
கடந்த சில ஆண்டுகளில் சென்னையையும், தமிழகத்தையும் வடகிழக்குப் பருவ மழை உலுக்கி எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னை வாழ் மக்கள், சுனாமிக்குப் பிறகு மழைக்காலம் என்றாலே பயந்து நடுங்க ஆரம்பித்து விட்டார்கள். அக்டோபர் தொடங்கினாலே அவர்களின் பயமும் உச்சத்தை எட்டி விடுகிறது. கோடை காலத்தில் குடி நீருக்காக ஆலாய்ப் பறந்தாலும், மழை அதிகமாகப் பெய்யக் கூடாது என்பதிலேயே குறியாக உள்ளார்கள். மழை நீரே உயிர் நீர்! என்பதைக்கூட மறந்து போய் விடுகிறார்கள்.
தமிழகத்தின் சராசரி மழையளவு 945 மிமீ (37.2 அங்குலங்கள்). அதாவது 94.5 செ.மீ. வடகிழக்குப் பருவமழையே 48 விழுக்காடு மழையினை (45.36செ.மீ) நமக்குத் தருகிறது. தென் கிழக்குப் பருவமழை 32 விழுக்காட்டினையும் (30.24 செ.மீ) மீதமுள்ள 20 விழுக்காட்டினைக் (18.90செ.மீ) கோடை மழையும் பூர்த்தி செய்கின்றன. இப்படிப் பெய்யும் மழையானது, குறிப்பிட்ட கால இடைவெளியில், அதாவது பத்துப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பெய்யுமானால், வெள்ள அபாயமே ஏற்பட வழியில்லை.
ஆனால், அவ்வாறு பெய்யாது. இரண்டொரு நாட்களிலேயே மொத்தமாக மழை கொட்டித் தீர்க்கும் போதுதான் நகரமே மிதக்க நேர்கிறது.
சரி! இதற்கெல்லாம் என்னதான் காரணம் என்று ஆராயப் புகுந்தால், அரசு, அதிகாரிகள், சாதாரண மக்களாகிய நாம் என அனைவரையும்தான் காரணம் சொல்ல வேண்டும். எப்படி என்று கேட்கிறீர்களா? பார்ப்போம் ஒவ்வொன்றாக!
அரசு:
ஒவ்வொரு நாட்டின் மொத்த நிலப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதி (33.33 விழுக்காடு) காடாக இருக்க வேண்டும். நமது தமிழ் நாட்டில், 15 விழுக்காட்டிற்கும் குறைவாகவே காட்டுப் பகுதி உள்ளதாகச் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதனை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசு அதிக அக்கறை காட்டவில்லை. மாறாக, ஏற்கெனவே இருக்கும் காடுகளும் அரசின் துணையுடன் அழிக்கப்பட்டு வருவதாகக் குற்றச் சாட்டுகள் உள்ளன.
ஏரிகள், பெருங்குளங்கள் ஆகியவற்றில் அரசுக் கட்டிடங்களைக் கட்ட அரசே அனுமதி அளித்தது பெருந்தவறாகும். அதோடு நில்லாது, பொறுப்பில் உள்ள பலரும் அந்த நிலங்களைச் சுயலாபம் கருதி, சட்டத்திற்குப் புறம்பாக விற்று விட்டனர்.
சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்ட வீடுகளை அரசு இடிக்க உத்தரவிட்டிருந்தால், இந்த நிலை மாறியிருக்கும். அவ்வாறில்லாது, ஏதோ கொஞ்சம் அபராதத்துடன் விட்டதால் வீடு கட்டுபவர்கள், 'அபராதம் கட்டிக் கொள்ளலாம்' என்ற மனநிலையில், துணிந்து வீடு கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
எல்லா நீர் ஆதாரங்களுமே, குறிப்பிட்ட கால இடை வெளியில் தூர் வாரப்பட வேண்டும். ஆனால், அரசு அவ்வாறு செய்வதில்லை. தூர் வாரப்பட டெண்டர் விடப்பட்டாலும் அதிலும் ஏகப்பட்ட ஊழல்கள். வேலைகள் முழுமையாக நடை பெறுவதில்லை.
