-முனைவர் என்.பத்ரி
இரவில் ஆழ்ந்த தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர். அரிதாக கிடைக்கும் அந்த தூக்கத்தையும், நம் பக்கத்தில் படுத்து, தம் குறட்டையால் நம்மை, தூங்கவிடாமல் செய்பவர் களும் பலர். ''என் கணவர் இரவில் விடும் குறட்டையால், நான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறேன்'' என்று விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்லும் பெண்களும் இருக்கிறார்கள்!
மருத்துவ ஆய்வுகள் பெரியவர்களில் 45 சதவீதம் பேர் குறட்டை விடுகிறார்கள் என்றும், அவர்களில் 25 சதவீதம் பேருக்கு அது ஒரு பழக்கமாகி விடுகிறது என்றும் கூறுகின்றன.
சத்தமாக குறட்டைவிட்டு தூங்குபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. குறட்டைக்கான வாய்ப்புகள் வயது கூடக்கூட அதிகரிக்கிறது.
நாம் விடும் குறட்டை நம் தூக்கத்தின் தரத்தைக் குறைத்து, நம் உடல் நலத்தையும் பாதிக்கிறது. நமது முக்கிய சுவாச உறுப்பான நுரையீரலுக்கு கூடுதலான பணியைக் குறட்டை கொடுக்கிறது. இதனால் நுரையீரல் பலவீனம் அடையலாம். அதனால் நமது ஆயுட்காலமும் குறைய வாய்ப்புள்ளது.
நமது இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் தூங்குவதற்கென குறிப்பிட்ட நேரத்தை நம்மில் பலரால் ஒதுக்க முடிவதில்லை. ஒருகாலத்தில் உலகம் இரவில் ஒய்வெடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தது. தற்போது பெரும்பாலான பெருநகரங்கள் இரவில் கூட பகலைப் போலத்தான் இயங்குகின்றன. தூங்கவேண்டிய நேரத்தில் தூங்காதபோது, உடலே களைப்படைந்து ஓய்வைத் தேடுகிறது. அதன் விளைவே அரைகுறைத் தூக்கம். அதைத் தொடர்ந்து தூக்கத்தில் குறட்டைவிடத் தொடங்குகிறோம்.
குறட்டை என்பது நாம் தூங்கும்போது ஏற்படும் கடுமையான, எரிச்சலூட்டும் ஒலியாகும். இது ஒரு வகையான தூக்கக் கோளாறு ஆகும். இது பெண்களுடன் ஒப்பிடும்போது, ஆண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.
குறட்டை என்பது நமது உடலின் சுவாச அமைப்புகளில் தூக்கத்தின்போது தடைப்படும் காற்றினால் ஏற்படும் ஒலியாகும். பொதுவாக வாய், மூக்கின் பின்புறத்தில் உள்ள பாதைகளின் வழியில் சுவாசம் தடைபடும்போது குறட்டை ஏற்படுகிறது.
அதிக உடல் பருமன், உள்நாக்கில் சதை வளர்ச்சி, சிறு தாடை கொண்டவர்கள், பெரிய கழுத்தினைக் கொண்டவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், சீரற்ற இதயத் துடிப்பு உள்ளவர்கள், போதைப் பழக்கம், குப்புறப்படுத்து உறங்குவது, மூக்கின் அமைப்பில் உள்ள பிறவிக் குறைபாடு போன்றவை குறட்டைப் பிரச்னைக்குக் காரணங்களாக அமைகின்றன.
குறட்டை விட்டு தூங்குபவர்கள் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிப்பதில்லை. இரவில் அடிக்கடி தூக்கத்திலிருந்து எழுந்து விட்டு, பிறகு தூங்கத் தொடங்குகிறார்கள். எனவே,இவர்கள் தரமான தூக்கத்தைப் பெறுவதில்லை. அதனால், குறட்டை விடுபவர்களுக்கு பகல் பொழுதுகளில் தூக்கம் வரும். இவர்கள் பகலில் சோர்வான மனநிலையிலேயே இருப்பார்கள். அலுவலகப் பணிகளையும், அன்றாட இயல்பான பணிகளையும் இவர்களால் முழுமுனைப்புடன் செய்ய முடிவதில்லை. குறட்டை உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், மறதி பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது.
