இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின், (ஸ்பிக் மேகே). 9ஆவது மாநாடு ஐஐடி சென்னையில் திங்கள் கிழமை 20ஆம் தேதி தொடங்கியது. ஒரு வாரம் நடக்கின்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு மாநிலங் களிலிருந்தும், 1500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கிரார்கள். காலையில் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள், மாலையில், பல மாநிலங்களைச் சேர்ந்த பிரபலமான இசை மற்றும் நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.
முதல் நாளில், ஐஐடி சென்னை, பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து நடத்தவிருக்கும் இசை ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஐஐடி, டைரக்டர் காமகோடி அவர்களும், மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களும் பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திரிபுரா மாநில ஆளுநர், இந்திரசேனா ரெட்டி கலந்து கொண்டு உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜா சொன்ன முக்கிய கருத்துகள்:
“இசை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை வந்தேன். இது நாள் வரை இசையைக் கற்றுக் கொள்ளவில்லை. செய்யும் செயலில் தாகத்தோடும், லட்சியத்தோடும் முயற்சி செய்தால், எந்தத் துறையிலும் சாதிக்க முடியும். நான் எந்த சாதனையும் செய்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மூச்சு விடுவது இயல்பாக நடப்பது போல, இசையும் இயல்பாக வருகிறது. யாராவது நான் நன்றாக இசையமைப்பதாகச் சொன்னால், நன்றாக சுவாசிக்கிறீர்கள் என்று சொல்வது போல இருக்கிறது. இந்த இசை ஆராய்ச்சி மையம் மூலம் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும்.”
விருந்தினர்களை மேடைக்கு அழைத்து வரும்போது தமிழ்நாட்டின் பழமையான இசை “சிவ வாத்தியம்” வாசிக்கப்பட்டது. தன்னுடைய உரையில் இதைப்பற்றிக் குறிப்பிட்ட ஐஐடி, இயக்குநர் காமகோடி அவர்கள் பகிர்ந்து கொண்டவையிலிருந்து…
“ஒவ்வொரு மாநிலத்திலும், வித விதமான கலாச்சாரம், பாரம்பரியம், இசை, நடனம் போன்ற ஆயக்கலைகள் இருக்கின்றன. தமிழக பாரம்பரிய கலைகளான பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், இசையில் மேலும் ஆராய்ச்சிகள் செய்ய முடியும். அதனை மனதில் நிறுத்தி, இந்த ஆராய்ச்சி மையம் அமைக்க இசைஞானியை அணுகினோம். விளையாட்டுப் போட்டிகளில் சாதனை செய்யும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டை அறிமுகம் செய்துள்ளோம். அதைப்போலவே, கலைஞர்கள் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.”
இது முடிந்தவுடன் பத்மவிபூஷன் பத்மா சுப்ரமணியம் அவர்களின் பரதநாட்டியம் நடைபெற்றது. அற்புதம் என்று சொல்வதைத் தவிர, இந்த நிகழ்ச்சியை வருணிக்க வேறு வார்த்தைகள் தெரியவில்லை. பாடலின் தன்மைக்கேற்ப மாறும் முக பாவங்கள், அங்க அசைவுகள், என, தொய்வில்லாத நடனம். இதனையடுத்து, பத்மவிபூஷன் பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா அவர்களின் புல்லாங்குழல் இசை.
இரண்டு கலைஞர்களுமே எண்பதைத் தாண்டியவர்கள். அவர்களுக்கு பக்க பலமாக வாசித்தவர்கள் இளைஞர்கள். இந்த கலைஞர்களின் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது, வாழ்க்கையை கலைப்பணிக்காக அற்பணிப்பவர் களுக்கு வயது ஒரு தடைக்கல் அல்ல என்பது புரிகிறது.
ஒரு வாரம் நடக்கின்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு காலையில் யோகா வகுப்பில் தொடங்கி, அவரவர்களுக்குப் பிடித்த கலைகளைப் பற்றி அறிந்து கொள்ள வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எல்லா நாளும், மாலையில் பிரபலமான கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள். ஞாயிறு, 26ஆம் தேதி வெளியூரிலிருந்து வந்த மாணவர்கள் சென்னையை சுற்றிப் பார்ப்பதுடன் நிகழ்ச்சி முடிவடைகிறது.
ஸ்பிக் மேகே – ஒரு சிறிய குறிப்பு:
SPIC MACAY – Society for the Promotion of Indian Classical Music And Culture Amongst Youth
இந்த அமைப்பு டாக்டர்.கிரன் சேத் என்பவரால், 1977ஆம் வருடம் ஐஐடி, டெல்லியில் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு நான்கு தூண்களில் நிற்கின்றன – கலைஞர்கள், தொண்டர்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் ஆதரவாளர்கள். இதனுடைய கொள்கை – இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை மாணவர்களிடையே எடுத்துச் செல்வதின் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்துவது.
அமெரிக்கா, கனடா, பத்து ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த அமைப்பின் கிளைகள் இயங்குகின்றன. இந்தியாவில் மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் எல்லா கல்லூரிகளிலும் கிளைகள் உள்ளன.