

ஐந்து என்பதை பேச்சுத் தமிழில் அஞ்சு என்று சொல்வோம். தமிழ் ஆர்வலர்கள் கூட பொதுவெளியில் அஞ்சு என்றுதான் சொல்வார்கள்.
ஐந்து... அஞ்சு இரண்டுக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு உள்ளது.
ஐந்து எண்ணிக்கையை மட்டும் குறிக்கும். அஞ்சு எண்ணிக்கை மட்டுமல்ல... ஒரு பெண்ணின் பெயரையும் குறிக்கும்.
மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த ஐம்பொறிகள் மூலமாக நாம் ஒவ்வொரு நாளும் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
நல்ல விஷயங்கள் தொடங்கும் போது பிள்ளையார் பூஜை நடக்கும்.
"என்ன? பிள்ளையார் சுழி போட்டாச்சா..." - இப்படியும் கேட்பார்கள்.
"முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்"
இது ஆதிசங்கரர் இயற்றிய 'கணேச பஞ்சரத்னம்' ஸ்தோத்திரத்தில் முதலாவதாக இடம்பெற்றது.
முழுமுதல் கடவுள் விநாயகப் பெருமானை போற்றிப் பாடும் ஐந்து ரத்தினங்கள் என்று பொருள்படும். இதில் அவரின் பெருமைகளை விளக்கும் ஐந்து சுலோகங்கள் உள்ளன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது என்றாலும் ஒருமுறை அதைப் படித்து பாடிப் பாருங்கள்.
உங்கள் குரல் பிரபல பின்னணிப் பாடகர் 'அருண்மொழி' குரலாக மாறும்.
'வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்' - தாலாட்டுப் பாட வா'
படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல் அது. உச்சரிக்க சிரமமாக இருக்கும் வரிகளை கூட அழகான டியூன் மூலம் அனைவரையும் பாட வைத்தவர், வழக்கம் போல இசைஞானி தான்.
"ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே... "
- திருமூலர் திருமந்திரத்தில் தும்பிக்கையை விநாயகரின் ஐந்தாவது கரமாக போற்றி பாடுகிறார்.
நாம் வாழும் நிலப்பரப்பை ஐந்து வகையாக பிரித்துள்ளார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவைகளே அந்த நிலங்கள். ஐந்து நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது.
'பஞ்சதந்திரம்' - இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு.
இதை இயற்றியவர் விஷ்ணு சர்மா. மன்னன் ஒருவனின் மூன்று புதல்வர்களுக்கு அரசியல் தொடர்பான ஐந்து முதன்மையான கருத்துகளை சொல்லிக் கொடுத்து அவர்களை புத்திசாலிகளாக மாற்றினார். அந்த ஐந்து கருத்துக்களின் தொகுப்பு 'பஞ்சதந்திரம்'.
‘பஞ்சதந்திரம்' என்றதும் "முன்னாடி பின்னாடி என்ன இருந்தது.." என்று கேட்கத் தோன்றும். கிரேஸி மோகன் அவர்கள் எழுதிய பிரபலமான டயலாக். ஐந்து நண்பர்கள் சேர்ந்து அடிக்கும் லூட்டியை தனது வழக்கமான பாணியில் எழுதி இருப்பார் கிரேஸி மோகன். முழு நீள காமெடி படம் இது.
காவிரி மற்றும் அதன் கிளைகளான குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு இந்த ஐந்து ஆறுகளும் சூழ்ந்துள்ள புனித தலம் திருவையாறு. இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவன் பஞ்சநதீஸ்வரர் என்றும் ஐயாறப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.
தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா ஆண்டுதோறும் திருவையாறில் அவரது நினைவிடத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான கர்நாடக இசை கலைஞர்கள் அவரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் (நாட்டை, ஆரபி, கெளளை, வராளி, ஸ்ரீராகம்) பாடி வழிபடுவார்கள்.
பஞ்சாக்னி என்பது நான்கு புறமும் நெருப்பு மூட்டி நடுவில் நின்று சூரியனை பார்த்தபடி செய்யும் கடுமையான தவம். ஐந்து நெருப்பு குளியல் என்றும் அழைக்கப்படுகிறது. அகங்காரம் மற்றும் முந்தைய கர்ம வினைகளை அழித்து ஆன்மாவை தூய்மைப்படுத்தும் செயல்முறையாக கருதப்படுகிறது. உலக நன்மைக்காக இன்றும் இத்தவம் சில யோகிகளால் செய்யப்படுகிறது.
'ஐந்து நெருப்பு' என்ற பெயரில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சிறுகதை ஒன்று எழுதியுள்ளார். நான்கு பக்கமும் நெருப்பு சூழ்ந்திருக்க தப்பி பிழைக்க நினைக்கும் ஒரு மனிதனின் அக நெருக்கடியை விவரிக்கும் கதை இது.
முக்கிய திருவிழாக்கள் வரும் போது பஞ்சமூர்த்திகள் வீதியுலா காட்சி நடைபெறும். சிவன், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் - இவர்கள் தான் பஞ்சமூர்த்திகள்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் ‘பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்’ சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளை வழிபட்டால் நம் வாழ்க்கையில் 'பஞ்சம்' என்பதே இல்லாமல் போகும்.