#THOUGHT EXPERIMENTS - நாம் எடுக்கும் முடிவுகளுக்குப் பின் இருக்கும் உளவியல் உண்மைகள்!

ட்ராலி பிரச்சனை முதல் தீஸஸ் கப்பல் வரை, மனிதனின் முடிவு மற்றும் அறநெறி உணர்வை மாற்றும் வியக்க வைக்கும் சிந்தனை சோதனைகளை அறியுங்கள்.
THOUGHT EXPERIMENTS
THOUGHT EXPERIMENTSImage credit: Gemini AI
Updated on
Kalki Strip
Kalki Strip

இந்த கட்டுரை சிந்தனை சோதனைகள் மூலம் மனித மனத்தின் அறநெறி முடிவுகளை ஆராய்கிறது. ட்ராலி பிரச்சினை, மருத்துவமனை அறுவை சிகிச்சை திலேமா போன்ற உதாரணங்கள் மூலம் ஒருவரைக் கொல்வது மற்றும் ஒருவரை சாக விடுவது என்ற வேறுபாட்டை விளக்குகிறது. மனிதனின் அற உணர்வு, வாழ்க்கை அனுபவம், சூழ்நிலை ஆகியவை முடிவுகளை எப்படி நிர்ணயிக்கின்றன என்பதை சுருக்கமாகச் சொல்கிறது.

கஷ்டமான ஒரு தருணத்தில் ஒருவர் என்ன முடிவு எடுப்பார்? இது அவரவர் இருக்கும் இடத்தையும் நேரத்தையும் அவரது கடந்த கால தர்ம நெறி பற்றிய உணர்வையும் சார்ந்தது.

ஒவ்வொருவருக்கும் உள்ள தனி பிரக்ஞை தனது முடிவை உள்ளுணர்வு மூலமாக அறிவிக்கும்.

இதை விளக்க நாற்பதுக்கும் மேற்பட்ட THOUGHT EXPERIMENTS - சிந்தனை சோதனைகள் – பல்வேறு விஞ்ஞானிகளாலும், தத்துவஞானிகளாலும் விளக்கப்பட்டுள்ளன. இதில் ஐன்ஸ்டீன் முதல் பழைய கால கிரேக்க ஞானிகள் உட்பட அனைவரும் அடங்குவர்.

உதாரணத்திற்கு இங்கு இரண்டு சிந்தனை சோதனைகளைக் காண்போம்.

ஒன்று The Trolley Problem – தள்ளுவண்டி பிரச்சினை!

இதை 1967ல் தத்துவஞானி பெண்மணியான பிலிப்பா ஃபுட் உலகினர் முன் வைத்தார்.

ட்ராலி ப்ராப்ளம் என்று பிரசித்தி பெற்ற இந்த சிந்தனை சோதனை இது தான்:

ரயில்வே ட்ராக்கில் ஒரு ட்ராலி வேகமாக வருகிறது. அந்த ட்ராக்கில் ஐந்து பேர்கள் கட்டப்பட்டிருக்கின்றனர். அங்கு இருக்கின்ற லீவரை நகர்த்தினால் அது இன்னொரு ட்ராக் வழியே செல்லும். அந்த ட்ராக்கில் ஒருவர் தான் கட்டப்பட்டிருக்கிறார். இப்போதுள்ள கேள்வி: நீங்கள் என்ன செய்வீர்கள்.

THOUGHT EXPERIMENTS
THOUGHT EXPERIMENTS

ட்ராலியை வேறு டிராக்கில் லீவர் மூலம் மாற்றிப் போகச் செய்வீர்களா, அல்லது அது போகும் வழியிலேயே அப்படியே விடுவீர்களா? ‘பலரும் சொல்லும் விடை – லீவரை இயக்கி ட்ராலியை மாற்றி விடுவோம் என்பது தான். அங்கு ஒருவர் இறப்பார்; ஆனால் ஐந்து பேர் காப்பாற்றப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்:
16 வயதிலேயே AI நிறுவனம்.. தந்தைக்கே ரூ 2 லட்சம் சம்பளம் வழங்கும் 'AI kid of India'!
THOUGHT EXPERIMENTS

சரி, இதே போல இன்னொரு பிரச்சினை. இது ஒரு மருத்துவமனையில் நடைபெறும் பிரச்சினை. இங்கு ஒரு சர்ஜனுக்கான பிரச்சினை இது.

வெவ்வேறு அங்கங்கள் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் ஐந்து பேர்கள் சர்ஜனின் முன் கிடத்தப்பட்டுள்ளனர்.

அப்போது அந்த ஐந்து அங்கங்களும் உறுதியாக உள்ள ஒருவர் உள்ளே நுழைகிறார். சர்ஜன் இப்போது அந்த நபரைக் கொன்று ஐந்து அங்கங்களையும் எடுத்து உயிருக்கு மன்றாடும் ஐந்து பேரையும் காப்பாற்றி விடலாம்.

