
சமீபத்தில் நெருங்கிய நண்பர் - ஓய்வு பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் - அவர்களைச் சந்தித்த போது சில விஷயங்களை நெத்தி அடி மாதிரி சொல்லிக் கொண்டிருந்தார்.
"மாணவர்கள் கெட்டுப் போவதற்கு ஆசிரியர்களே முழுக்க முழுக்கக் காரணம் என்கிற குற்ற சாட்டு முன் வைக்கப்படுகிறதே?" என்றேன்.
ஒன்றிரண்டு பேர் செய்யும் தவறு ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமூகத்தின் மீது பழி ஏற்படுத்துகிறது. எங்களைப் போன்று ஆசிரியர்களை எதிர் கூண்டில் நிறுத்தி விட்டு, பெற்றோர்களும், சமூகமும் எதிரில் நிற்பது எந்த விதத்தில் நியாயம் சார்? மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியருக்கு மட்டும் தானா? சொல்லப்போனால் மாணவர்கள் கெட்டுப் போவதற்குக் காரணமே பெற்றோர்களும், சினிமாவும், சமூகமும் தான்."
"எப்படிச் சார்? "என்று நான் கேட்ட போது விவரித்தார்...
"வெளிநாட்டு திரைப் படங்களில் குழந்தைகள் வரும் காட்சிகளை மிகக் கவனத்துடன் எடுக்கிறார்கள். ஆனால் இங்கு எடுக்கப்படும் படங்கள் வகுப்புக்கு வரும் ஆசிரியர்களைக் கேலிசெய்வது, ஆசிரியைக்கு மாணவன் காதல் கடிதம் கொடுப்பது, மாணவிகளுக்குப் பாலியல் தொந்திரவு கொடுப்பது, வகுப்பில் மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது, ஆசிரியர் மீது காகிதஅம்பு விடுவது.... இம்மாதிரி காட்சிகளைத் திரை படத்தில் காண்பிக்கிறார்கள். அதைப் பார்த்து, அதன் படி மாணவர்கள், அதைச் செய்து விடுகிறார்கள்.
மனித நடத்தை மற்றும் ஆளுமை வளர்ச்சியில் சிறார் பருவமும், டீன் ஏஜ் பருவமும் தான் மிக முக்கியமானவை. அந்தப் பருவம் கண்ணாடி பாத்திரம் மாதிரி பாதுகாக்க பட வேண்டிய ஒன்று. பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும், நமது மூளையில், யோசிக்காமல் முடிவெடுப்பதற்கென்றும், ஒருபகுதி இருக்கிறது என்றால், நம்புவீர்களா? ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
இன்றைய சூழலில், நம் எல்லோரிடையேயும் காணப்படும் பயம், பதற்றம் போன்ற உணர்வுகள்… கோபம், கொந்தளிப்பு சில வேளைகளில் யோசிக்காமல் சில கணநேர முடிவுகளை நாம் எடுப்பதைத்தான் எமோஷனல் ஹை-ஜாக் என்று அழைக்கிறோம். வளர்ந்த பக்குவமடைந்த பொறுமைசாலியான நாமே இப்படி யோசிக்காமல், சிலவற்றைச் செய்துவிடும் போது மாணவ பருவம் மட்டும் என்ன விதி விலக்கா?.
இதற்கெல்லாம் காரணம் நமது மூளையின் ‘அமிக்டலா’ (amygdala) என்ற பகுதியும், அங்கு ஏற்படும் மாற்றங்களும்தான் என்கிறது மருத்துவ அறிவியல்.
அமிக்ட்லா என்கிற பகுதி உடனடி எதிர்மறை எண்ணங்கள், மற்றும் கோபத்தை, வெளிப்படுத்தும். தான் செய்வது சரியா? தவறா? என்று முடிவெடுக்க முடியாத நிலை... நமது கோபம், நமது பயம், நமது வெறுப்பு, ஆத்திரம், அகங்காரம், அன்பு, கனிவு, துக்கம், சோகம் ஆகிய உணர்ச்சிகளை உற்பத்தி செய்வது 'அமிக்டலா' தான்.
அதனால்தான், ஆசிரியர்கள் ஆசிரியைகள் திட்டினால், அவமானப்படுத்தினால், அவர்களை வகுப்பில் கத்தியால் குத்துவது, கொஞ்சம் எமோஷன் ஆகி தற்கொலை செய்து கொள்வது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பருவத்தில் இம்மாதிரியான நிகழ்வுகளை பார்த்து, அம்மாதிரி நடக்கக் காரணமாகுவது சமூக ஊடகங்களா? திரைப்பட இயக்குனர்களா? இல்லை பெற்றோர்கள் குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு டி வி யில் கேவலமான படம் பார்பதினாலா?
இப்படிப் பாதிக்கப் பட்ட மாணவர்கள் மாணவிகளுக்கு, மனோதத்துவ முறையில் அன்பாகப் பழகி பேசி அரவணைத்து அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு அரசு முயற்சிக்க வேண்டும். குறைந்த பட்சம் 20 மாணவ மாணவியருக்கு ஒரு மனோதத்துவ ஆசிரியர் நியமிக்கப் பட வேண்டும்..
போக்சோ சட்டம் பற்றிய அறிவு மேலோட்டமாகத் தான் அவர்களுக்குத் தெரிய வருகிறது. அதன் தீவிரம் பற்றி மனோ தத்துவ ஆசிரியர் விளக்கம் கொடுத்தால் இது மாதிரியான நிகழ்வுகள் குறையும்."
அவர் பேச்சின் அணுகுமுறை, மாணவர்களின் செயல்களை மருத்துவ அறிவியல் மூலமாக நிரூபித்தது, அவர்கள் மீது தப்பு இல்லை சூழ்நிலை தான் முக்கியப் பங்கு என்கிற வாதத்திலும் எப்படிப் பாதிக்கப் பட்டவர்களைக் கையாள்வது என்கிற முறையில் நியாயம் இருப்பதை உணர்ந்து, அவரைப் பாராட்டி விட்டு வந்தேன்.
‘அமிக்டலா’ (amygdala) பற்றி google சொல்வது என்ன? :
ஒவ்வொருவாரின் மூளைக்குள்ளே ஓர் ஓரத்தில் அடியில் இருக்கும் ஒரு தக்கினியூண்டு சதைக்கட்டு, மூளையின் இரண்டு பக்கமும், பக்கவாட்டுப் பகுதியில் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டுள்ள. சிறிய சைஸ் பாதாம்பருப்பு அளவே உள்ள ஓர் உறுப்பு. பாதாம்பருப்பில் கிரேக்கப் பெயர் - அமிக்டலா. 'ஜோசப் லே டவுக்ஸ்' என்ற நரம்பியல் நிபுணர்தான் முதன்முதலில் அமிக்டலாவுக்கும், உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து சொன்னவர்.
நமது கோபம், நமது பயம், நமது வெறுப்பு, ஆத்திரம், அகங்காரம், அன்பு, கனிவு, துக்கம், சோகம் ஆகிய உணர்ச்சிகளை உற்பத்தி செய்வது 'அமிக்டலா' தான்.