உலகின் 179 நாடுகளில் இந்தியா சர்வதேச ஊழல் குறியீட்டீன்படி 95 வது இடத்தில் உள்ளது. வரலாற்று ரீதியாகவே ஊழல், இந்திய அரசியல் மற்றும் அதிகாரத்துவத்தில் ஒரு பரவலான அம்சமாக இருந்து வருகிறது. இந்தியாவில் ஊழல், இலஞ்சம், வரி ஏய்ப்பு, போலி பணபரிமாற்றம், பொதுப் பணத்தை கையாடல் செய்தல் போன்ற வடிவங்களில் பொருளாதாரக் குற்றங்கள் நடைபெறுவதை ஊடகங்கள் மூலம் அறிய வருகிறோம். பொருளாதார மோசடிகள் அரசு கருவூலத்தின் இழப்பு, ஆரோக்கியமற்ற முதலீட்டு சூழ்நிலை மற்றும் அரசு மானிய சேவைகள் செலவு அதிகரிப்பு ஆகியவற்றில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் நிதிபற்றாக்குறையையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வொன்றின்படி சுகாதாரம், நீதித்துறை,காவல்துறை, கல்வி போன்ற அரசு வழங்கும் முக்கியமான 11 அடிப்படை சேவைகளில் மிக அதிக அளவில் ஊழல் நடப்பதாக தெரிய வருகிறது.
வங்கிகளில் நடக்கும் நிதிமோசடிகள் தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல்கள் பொது மக்களுக்கு அதிர்ச்சி தருவதாக உள்ளது. 2014-க்குப் பிறகு, அரசு நடத்தும் வங்கிகளில் மோசடிகள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. 2017-18 உடன் ஒப்பிடும்போது, 2018-19ல் மோசடிகள் 70 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன. 2013-14 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிதியாண்டில், 10,171 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள், அடுத்த ஆண்டில் 19,455 கோடியாக அதிகரித்தது. 2015-16ல் சற்று குறைந்து 18,699 கோடி ரூபாயாக இருந்த இது, மீண்டும் 2016-17ல் வேகமாக அதிகரித்து 23,944 கோடி ரூபாயை எட்டியது. அதன் பிறகு, மோசடிகளில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டது. 2017-18 ஆம் ஆண்டில் 41,168 கோடியாகவும், 2018-19ல் 71,543 கோடியாகவும் உயர்ந்தது. 2019 ஏப்ரலில் தொடங்கிய வணிக ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மோசடி 95,760 கோடி ரூபாய் என்று நிதி அமைச்சர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்த ஆறு மாதங்களில், வாராக்கடன் 64,509 கோடி ரூபாயாக இருந்தது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான, பாரத மாநில வங்கியில் 2018-19இல் 22,000 க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் 25,417 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி (10,822 கோடி ரூபாய்), பாங்க் ஆப் பரோடா (8,273 கோடி ரூபாய்) ஆகியவை மோசடியில் அடுத்த இரண்டு இடங்களை பிடித்துள்ளன. நாட்டின் இந்த மூன்று மிகப்பெரிய அரசு வங்கிகளின் நிலைமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லா பணமோசடி சம்பவங்களிலும், மோசடி செய்யப்பட்ட பணத்தில் 90 விழுக்காடு பொதுத்துறை வங்கிகளிடமிருந்தே சென்றுள்ளது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் பணமோசடிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. சமீபகாலங்களில் முன்பை விட வாராக் கடன்களின் மீது ரிசர்வ் வங்கி அதிக கண்டிப்பு காட்டுவதால்தான் இதுபோன்ற வழக்குகள் அதிகம் வெளிவருவதாகவும் கூறப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளின் முதுகெலும்பை உடைத்த இத்தகைய பணமோசடிகள், இப்போது எல்லா இடங்களுக்கும் பரவலாகிவிட்டது. 2017 ஆம் ஆண்டில் தேசிய பொருளாதார குற்றவியல் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பொருளாதார குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், பத்து லட்சம் மக்களுக்கு 110 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ள பொருளாதார குற்றங்கள், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 111.3 ஆக அதிகரித்துள்ளது. ஏடிஎம்கள் தொடர்பான குற்றங்கள் முதல், கள்ள நோட்டு என பலவிதமான குற்றங்கள் இதில் அடங்கும்.
பொருளாதார குற்றங்கள் பதிவு செய்யப்படும் முக்கிய நகரங்களில் இப்போது முதலிடத்தை பிடித்துள்ளது ஜெய்ப்பூர். அதையடுத்த இடங்களை பிடிக்கும் நகரங்கள் லக்னோ, பெங்களூரு, டெல்லி மற்றும் ஹைதராபாத். அடுத்த இடங்களை பிடிக்கும் நகரங்கள் கான்பூர், மும்பை, புனே, நாக்பூர் மற்றும் காசியாபாத்.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான அனைத்து வாராக்கடன் வழக்குகளையும் மோசடி என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளைக் கண்டறிய 2015 ஆம் ஆண்டில் மத்திய மோசடி பதிவேடு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது
2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா கடன் திட்டத்தின் கீழ், சிறு வணிகங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 50 ஆயிரம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இத்தகைய கடன்கள் இப்போது வங்கிகளுக்கு தலைவலியாகிவிட்டன. ஏனெனில், இந்த திட்டத்தின் கீழ், மூன்று லட்சத்து பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்கள் திருப்பித் தரப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது.
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கடன்களை திருப்பிச் செலுத்தும் திறனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்று கடந்த மாதம் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கூறினார். தள்ளாடும் பொருளாதார படகை நிலைநிறுத்தவும், சரியான இடத்திற்கு கொண்டு செல்லவும் முத்ரா கடன் திட்டத்தை முறைப்படுத்துவது சரியான முயற்சியாக இருக்கலாம். பிறகு, இதுபோன்ற கடன்களைக் கொடுக்கும்போது வங்கிகள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோசடி செய்யும் கும்பல்களிலிடமிருந்து பொது மக்களின் பணத்தை காப்பாற்றுவதில், வங்கிகளும், பிறநிதி நிறுவனங்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சேவைக் கட்டணம் என்ற பெயரிலெல்லாம் சாமான்ய மக்களிடம் வசூல் செய்யும் வங்கிகள் அதிகாரவர்கத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும் வளைந்து செயல்படும் போக்கு மாறவேண்டும். சாமான்ய மக்களையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அவை இழந்து வரும் பொதுமக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற உடனடி முயற்சிகள் எடுக்கவேண்டும். அப்போதுதான் நாடும், வீடும் பொருளாதாரத்தில் ஏற்றத்தை காணமுடியும்.