

25 ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 75-வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், கல்கி வார இதழ் சிறப்பு மலரை (26.11.2000) வெளியிட்டது. அந்த மலரில், சத்ய சாயிபாபாவின் சிறப்புகள் குறித்துத் தொகுக்கப்பட்ட பல கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.
இப்போது, ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் நூற்றாண்டு (2025) விழாவையொட்டி, அந்த இதழிலிருந்து ஒரு சிறப்புக் கட்டுரை இப்போது உங்கள் பார்வைக்கு....
26.11.2000 அன்று வெளியிட்ட பாபாவின் சிறப்பு மலரை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
'ஏழாவது மனிதன்'ல நடிச்சப்போ, எனக்குப் பதினெட்டு வயசுதான். அதற்குப் பிறகு ஸ்ரீதர் சார் படம். ஆர். சி. சக்தி படம்னு ரொம்ப பிஸியாயிட்டேன். கை நிறைய பணம். திடீர் புகழ்... வழி காட்டறதுக்கு யாருமில்லை. இளம் வயசு வேறே... சுலபமா சறுக்கிட்டேன். நாலே வருஷத்துல மோசமான நிலைமைக்குப் போயிட்டேன். மார்க்கெட் அவுட். உடம்பு வேறே ரொம்ப க்ரிடிக்கலா ஆயிடுச்சு... டாக்டர்ஸ் எல்லாம் கைவிட்டுட்டாங்க. ஆஸ்பத்திரி பில்லுக்குப் பணம் கட்ட காசு இல்ல. ரொம்ப விரக்தியா படுத்திருந்தேன். வாய்விட்டு அழணும்னு நினைக்கிறேன். ஆனா அதுக்குக்கூட திராணி இல்லை.
அப்போ அவர் உள்ளே வர்றார்!
புட்டபர்த்தி சாய்பாபா!
"அட! இவர் மாஜிக் எல்லாம் பண்ற சாய்பாபா ஆச்சே! இவர் ஏன் இங்க வர்றாரு?"ன்னு நான் நினைக்கிறேன். அதுக்குள்ள அவர் என்னை இன்னும் நெருங்கி வந்துட்டாரு...
"கவலைப்படாதே! நான் இருக்கேன்... நீ ஒண்ணும் அநாதைக் கிடையாது... தைரியமா இரு"னு சொல்லி என் தலையை வாஞ்சையா தடவிக் கொடுக்கறார்.
எனக்கு இது கனவா இல்லை, நிஜமா நடக்குதான்னுகூட தெரியலை.
அதற்குப் பிறகு நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் எனக்குத் தூக்கத்துல நடந்தது போலதான் இருக்கு.
அடுத்த அறுபதாவது மணி நேரத்தில் நான் புட்டபர்த்தில இருக்கேன்... ஆஸ்பத்திரியில படுத்தபடுக்கையா இருந்த நான் எப்படி அங்கே போனேன்? எதுக்காக போனேன்? யார் என்னை அழைச்சது?... சுத்தமா ஞாபகம் இல்லை. ஞாபக வலையில் துழாவி துழாவிப் பார்த்துட்டேன். எதுவும் பிடிபடலை.
பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தேன். பிரார்த்தனை மண்டபம் நிரம்பி வழிகிறது. நான் இரும்பு கேட்டுக்கும் வெளியே நிற்கிறேன், அதுவும் கூட்டத்தின் கடைசி ஆளாக!
பாபா வருகிறார்... கூட்டத்தைப் பார்க்கிறார்... வெகு தூரத்தில் நிற்கும் என்னை வரச் சொல்லி சைகை செய்கிறார்.
'யாரையோ அழைக்கிறார்' என்று நான் சும்மா இருந்தேன்... அருகில் இருந்த சேவாதள்ஸ் "உங்களைத்தான் பாபா கூப்பிடுகிறார்" என்றார்கள். எனக்கு ஒரே அதிசயம்!
அத்தனை ஜனமும் ஒதுங்கி எனக்கு வழிவிட, நான் பாபாவுக்கு மிக அருகில் நிற்கிறேன்.
அவர் என்னைக் கனிவோடு தொட்டு, முன் வரிசையில் உட்கார வைக்கிறார்.
அந்தத் தொடுகை! அந்தச் சிலிர்ப்பு! ஆயிரம் நாக்கு இருந்தாலும் என்னால் அதை வர்ணிக்கமுடியாது... அப்படியே அவருடைய காலடியில் அழுதபடியே உட்கார்ந்துவிட்டேன்.
பிரசாந்தியிலேயே தங்கினேன். அந்த இடத்தை விட்டுப் போகும் எண்ணமே இல்லை.
மறுநாளும் என்னைப் பார்த்தார்.
"நிறைய வேலைகள் இருக்கே. போ..! பண்ணு.. நான் இருக்கேன்." பாசத்தோடு விரட்டினார்.
நான் சென்னைக்குப் புறப்பட்டேன். வரும் வழியெல்லாம் பாபாவின் ஸ்மரணைதான்.
மறுஜன்மம் எடுத்தவனாக ஊர் வந்து சேர்ந்தேன். நிறையப் படங்கள் கிடைத்தன. நான்கு மொழிகளிலும் பிஸியாகிவிட்டேன். ரோகிணி கிடைத்தார். சாய்ரிஷி பிறந்தான். அன்பான குடும்பம் அமைந்தது. இப்போது என்னிடம் குழப்பமில்லை... 'விஷன்' என்பார்களே அது என்ன என்று தெளிவாகப் புரிந்துவிட்டது.