சமூகக் காடுகள் என்ற பெயரில் ஏரியின் உள்ளே மரங்களை வளர்த்தது மிகப் பெரிய தவறு. அதன் காரணமாகத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு அந்த நீர்நிலைகளைத் தூர்வார முடியாமல் போய் அவற்றின் கொள்ளளவுகள் குன்றிப் போனதுதான் மிச்சம்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு, பணத்தை வாங்கிக் கொண்டு அரசு பொது நிலத்தைத் தாராளமாக வழங்கியிருக்கக் கூடாது. அதோடு அவர்கள் விட்டார்களா? புறம்போக்கு நிலத்தையும் சேர்த்து அபகரித்துக் கொண்டார்கள். ஏற்கெனவே கைநீட்டிவிட்ட காரணத்தால், அவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசு இழந்து விட்டது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் ஏழை மாணவர்களுக்கென்று அவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்கி, அந்த மாணவர்களுக்கு இலவசமாகவே கல்வி வழங்க வேண்டும். அதனைப் பெரும்பாலான கல்லூரிகள் பின்பற்றுவதே இல்லை. அதனைத் தட்டிக் கேட்க அரசும் முன்வருவதில்லை.
வெள்ளம் ஏற்படுகின்ற போது, மனசாட்சியுடன் செயல்பட்டு விதிக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க ஏற்பாடு செய்யும் அதிகாரிகளைக், கட்சிக்காரர்களின் நலம் கருதி அரசு செயல்பட விடாமல் தடுத்து விடுகிறது. இது மாற்றப்பட வேண்டும். நியாயமாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
அமைச்சர்கள், கட்சியின் பெயராலோ அல்லது வேறு காரணங்கள் கூறியோ லஞ்சம் வாங்குவதை முழுவதுமாக நிறுத்த வேண்டும். அந்தத் தவறைச் செய்வதால்தான் அதிகாரிகளைக் கட்டுப்படுத்த முடியாது போய் விடுகிறது.
வெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாமதமின்றி எடுத்து அதற்கான பணத்தையும் உடனுக்குடன் விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதிகாரிகள்:
ஐஏஎஸ்; ஐபிஎஸ் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு நியாயமான அறிவுரை வழங்கி, சாதாரண மக்களுக்கு நல்லது செய்வதையேக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். ஆனால் தற்போது அமைச்சர்கள் தவறு செய்யப் பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகளே உதவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உயரதிகாரிகள் ஏழை எளியவர்களின் நலனை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்பட வேண்டும். அப்படி உறுதிமொழி எடுத்துத் தானே பதவிக்கு வருகிறார்கள். உறுதி மொழியைக் காப்பாற்றினாலே நாடு முன்னேற ஆரம்பித்து விடும்.
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும், அவர் மாவட்டத்தின் பூகோள அமைப்பு நன்கு தெரிந்திருக்க வேண்டும். நீர் தேங்கும் இடங்களை அறிந்து, மழை நேரத்தில் ஆட்சியர்கள் அப்பகுதிகளில் முகாமிட வேண்டும். அப்பொழுதுதான் கீழுள்ள பணியாளர்கள் திறம்படச் செயல்படுவார்கள்.
ஆட்சியாளர்களின் பெயரைச் சொல்லித் தவறு செய்யத் தூண்டும் உள்ளூர் பிரமுகர்களை மாவட்ட ஆட்சியர்கள் நிராகரிக்க வேண்டும். அவர்களுக்கு எந்த விதத்திலும் துணை போகக்கூடாது. உள்ளூர் பிரமுகர்களால்தான் வெள்ளம் வடியும் பகுதிகள் வீட்டு மனைகளாகிப் போயுள்ளன.
மாவட்ட ஆட்சியர்கள், சமூக அக்கறையுள்ள மனிதர்கள் மற்றும் நிறுவனங்களுடன் எப்பொழுதும் தொடர்பிலேயே இருக்க வேண்டும். ஆபத்துக் காலங்களில் அவர்களின் தொண்டினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடமைக்காக மாரடிப்பவர்களைக் காட்டிலும், உண்மையானவர்கள் அதிகம் உதவுவார்கள்.