வாயை திறந்தபடி குறட்டைவிட்டால் தொண்டையில் இருக்கும் திசுக்களில் பிரச்னை ஏற்படலாம். சிலருக்குக் குறட்டைவிடும்போது மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம்கூட நிகழலாம். நான்கு இதய நோயாளிகளில் மூன்று பேருக்கு குறட்டைவிடும் பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது.
குறட்டையைக் குறைப்பதற்காக நவீன மருத்துவத்தில் பல நல்ல தீர்வுகள் உள்ளன. முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குறட்டைக்கு மட்டுமின்றி, உடலில் உள்ளபிற பிரச்னைகளுக்கும் கூடவே தீர்வு கிடைக்கும். இதனால், சுவாசம் சீராகி, குறட்டைஏற்படுவதுவும் குறையும்.
உயரத்துக்கு ஏற்ப, உடல் எடையை பராமரிப்பதன் மூலம் குறட்டை விடுவதைக் குறைக்க முடியும். வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்வது. அதீத உடல் பருமனைக் குறைப்பது, உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கத் தேவையான முயற்சிகளை எடுப்பது, அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றால் குறட்டையைக் குறைக்க முடியும்.
சிறந்த தூக்க நிலைகளுக்கு சிறப்பு தலையணைகளையும் பயன்படுத்தலாம். வலது அல்லது இடது பக்கம், ஏதாவதொரு பக்கத்தில் தூங்க முயற்சிக்கலாம். படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், சாப்பிடுவதையோ குடிப்பதையோ தவிர்ப்பதுவும், மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்வதுவும் குறட்டையின் தீவிரத்தைக் குறைக்கும்.
அறை மிகவும் சூடாக இருந்தால் தொண்டையில் காற்று புகும்போது, எரிச்சல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் குறட்டைவிட வாய்ப்பிருக்கிறது. இதனால் படுக்கை அறையை முடிந்த வரை காற்றோட்டமாக வைத்திருப்பது நல்லது. குறட்டைக்கு தூசும் ஒரு காரணமாக இருப்பதால், வீட்டைச் சுத்தமாக வைத்துகொள்ளவும் வேண்டும்.
குறட்டையைச் சாதாரணமானது என்று அலட்சியப் படுத்தக்கூடாது. இதனால் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரலாம். ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்று போய் விடுவதுபோல் உணரலாம். ஆனால், இம்மாதிரியான நேரங்களில் மூளை விழித்துக்கொண்டு, உடலில் ஒருவித அதிர்வை உண்டாக்கி, சுவாசப் பாதை மீண்டும் திறந்துகொள்ள வழி செய்துவிடுகிறது. இதனால்தான், தூங்கிக் கொண்டிருப்பவரின் குறட்டைச் சத்தம் திடீரென்று நின்றுவிடுவதும், அடுத்த சில நொடிகளில் அவர் உடம்பைக் சிலிர்த்துக்கொண்டு மீண்டும் சுவாசிக்கத் தொடங்குவதும் நிகழ்கிறது
நில், கவனி!:
பகலில் கட்டுப்படுத்த முடியாத தூக்கம், ரத்த அழுத்த அளவுகளில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள், தூக்கத்திற்குப் பிறகு காலைவேளைகளில் தலைவலி, நெஞ்சு வலி, பணிகளில் கவனம் செலுத்துவதில் சிரமம், இரவில் மூச்சுத் திணறல், இடையூறு விளைவிக்கும் தூக்கம் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை ஒருவர் உணர்ந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
தூங்கப் போவதற்குமுன் சட்டைப் பையில் ஒரு டென்னிஸ் பந்தை வைத்துக்கொண்டு படுத்தால், குறட்டை வராமல் தப்பிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியா? உங்களுக்கு இது தெரியுமா? சொல்லுங்களேன்!