
ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் பங்கு முக்கியமானது. அதனடிப்படையில் ஒவ்வொரு நாடும் புதுப்புது சுற்றுலாத் தலங்களை உருவாக்கியும், ஏற்கனவே இருக்கின்ற சுற்றுலாத் தலங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்தியும் வருகிறது. அவற்றுள் இந்தியாவும் விதிவிலக்கல்ல.
சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச சுற்றுலா தலமான விவேகானந்தர் பாறைக்கும், 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி பாலம் ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. இந்தியாவின் முதல் காண்ணாடி பாலமாக இது திகழ்கிறது.
விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையானது கன்னியாகுமரி கடலின் நடுவில் அமைந்துள்ளது. இந்த நினைவுச் சின்னங்களை கண்டு களிப்பதற்கு இந்தியா முதல் உலக நாடுகள் வரை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
விவேகானந்தர் நினைவிடத்திலிருந்து மிகவும் ஆழமான கடலை படகு வழியாக கடந்து திருவள்ளுவர் சிலையை அடைய வேண்டிய நிலைமை இருந்து வந்தது.
மேலும், திருவள்ளுவர் சிலை படகு நிறுத்தும் தளத்தில் குறைவான ஆழம் மற்றும் அதிகப்படியான பாறைகள் உள்ளதால் கடல் நீரோட்டம் குறையும் காலகட்டத்தில் விவேகானந்தர் நினைவிடத்திலிருந்தது திருவள்ளுவர் சிலைக்கு இடையே படகு போக்குவரத்தும் நிறுத்தப்படும்.
எனவே, இரண்டு நினைவுச் சின்னங்களுக்கும் இடையே பாலம் ஒன்றை அமைக்க பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழக அரசு விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே கண்ணாடி பாலம் அமைப்பதற்கான முதற்கட்டப் பணியைத் துவங்கியது. மேலும், அதற்காக ரூ. 33 கோடி நிதியையும் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் வெள்ளிவிழாவின் போது இந்த பாலம் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
அதனடிப்படையில், கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி விவேகானந்தர் நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே அமைந்த கண்ணாடிக்கு கூண்டுப் பாலத்தை தமிழக முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நவீன வசதிகளை வழங்கும் நோக்கிலும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த பாலம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி பாலம் 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது. அரிப்பு மற்றும் பலத்த கடல் காற்று உள்ளிட்ட கடுமையான கடல் நிலைமைகளைத் தாங்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த கண்ணாடிப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதன் நீடித்த தன்மையை மட்டுமல்ல, அதை கடந்து செல்பவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
புதிய கண்ணாடிப் பாலம் மூலம், விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் படகு போக்குவரத்தை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் காண்ணாடி பாலம் வழியாக நிதானமாக கடலின் அழகை ரசித்தவாறே செல்ல முடியும். இது அவர்களின் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்துகிறது.
இந்த கண்ணாடி பாலம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் வரலாற்றில் தனி இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.