வாழ நினைத்தால் வாழலாம்!

robert samuel...
robert samuel...Image credit - reddit.com

மீபத்தில் வலைத்தளங்களில் ஒரு புது விதமான வேலை பற்றி செய்தி வந்தது. எனக்கு பணம் சம்பாதிக்க சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை என்று சோம்பித் திரியாமல், மற்றவர்களுக்காக வரிசையில் நிற்கும் வேலை செய்வதை ஆரம்பித்தார் ராபர்ட் சாமுவேல் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர். இந்த வேலைக்கு “வரிசையில் நிற்பவர்” அல்லது “வரிசையில் அமர்பவர்” என்று பெயர்.

இந்த நபர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பொருட்கள் விற்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தார். அவர் வேலை இழக்க நேர்ந்தது. அந்த நேரத்தில் ஐபோஃன் 5 விற்பனைக்கு வருவதாக செய்தி வந்தது. புதிதாக எது வந்தாலும், முதலில் வாங்க வேண்டும் என்ற வெறி பணம் படைத்தவர்கள் சிலருக்கு உண்டு. புதிய வரவுகள் குறைந்த எண்களில் தான் விற்பனைக்கு வரும். ஆகவே வரிசையில் பல மணி நேரம் நின்று வாங்க நேரிடும்.

வரிசையில் நிற்பதில் நேரம் விரயமாகும் என்று கருதுவர் பலர் உண்டு. அவர்களுக்குப் பதிலாக வேறு ஒருவர் வரிசையில் நின்றால், நேரம் விரயாமவதைத் தவிர்க்கலாம். தமக்குப் பதிலாக நிற்பவர்க்கு அதற்குத் தேவையான பணம் கொடுக்க வேண்டும். மற்றவருக்காக ஐஃபோன் 5 வரிசையில் 19 மணி நேரம் நின்ற ராபர்ட், முன்னூற்று இருபத்து ஐந்து டாலர்கள் சம்பாதித்தார். இப்படிப் பலருக்காகவும் ஐபோஃன் வரிசையில் நின்று பணம் ஈட்டிய அவர் தனக்கும் ஒரு ஐஃபோன் வாங்கிக் கொண்டார்.

இது ஒரு நல்ல தொழிலாக இருப்பதை உணர்ந்த அவர், நண்பர்களுடன் சேர்ந்து, வரிசையில் நிற்பதற்கு என்று ஒரு நிறுவனம் ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தில் பகுதி நேர வேலையாக மாணவர்கள், வளமான வாழ்க்கைக்கு அதிகப் பணம் தேவைப்படும் என்று நம்பும் இல்லத் தரசிகள் சிலர் பணிபுரிகின்றனர். பொதுவாக, இந்த வேலைக்கு முதல் ஒரு மணி நேரம் இருபத்து ஐந்து டாலர். அடுத்து ஒவ்வொரு அரை மணிக்கும் பத்து டாலர்கள் என்று ஊதியம் பெருகின்றனர். குறைந்த பட்ச ஊதியம் நாற்பத்து ஐந்து டாலர், இரண்டு மணி நேரம் வரிசையில் நிற்க. இது இந்திய மதிப்பில் ரூபாய் 3350.

கீழ்கண்ட இடங்களில் இதைப் போல “வரிசையில் நிற்போர்” அல்லது “வரிசையில் அமர்வோர்” பணி தேவைப்படுகிறது.

வரிசையில் நிற்போர்
வரிசையில் நிற்போர்Image credit - abcnews.go.com

அமெரிக்காவில் முக்கியமான சட்டங்கள் பற்றி செனட் சபையில் விவாதம் நடை பெறும் போதும், அந்த சட்டங்கள் அமலுக்கு கொண்டு வர கணக்கெடுப்பு நடக்கும் போதும், அந்த விவாதங்களைக் காணவும், கேட்கவும் கட்சி சார்ந்தவர்களும், பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று பலரும் விரும்புவார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் இது போன்ற கூட்டத்திற்கு அனுமதியிருக்கும். மேலும் முதலில் வருபவர்கள் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் முதல் வரிசையில் அமர வாய்ப்பு கிடைக்கும். வரிசையில் நிற்பது அவசியமாகிறது.

இதைப் போலவே உயர் நீதி மன்றத்தில் முக்கியமான வழக்குகள் விசாரணை நடக்கும் போது இடம் பிடிப்பதற்கு வரிசையில் நிற்க வேண்டும். பெரிய சிற்றுண்டி விடுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு விருந்திற்கு இடம் கிடைப்பது கடினம். இந்த உணவகங்களில் முன்பதிவு செய்வது அனுமதிப்பதில்லை. புதியதாக வந்த திரைப்படம், இசைக் கச்சேரி, புதிய மடிக்கணிணி, என்று பலவற்றிற்கும் மற்றவர்களுக்கு முன்னால் வாங்க வேண்டும் என்று துடிப்பவர்கள் வரிசையில் நிற்பது தவிர்க்க முடியாதது.

அமெரிக்காவில், இந்தப் பணியைச் செய்பவர்களின் வருட வருமானம் 30 இலட்சம் ரூபாயிலிருந்து 35 இலட்சம் வரை இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள்.

“வரிசையில் நிற்பவர்” அல்லது “வரிசையில் அமர்பவர்” என்பது போலந்து நாட்டில் 1980ஆம் வருடம் ஆரம்பித்ததாகக் கூறுவர். போலந்து நாட்டில் அப்போது கம்யூனிஸ்ட் ஆட்சி. வாழ்க்கைக்குத் தேவையான பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு இருந்தது. எதற்கும் நீணட வரிசையில் வெகு நேரம் நிற்க வேண்டிய நிலைமை. அப்போது இதை சிலர் தொழிலாகச் செய்து வந்தனர்.

சென்னையிலும் இது போல நடந்தது எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். பிரபல பள்ளிகளில் குழந்தைகளை ஆரம்ப வகுப்புகளில் சேர்க்க, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் அனுமதி படிவங்களை கொடுப்பார்கள். இதற்காக முதல் நாள் இரவிலேயே, பள்ளிக்கூடத்தின் வாசலில் வரிசையில் நிற்பவர்கள் உண்டு. சிலர் தங்கள் வீட்டு வேலைக்காரர் அல்லது தோட்டக்காரரை வரிசையில் நிற்க வைப்பர்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் சமத்தாக சாப்பிட 10 எளிய டிப்ஸ்!
robert samuel...

80 மற்றும் 90 வருடங்களில் அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க கான்சுலேட் அலுவலகத்தில், முதல் நாள் இரவு முதலே விசா வாங்குவதற்கான வரிசையில் நிற்பார்கள். இதற்கும் வீட்டு வேலைக்காரர், தோட்டக்காரர், அண்ணா சாலையில் இருக்கும் நடைபாதை வாசிகள் பணம் வாங்கிக் கொண்டு வரிசையில் நிற்பது வழக்கம்.

எந்தத் தொழிலானால் என்ன? நாணயமான வழியில் பொருள் ஈட்டும் போது.

“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்” என்று சரியாகச் சொன்னார் கவியரசர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com