மேலும் மேலும் பேருந்துகளா? பின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது எப்படி?

TN Bus
TN BusImg Credit: ABP Live
Published on

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நம் சென்னையில், எப்பொழுது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் (Traffic Jam) ஏற்பட்டு, வாகன ஓட்டிகளையும், பயணியரையும் சிரமப்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. 

இவ்வளவுக்கும் நம் சென்னையில் மின்சார ரயில் (EMU), வெகு ஜன விரைவுப் போக்குவரத்து (மாடி ரயில்) (MRTS), மெட்ரோ (Metro) என்று மூவகை ரயில்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. மேலும் பேருந்துகள், வேன்கள், ஆட்டோக்கள், டூ வீலர்கள், சைக்கிள்கள் என்று அத்தனையும் புழக்கத்தில் உள்ளன.

சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள் (Over Bridges), கீழ் பாலங்கள் (Sub ways) என்று நெரிசலைக் குறைப்பதற்கான அத்தனை வசதிகளும் செய்யப்பட்ட பிறகும், நெரிசல் மட்டும் குறைந்த பாடில்லை!

போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் காவல் துறையினர் பல இடங்களை ஒரு வழிப் பாதையாக்கியும், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே ‘யூ டர்ன்’ எடுக்க வேண்டுமென்று விதி முறைகளை வகுத்தாலுங் கூட, பல நேரங்களில் பல இடங்களில் நீண்ட நேரம் நிற்க வேண்டியும், பல கிலோ மீட்டர்களுக்கு நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்ல வேண்டியுமே இருக்கிறது!

இதனைக் குறைப்பதற்கான சில உபாயங்கள் உள்ளன:

எங்கெல்லாம் ரயில்கள் போகின்றனவோ, அந்த இடங்களுக்குப் பேருந்துகள் இயக்குவதைத் தடை செய்ய வேண்டும். உதாரணமாக சென்னையிலிருந்து செங்கல்பட்டிற்கு விரைவு ரயில்களும், மின்சார ரயில்களும் போகின்ற நிலையில், திருவான்மியூரிலிருந்து, தாம்பரத்திலிருந்து, இன்னும் இது போன்ற பல இடங்களிலிருந்து செங்கல்பட்டிற்குப் பேருந்துகள் விடுவதை நிறுத்தி விட வேண்டும்.

மாறாக, தேவைக்கேற்ப குறிப்பிட்ட இடைவெளிகளில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டிற்கு ரயில்களை இயக்க வேண்டும். ’பீக் அவர்ஸ்’ என்றழைக்கப்படும் உச்ச நேரத்தில் அடிக்கடியும், மற்ற நேரங்களில் சற்று இடைவெளி விட்டும் இயக்கலாம்.

ரயில் போகாத இடங்களுக்கு மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, மறைமலை நகரிலிருந்து உள் பகுதிகளுக்கு, ரயில் இணைப்பு இல்லாத இடங்களுக்கு பெரிய, அல்லது மினி பேருந்துகளை வசதிக்கேற்ப இயக்க வேண்டும்.

அவ்வாறே கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோயில் பகுதிகளில் இருந்தும், ரயில் நிலையத்தை இணைக்கும் விதமாகப் பஸ்களை இயக்க வேண்டும்.

சராசரியாகக் கணக்கிட்டாலே,15 பேருந்துகள் ஏற்றிச் செல்லும் பயணிகளை ஒரு 12 பெட்டிகள் கொண்ட ரயில் எளிதாகக் கொண்டு சென்று விடும்.

இதையும் படியுங்கள்:
சாமான்ய மனிதனுக்கான பேருந்து வேண்டும்!
TN Bus

இதன் மூலம் ஏற்படும் பயன்கள்:

  • சாலை நெரிசல் தவிர்க்கப்படும்;

  • ரயில் நிலையங்களிலிருந்து தள்ளி இருப்பவர்களுக்குப் பேருந்து வசதி கிடைக்கும்;

  • ரயில் பயணம் பாதுகாப்பானதுடன், பயணக் களைப்பையும் போக்கும்;

  • மின்சார ரயில் பெட்டிகளிலும் கழிவறை வசதியை ஏற்படுத்திப் பயணியருக்கு, குறிப்பாக சர்க்கரை வியாதியுள்ள மூத்தோருக்கு உதவலாம்;

  • மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்துக் கோடையிலும் குளிர்வான பயணத்தை அளிக்கலாம்;

  • பல டீசல் பேருந்துகளிலிருந்து வரும் மாசு கட்டுப்படுத்தப்படும், எரிபொருள் மிச்சமாகும்;

  • விபத்துக்கள் குறையும்;

  • ரயில்கள் மின்சாரத்தில் இயங்குவதால் இயக்கச் செலவும் குறைவு; காற்று மாசடைவதும் தடுக்கப்படும்; மற்றும்

  • ரயில் நிலையங்களை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மால்கள் இதன் மூலம் புத்துயிர் பெறும்!

வளர்ந்த மேலை நாடுகளில் இம்முறையைத்தான் பின்பற்றுகிறார்கள்.

நகரின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்குச் செல்லும் பேருந்துகளெல்லாம் அங்கு கிடையாது.

ஆனால் அனைத்து ரயில் நிலையங்களையும் உள் உள்ள பகுதிகளுடன் பேருந்தால் இணைத்து விடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை - இரண்டாவது பேருந்து!
TN Bus

நம் வரவேற்பறை ஏற்கெனவே உள்ள பர்னிச்சர்களால் நிரம்பி வழிகையில், நாம் புதிதாகப் பர்னிச்சர் வாங்குவோமா?

ஆனால் அரசாங்கம் அந்தத் தவறைச் செய்து கொண்டே இருக்கிறதே!

தற்போதுள்ள பேருந்துகளே ‘ப்ரீ’யாகச் செல்ல முடியாத நிலை உள்ளபோது, மேலும் 3,000 பேருந்துகள் வரப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றனவே!

அப்படியானால் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நெரிசலைத் தடுக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்றுதானே எண்ணத் தோன்றுகிறது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com