'சர்வீஸ் டு ஹியுமானிடி, சர்வீஸ் டு காட்' என்ற சிந்தனையில் நம்பிக்கை பிறந்தது.
நாலு பேருக்கு நல்லது செய்ய செய்ய, கடவுள் நம்மை நெருங்கி வருவார் என்பது புரிந்தது. பிரார்த்தனையின் பலம் புரிந்தது. இதைவிட எனக்கு என்ன தேவை?"
கேட்டுவிட்டு மெளனத்தில் ஆழ்ந்தார் ரகுவரன்.
"பாபா, உங்களுக்கு மோதிரம், லிங்கம், பூ - இப்படி ஏதாவது வரவழைச்சுக் கொடுத்திருக்காரா?"
"இல்லை... அதெல்லாம் எனக்குத் தேவையே இல்லை. ஏதாவது மனசஞ்சலம்னா, 'டியர் டியர் பாபா'ன்னு லெட்டர் எழுதுவேன். கடிதம் எழுதி முடிப்பதற்குள்ளேயே பிரச்னை தீர்ந்துடும். 'பாபா. எனக்கு உங்களைப் பார்க்கணும்னு நினைச்சுப்பேன்.. மறுநாள் அவர் தரிசனம் கிடைச்சுடும். எவ்வளவு பெரிய கூட்டத்துலயும் என்னை அடையாளம் கண்டுபிடிச்சிடுவார்...."வந்துட்டியா?"ன்னு ஒரு சைகை... "நல்லா இரு"ன்னு ஆசீர்வாதம்! அதுலேயே பரம திருப்தி.
"பாபாதான் உங்ககிட்டே ரொம்ப நெருக்கமா இருக்காரே... அவர்கூட ஃபோட்டோ எடுத்துக்கோங்க... ஒரு இன்டர்வ்யூ வேணும்னு கேளுங்கன்னு கூட இருக்கிறவங்க தூண்டிவிடுவாங்க.. எனக்கு அதெல்லாம் கேட்கணும்னே தோணாது... ஏன்னா, எனக்கும் அவருக்கும் இடையே இருக்கிற காஸ்மிக் கனெக்ஷன் இருக்கே... அது ஜன்மஜன்மமா தொட்டுத் தொடரும் விஷயம்.." என்கிறார் நம்பிக்கையாக.
சாய்பஜனை, நாமாவெளி பாடுவது இதெல்லாம்கூட ரகுவரன் செய்வதில்லையாம்.
"இந்த உலகமே நீங்கதான்... நான் உங்கள் பிள்ளை, என்னை சரியான பாதையில் நடத்துங்கள். மற்றவர்களுக்கு உதவ எனக்கு உதவுங்கள். இந்தச் சின்ன பிரார்த்தனை மட்டுமே செய்கிறேன். சாய் சமாஜம் செய்யும் ஆன்மீகப் பணிகளில் கலந்துகொள்கிறேன். முடிஞ்ச உதவி பண்ணுகிறேன்.. தட்ஸ் ஆல்...”
"உங்கள் மனைவியும் சாய் பக்தையாக மாறியது எப்படி?" என்று கேட்டபோது. "ரோகிணியிடமே கேட்டுக்கோங்க, சாய் ராம்" என்று சொல்லி அமைதியாக உட்கார்ந்துகொண்டார்.
"இவரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி சாய்பாபா பற்றி அதிகமாய்த் தெரியாது. ஏதோ சாமியார் என்ற அளவில்தான் தெரிந்து வைத்திருந்தேன். ரஞ்சிதா, ரேவதி, சுமீலா நாசர், நான், நான்கு பேரும் சேர்த்து 'சுவாபிமான்' என்ற சமூகசேவை அமைப்பைத் தொடங்கி நல்ல விஷயங்கள் செஞ்சுக்கிட்டிருந்தோம். அப்பதான் இவர், நீங்க செய்யற அதே சர்வீஸைதான் பாபா, பெரிய அளவுல செய்யறாரு. அதைப் பார்த்தா உனக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கும்னு சொல்லி புட்டபர்த்திக்கு அழைச்சுட்டுப் போனார். அங்கே போனபிறகுதான், கல்வி, மருத்துவம், ஆன்மீகமனு பல துறைகளில் அவங்க தொண்டு செய்யறது தெரிஞ்சது. அன்றைக்கு பாபா மீது ரொம்ப மரியாதை ஏற்பட்டது.
"அப்புறம், எனக்கு இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டு, ரொம்ப மனவேதனையுடன் இருந்தபோது, பாபாவின் நாமத்துக்கு உள்ள மகிமை தெரிந்தது. சாய் ரிஷி. கர்ப்பத்தில் இருந்தபோது பாபாவை ஒருகணம்கூட நினைக்கத் தவறியதில்லை. அவர் எப்போதும் என் கூடவே இருப்பதுபோல தைரியம் பிறந்தது... அந்த அனுபவத்துக்குப் பிறகு நானே தீவிர பக்தையாகி விட்டேன்" என்று ரோகிணி உணர்ச்சிகரமாய் முடித்தார்.
அப்போது ரோகிணியின் மடியில் இருந்த அவரது இரண்டரை வயது மகன் சாய்ரிஷி, பாபாவின் படத்தைக் காட்டி, "பாபா" என்று மழலையில் சொல்லி, அவரைப்போலவே இரண்டு கைகளையும் உயர்த்தி ஆசீர்வாதம் செய்ய... ரகுவரன், ரோகிணி முகத்தில்தான் எத்தனை பரவசம்?
- அனுராதா (கல்கி 26.11.2000)