
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டமைக்கப்படும் அனைத்து விதமான சொத்துக்களும் ஏதோ ஒரு வகையில் சேதமாவதோ அல்லது பயன்படாமல் போவதோ இயல்பு. அந்த நேரங்களில், அனைவருக்குள்ளும் எழும் ஒரு பொதுவான உணர்ச்சி அன்றைய தினம் நம்மை ஆளும் அரசைப் பற்றிய கோபம்தான். காரணம் அவர்களுக்கு, தான் மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தில் அரசு சார்ந்த வேலைப்பாடுகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஆனாலும் சில நேரங்களில் அடி மட்டத்தில் ஏற்படும் கவனக்குறைவாலோ அல்லது அலட்சியத்தாலோ ஏற்படும் பிரச்சனைகளை உயர்மட்ட அதிகாரிகளுக்குத் தெரியாமல் போகலாம். அந்நேரங்களில் பொது மக்கள் என்ற கடமையுணர்வுடன் நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
உள்ளூர் அதிகாரிகளின் விவரங்கள்:
கிராம நிர்வாக அதிகாரி (VAO), தாசில்தார் அல்லது உள்ளூர் கவுன்சிலரோடு நிறுத்திக்கொள்ளாமல், சில முக்கியமான பொறுப்புகளில் இருப்பவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தொகுதி மேம்பாட்டு அலுவலர் (BDO) (Block Development Officer): கிராமப்புற மேம்பாடு மற்றும் தொகுதி அளவில் உள்ள சிக்கலைத் தீர்ப்பதற்கான பொறுப்பில் உள்ளவர்கள்.
மண்டல அதிகாரி (Zonal Officer): குறிப்பிட்ட மண்டலங்களுக்குள் இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தொடர்பான பிரச்சினைகளை கையாளக் கூடியவர்கள்.
மாவட்ட ஆட்சியர்/துணை ஆணையர் (District Collector/Deputy Commissioner): ஒவ்வொரு மாவட்டத்தின் மிக உயர்ந்த நிர்வாக அதிகாரிகளான இவர்களிடம், எல்லாவிதமான மாவட்ட அளவிலான பிரச்சினைகளையும் மேற்பார்வையிடும் பொறுப்பு உள்ளது. தேவைப்பட்டால் நீங்கள் இவர்களை அணுகலாம்.
சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் (SDM) ( Sub-Divisional Magistrate): சட்டம் ஒழுங்கு மற்றும் பேரிடர் மேலாண்மை சார்ந்த விஷயங்களைத் துணைப்பிரிவு (Sub- division) மட்டத்தில் இருந்து நிர்வகிக்கக் கூடியவர்கள்.
மாநில அரசு துறைகள்:
சில நேரங்களில் உள்ளூர் சார்ந்த பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருந்தால், அந்தந்த மாநில அரசு துறைகளுக்கு அந்தப் பிரச்சனை சம்மந்தமான குரலை எழுப்பலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் பேரிடர் மேலாண்மை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரம் போன்ற பல்வேறு பிரச்சனைகளைக் கையாளக்கூடிய சில துறைகள் உள்ளன. நேரில் சென்றோ அல்லது மாநில அரசு இணையதளங்களில் இருக்கும் ஹெல்ப்லைன்கள் மூலமாகவோ புகார்களை பதிவு செய்யலாம்.
தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் (NCH) : தரம் குறைந்த பொருட்கள் அல்லது சேவைகள் தொடர்பான புகார்களுக்கு, பொதுமக்கள் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனை (National Consumer Helpline) பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம். இந்த NCH-ன் பணியே பொதுமக்கள் கொடுக்கும் எல்லா விதமான புகார்களையும் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நம்மை தொடர்பு கொள்ள வைப்பதுதான்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC): உங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சனைகளை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் (National Human Rights Commission) புகார் அளிக்கலாம். தனிப்பட்ட உரிமையை மீட்டெடுப்பதில் இந்த ஆணையம் மும்முரமாக செயல்படும்.
சட்ட உதவி : மேலே குறிப்பிட்ட அனைத்து நிர்வாகம் சார்ந்த அலுவலர்களும் பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை என்றால், இந்திய அரசியலமைப்பின் article 32 அல்லது article 226 வது பிரிவின் கீழ், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு (writ petition) தாக்கல் செய்வதன் மூலம் சில சட்ட நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளலாம். இந்த சட்டங்கள் பொதுமக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கோ அல்லது பிரச்னையை தீர்ப்பதற்கோ நீதிமன்றத்தைத் தலையிட வைக்கும்.
பொறுப்புணர்வை உறுதி செய்தல்:
அப்படி சில நேரங்களில் அரசாங்க அதிகாரிகள் உங்கள் பிரச்சனைகளுக்குப் பதிலளிக்காமல் இருந்தால், பொதுமக்கள் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை’ பயன்படுத்தி புகார்களின் நிலை மற்றும் அது ஏன் இன்னும் சரி செய்யப்படாமல் இருக்கிறது போன்ற காரணங்களை பற்றிய தகவல்களைப் பெறலாம். கூடுதலாக, பொதுநல வழக்குகள் (Public Interest Litigation) (PIL) நீதிமன்றங்களில் நீங்கள் தாக்கல் செய்யும் போது, நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் தலையிட்டு தேவையான தீர்வை பெற்று தரும்.
ஆக, என்னதான் அரசியல்வாதிகளுக்கு எல்லா பொறுப்புகளையும் கையாளக்கூடிய அதிகாரம் இருந்தாலும், பொது மக்களாகிய நமக்கும் பிரச்சனைகளைத் தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரமும் இந்த ஜனநாயக நாட்டில் பல வழிகளில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம். இதைப் பற்றி அனைவருக்கும் தெரிவிப்போம்.