
தேர்தல் என்று வந்துவிட்டால் பலருக்கு சந்தோஷம்தான் வரும். காரணம் நமக்கும் நம்மை சுற்றியும் பல நல்ல விஷயங்கள் நிகழப் போகின்றன என்ற ஆசையின் நிலைப்பாடே. ஆனால், வெகு சிலருக்கோ இந்த சந்தோஷம் பணம் என்ற வழியில் வேறு விதமாக கொண்டாடபடுகிறது. அப்படிப்பட்டவர்கள் உணரும் சந்தோஷம் நிரந்தரமானதா? இல்லை தற்காலிகமானதா? அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
நாட்டில், வாக்குக்கு பணம் என்ற நடைமுறை குறிப்பாக அதிக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பகுதிகளில்தான் பரவலாக உள்ளது. காரணம் அங்குள்ள வாக்காளர்கள் ஒரு ஆட்சியின் நீண்டகால நன்மைகளைப் பெறுவதை விட, அவர்கள் பெரும் உடனடி நிதி ஆதாயத்தையே மதிப்பு மிக்கதாகக் கருதுகின்றனர்.
அதிக வாக்குகளைப் பெற அதற்கு ஈடாக வேட்பாளர்கள் பணம் அல்லது பரிசுகளை கொடுத்து பிறர் வாக்குகளை வாங்குவது பொதுமக்களுக்கு பல எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்துகிறது.
முதலாவதாக, இது நேர்மறையான அரசியல் முக்கியத்துவத்தை முற்றிலும் சீர்குலைத்து நாம் சிந்தித்து செயல்படவேண்டிய ஜனநாயக செயல்முறையை நம்மிடமிருந்து பறிக்கிறது.
வாக்காளர்கள் தங்கள் வாக்குகளுக்கு ஈடாக பணத்தைப் பெறுவது ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு தெரியாத ஒரு குடிமகனையோ அல்லது குடிமகளையோ பாதிக்கும். இதன் தாக்கம் இன்றைக்கு உங்களுக்குத் தெரியாமல் இருந்தாலும் அந்த பாதிப்பு உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டிலோ நிகழும் போதுதான் நம்மால் தொடங்கப்பட்ட இந்த ஊழல் கலாச்சாரத்தை பற்றிய புரிதல் நமக்கு வரும். இறுதியில் நீங்கள் பணத்தை வாங்கி வெற்றி பெறச் செய்த வேட்பாளர் கண்டிப்பாக சந்தோஷத்தில் இருப்பார்.
பல தேர்தல்களில் வாக்குகளைப் பெற இது ஒரு சிறந்த வழி என்று வேட்பாளர்கள் நம்புவதால் வேட்பாளர்கள் வாக்குகளை ஒரு தயாரிப்புப் பொருட்களாகவே பார்க்கின்றனர். காரணம் பணம் அல்லது பரிசுகளை பெறுவது பொதுமக்ளுக்கு பொருளாதார ரீதியாக உதவினாலும், அதுதான் வேட்பாளர்களை முக்கியமான பிரச்னைகளில் அலட்சியமாக செயல்பட வைக்கிறது.
எதிர்காலத்தின் மீதுள்ள தாக்கம்:
நாம் தவறாக செய்யும் இந்த வாக்கு விற்பனை நிகழ்காலத்தில் பழகிப் போன ஒரு விஷயமாக இருந்தாலும், எதிர்கால சந்ததியினரை கண்டிப்பாக கடுமையாகப் பாதிக்கும்.
இப்படிப்பட்ட ஊழல் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அவர்கள் பொது நலனை விட அவர்களின் தனிப்பட்ட ஆதாயத்திற்கே பெரிதும் முன்னுரிமை அளிப்பார்கள். இது நேரடியாகத் தெரியாவிட்டாலும், அவர்கள் வாழும் சூழ்நிலையே நமக்கு உணர்த்தி விடும்.
இறுதியில், என்னதான் அரசு கஜானாவில் ஆரம்பத்தில் நிதி இருந்தாலும், காலப்போக்கில் மோசமான நிர்வாகத்தால் கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளின் மேம்படுத்தலுக்கு முதலீடு இல்லாமல் போக வழிவகுக்கும். இதன் விளைவாக எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சி பெரிதும் பாதிப்படையலாம்.
நாம் நிகழ்காலத்தில் எதிர்கொண்டிருக்கும் வறுமை மற்றும் சமத்துவமின்மயின் (Inequality) சூழ்நிலையை அவர்களின் காலத்திலும் எதிர்கொள்ள நேரிடும்.
நம் உரிமையை நாமே மறக்கலாம்
மேலும், வாக்குகளை பணத்தால் வாங்கும் செயலை இயல்பாக்குவது என்பது தேர்தல் செயல்முறை மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும்.
இதுவே அடுத்த தலைமுறை வாக்காளர்களிடம் தேர்தலின் மீதுள்ள முக்கியத்துவத்தை குறைந்துவிடும். காலப்போக்கில் குடிமக்கள் தங்களிடம் உள்ள வாக்குகளை ஜனநாயக உரிமையின் வெளிப்பாடாக கருதாமல் வாங்கும் பொருளாக பார்க்கும் கலாச்சாரம் தொடரக்கூடும்.
இந்த செயல்பாடே உண்மையான ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்ற பலரின் ஈடுபாட்டைக் குறைத்து, குறைவான வாக்குப்பதிவுக்கு வழிவகுக்கும். இறுதியில் காலம் போக போக ஜனநாயகத்தின் அடித்தளத்தையே முற்றிலும் பலவீனப்படுத்தும் .