நீங்கள் சர்ஜனாக இருந்தால் என்ன செய்வீர்கள்? உள்ளே வருகின்ற ஆரோக்கியமான நபரைக் கொன்று அவரது அங்கங்களை ஐந்து பேர் உடலில் பதியம் செய்து ஐந்து பேரைக் காப்பாற்றுவீர்களா அல்லது ஆரோக்கியமான நபரை கொல்லாமல், ஐந்து பேரும் இறக்கட்டும் என்று விட்டு விடுவீர்களா?

எல்லோருமே உள்ளே வருபவரை நிச்சயமாகக் கொல்ல மாட்டோம் என்று தான் பதில் சொல்வர். இரண்டு பிரச்சினைகளிலும் எண்ணிக்கை ஒன்று தான். ஆனால் ஒன்றில் ஒருவரைக் கொல்ல வேண்டும்; இன்னொன்றில் ஒருவரை சாக விட வேண்டும்.

ஏன் வெவ்வேறான முடிவு? ஏனெனில் மனிதனின் அற உணர்வுப்படி ஒருவன் கொலை செய்யப்படக் கூடாது. ஒருவரைக் காப்பாற்றுவதை விட கொல்வது என்பது கொடுமையானது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பின்புலம் இதை நிர்ணயிக்கிறது.

இன்னொரு சிந்தனை சோதனை இதோ:

இதன் பெயர் ‘தி ஷிப் ஆஃப் தீஸஸ்’ (The Ship of Thesus)

கிரேக்க நாட்டில் வெகு காலத்திற்கு முன்பேயே வழங்கப்பட்ட சிந்தனை சோதனை இது.

தீஸஸ் என்ற ஒரு மாபெரும் வீரனை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் இன்றளவும் ஏதன்ஸ் நகரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த கப்பலில் உள்ள பலகைகள் காலப்போக்கில் உளுத்துப் போகின்றன.

THOUGHT EXPERIMENTS | The Ship of Theseus
THOUGHT EXPERIMENTS | The Ship of Theseus

ஆகவே ஏதன்ஸ்வாசிகள் அவற்றை அகற்றி நல்ல வலுவான பலகைகளைப் பொருத்தினர். காலப்போக்கில் பழைய பலகை ஒன்று கூட தீஸஸின் கப்பலில் இல்லை; எல்லாம் புதுப் பலகைகள் தாம். இப்போது அந்தக் கப்பலை அதே பழைய கப்பல் என்று சொல்லலாமா?

சொல்லலாம் என்றால் நீங்கள் அடையாளம் என்பது பௌதிகப் பொருள்களை நம்பி இருப்பதில்லை என்று சொல்வதாக அர்த்தம். ஒரு பொருளானது அதன் ஒவ்வொரு பாகமும் மாற்றப்பட்டாலும் அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் என்பது தான் இதன் முடிவு.

இன்னொரு விதமாகப் பார்க்கலாம். ஒரு மனிதனின் உடலில் பிறக்கும் போது இருந்த செல்கள் (உயிரணுக்கள்) காலப்போக்கில் மாறுபட்டு புதிய செல்களை அவன் உடலில் உருவாக்குகின்றன. இப்போது அவன் உடலில் ஒரு புதிய செல்லும் இல்லை.

இதையும் படியுங்கள்:
எச். ஜி. வேல்ஸின் ‘தி டைம் மெஷின்’: அறிவியல் புனைகதையும் அதன் பின்னுள்ள தத்துவங்களும்!
THOUGHT EXPERIMENTS

இப்போது அவன் பழைய ‘அவன்’ தானா அல்லது புதிய ஆளா? இதே போல ஒரு நிறுவனத்தில் இருக்கின்ற பணியாளர்கள், மேலாளர்கள் காலப்போக்கில் மாற்றப்படுகின்றனர். இப்போது அந்த நிறுவனம் அதே நிறுவனம் தானா? அல்லது புதிய நிறுவனமா?

தீஸஸின் கப்பல் – புதிய உயிரணுக்களால் மாறுபட்ட மனிதன் – புதிய பணியாளர்களைக் கொண்ட பழைய நிறுவனம்.... இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன. நாம் காணும் அல்லது அடையாளங்கள் தெளிவற்ற (அல்லது மங்கலான) ஒரு கருத்தின் அடிப்படையில் உருவானவை என்பதைத் தான் குறிக்கின்றன.

இது போன்ற சிந்தனை சோதனைகள் ஏராளம் உள்ளன. மனித மனம், பிரக்ஞை, சூழ்நிலை, அறநெறி உணர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நாம் காண்பனவற்றை இவை உணர்த்துகின்றன. காண்பதெல்லாம் நிஜமா?

மனித மனதின் விசித்திரமான செயல்பாடுகளையும், நமது முடிவுகளுக்குப் பின்னால் உள்ள உளவியல் ரகசியங்களையும் முழுமையாகப் புரிந்து கொண்டு, எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் தெளிவான பார்வையுடன் எதிர்கொள்ளும் மன உறுதியைப் பெறுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com