திருந்தன. இது 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 24,000 முதல் 25,000 டன் வரை அதிகரித்தது. இது 25 மில்லியன் கிலோகிராமுக்கும் அதிகம்.
இந்திய வருமான வரிச் சட்டங்களின்படி, திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கத்தை வைத்திருக்க அனுமதி உண்டு. திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். ஆண்கள் அதிகபட்சமாக 100 கிராம் வரை மட்டுமே வைத்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.