ஆட்சியர்கள் லஞ்சம் வாங்குவதை முழுவதுமாகத் தடை செய்ய வேண்டும். அங்கும் இங்குமாக ஒரு சிலர் தவறு செய்வதாகச் செய்திகள் வரத்தான் செய்கின்றன.
ஆளும் கட்சியினரின் கைப்பாவையாக மாவட்ட ஆட்சியர்கள் ஒருபோதும் இயங்கக் கூடாது.
நீங்கள் ஆள்வது சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக. ஆளும் கட்சியினருக்கோ 5 ஆண்டுகள்தான்! பின்னர் ஏன் நீங்கள் பயப்பட வேண்டும்?
சாதாரண மக்கள்:
வெள்ள வடிகால் கட்டுவது, வெள்ள நீர் வடிவதற்கே! உங்கள் வீட்டுக் குப்பைகளை எளிதாகக் கொட்டுவதற்கு அல்ல. இனியாவது வடிகாலில் குப்பையைக் கொட்டாதீர்கள்.
வாசலில் தேங்கும் நீரைப் பள்ளத்தில் நீங்களாகவே வடிய விடுங்கள். அதற்கும் அரசு அதிகாரிகளைத் தேடிக் கால விரயம் செய்ய வேண்டாம்.
வீட்டையும் சுற்றுப்புறத்தையும் எப்பொழுதும் தூய்மையாக வைத்திருங்கள். டெங்கு வராமல் காக்க வேண்டியது நமது கடமையுமல்லவா? அதற்கும் கலெக்டர் வந்து சொல்ல வேண்டுமா?
மழை வரும் முன்பாகவே, மழை நீர் சேகரிப்புக் குழாய்களைச் செப்பனிட்டு வைத்துக் கொள்ளுங்கள். வீட்டையும், மின்சாரம் சம்பந்தப்பட்டவற்றையும் சரியாகக் கவனித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
தேர்தல் சமயங்களில், கண்மூடித் தனமாகக் கட்சி கூறும் வேட்பாளர்களுக்கு காசை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதீர்கள். அவர்கள் நல்லவர்களா என்பதைச் சிந்தித்துச் செயல்படுங்கள்.
டாஸ்மாக் வாசலில் நிற்காமல், உங்கள் வீடு, குடும்பத்தைக் காப்பாற்றுவதில் கண்ணுங்கருத்துமாக இருங்கள்.
ஓசியாக யார் எதைக் கொடுத்தாலும் வாங்குவதில்லையென்று உறுதியான முடிவையெடுங்கள். அதனை எக்காரணம் கொண்டும் மீறாதீர்கள்.
உங்கள் பகுதியில் அரசு சார்பில் நடைபெறும் பணிகளைக் கண்காணியுங்கள். அவை உங்கள் நலனுக்காகச் செய்யப்படுபவை. அவை திருப்தியாக இல்லையென்றால், உயரதிகாரிகளிடம் முறையிடுங்கள். நாம் ஏமாறும் வரைதான் நம்மை ஏமாற்றுவார்கள். நாம் விழித்துக் கொண்டால் அவர்கள் தவறு செய்ய முடியாது.
எல்லாவற்றுக்கும் மேலாக நியாய தர்மங்களை அனுசரிக்கப் பழகுங்கள். உங்கள் மற்றும் குடும்ப நலனுக்காக ஊர்நலனைக் கெடுக்க விழையாதீர்கள். உங்களில் சிலர்தானே ஊர்க் கால்வாயை மறித்து வீடு கட்டியுள்ளீர்கள். அப்புறம் எப்படி வெள்ள நீர் வடியும்?
ஏரிக் கரையில் வீட்டைக்கட்டி விட்டு, ஏரியை உடைக்கும் இழி செயலைச் செய்யாதீர்கள்.
வெள்ளத்தை வெல்ல முக்கோணக்கூட்டு அவசியம். அரசு - அதிகாரிகள் - மக்கள் ஆகிய மூவரின் ஒருங்கிணைந்த பணியே வெள்ளத்தை வெற்றி கொள்ளும் கூட்டணியாகும்!
இணைந்து செயல்படுவோம்! இனிய உலகம் அமைப்போம்!