இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் - வரமாக மாற்றுவோம்!

India's population
India's population

தற்காலங்களில் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினையாக மக்கள் தொகை பெருக்கமோ, மக்கள் தொகை குறைவோ காணப்படுகிறது.

பரப்பளவில் (3,287,263 சதுர கிலோமீட்டர்) கொண்ட ஏழாவது பெரிய நாடான இந்தியா,1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் உலகில் முதல் இடத்தில் உள்ளது. இதன்  நிலப்பரப்பு உலகின் நிலப்பரப்பில் வெறும் 2.4% மட்டுமே. ஆனால் உலக மக்கள்தொகையில் 17.7%  ஐ கொண்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 142.78 கோடியாகவும், நம்மையடுத்து சீனாவின் மக்கள் தொகை 142.56 கோடியாகவும் உள்ளது. மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் மாநிலமாக (20,92,81,477)  திகழ்கிறது.

சீனாவின் மக்கள் தொகை இந்தியாவை ஒப்பிடுகையில், சரியவும் ஆரம்பித்திருக்கிறது. 2050-ல் இந்தியாவின் மக்கள் தொகை 160 கோடியாக இருக்கும் எனவும், சீனாவின் மக்கள் தொகையோ 130 கோடியாக குறைந்திருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் 1970களில் காணப்பட்ட மக்கள்பெருக்கம் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக பார்க்கப்பட்டது. அதனால்  குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாக்கப்பட்டது. இந்தியா பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்த காலமது.

தற்போது மக்கள் தொகை பெருக்கம் மீதான பார்வை உலகளாவிய அளவில் மாறி இருக்கிறது. மக்கள் தொகை பெருக்கம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் காரணியாகவே பார்க்கப்படுகிறது. இச்சூழலில்தான், இந்தியா மக்கள் தொகையில் சீனாவை முந்தி வருவது சர்வதேச கவனத்தை  ஈர்த்துள்ளது.

தற்போது இந்தியா பொருளாதார ரீதியாக பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா 2030ஆம் ஆண்டுக்குள் 3-வது இடத்தை பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

உலகின் பணிச்சூழல் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் பணியிடத்தில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. தரமான தொழில்நுட்பக் கல்வியால் மட்டுமே நம் நாட்டில் அதிகமான  வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். மாநிலத்தின் கிராமப்புறங்களுக்கும் இவற்றை பரவலாக்கவும் முடியும்.

மக்கள் தொகை பெருக்கம் பெரும் சந்தை வாய்ப்பை உருவாக்கக் கூடியது. மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதற்கேற்ப நுகர்வும் அதிகரிக்கும். அதிக நுகர்வை நிறைவு செய்ய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவையும் இருக்கும். தேவைப்படும் அதிக பொருட்களை உற்பத்தி செய்ய  அதிக தொழிற்சாலைகள் உருவாகும். இந்த சந்தையின் வாய்ப்பைப் பயன்படுத்த உள் நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் பெருகும். இது தனி மனித குடும்பங்களில் பணிசெய்வோரின் எண்ணிக்கையை உயர்த்தும். அதனால்,தனிநபர் வருமானமும்,அதன் எதிரொலியாக நாட்டு வருமானமும் உயரும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், 2050-ல் தனிநபர் வருமானம் 700 விழுக்காடு உயர்ந்து 16 ஆயிரம் டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் நுகர்வு திறன் தற்சமயம் இருப்பதை விட நான்கு மடங்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், அதன்மக்கள் தொகையில் பணிசெய்யும் ஆற்றலுடைய இளைய தலைமுறையினரின் எண்ணிக்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  ஒரு நாட்டின் பணிசார் கட்டமைப்பில் 15 முதல் 64   வயதுக்குட்பட்டவர்களே முக்கிய அங்கம் வகிக்கின்றனர். இந்நிலையில், நாடு முன்னேற நவீன தொழில்நுட்பங்களில் அதிக திறன் பெற்றுள்ள இன்றைய இளைஞர்களுக்கான  வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாக்கப்பட வேண்டும்.

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பேர் தாரளமய அறிமுகத்துக்கு பிறகு, அதாவது 1990-க்குபிறகு பிறந்தவர்கள். இவர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு தம் திறன்களை வளர்த்துக் கொண்டிருப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. அந்தவகையில், இந்தியாவின் அடுத்த 30 ஆண்டுகால தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த இளைய தலைமுறையினரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
Hearing-Aid எவ்வாறு இயங்குகிறது? அதை எப்படி பராமரிப்பது?
India's population

இந்தியாவின் வளர்ச்சியில் அதன் டிஜிட்டல் கட்டமைப்பும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பெருக்கமும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. தற்போது அறிமுகமாகியுள்ள 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் பெரும்நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், மக்கள் தொகை பெருக்கத்தால், இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார,சமூக ஏற்றத்தாழ்வுகள், வேலை வாய்ப்பின்மை, கல்வியறிவின்மை, தரமற்ற சுகாதாரக் கட்டமைப்பு, பணிசார் கட்டமைப்பில்  குறைந்த அளவிலான பெண்களின் பங்கு போன்றவற்றில்  இந்தியா கவனம் செலுத்த வேண்டி உள்ளது. 

மனிதர்களின் இறப்புகள் குறைதல், பிறப்புகள் அதிகரித்தல், மதங்களின் குடும்பக் கட்டுப்பாடுகள் சார்ந்த பார்வை, அதிகரித்து வரும் இளம் வயது திருமணங்கள் போன்ற பல காரணிகள் இன்றைய சமூகத்தில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு முக்கிய காரணங்களாக  உள்ளன.

துரிதமாக மக்கள் தொகை பெருகுவதனால் நாட்டில் தலா வருமானம், நாட்டு வருமானம், சேமிப்பு, முதலீடு, மூலதனம், உற்பத்தித்திறன், வேலைவாய்ப்புகள் போன்றவையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இவை நாட்டில் பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்துகின்றன.அதனால், இப்பிரச்சினைகளை முறையாக தீர்ப்பதன் வழியாக மட்டுமே, அதிகரித்துவரும் மக்கள் தொகையை, வளர்ச்சிக்கான வாய்ப்பாக இந்தியா மாற்றிக்கொள்ள முடியும். எனவே,இவற்றிற்கான தீர்வுகளை மத்திய, மாநில அரசுகள் காலக்கெடு வைத்து உடனடியாக காண வேண்டும்.

தரமான தொழிற்கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் பணிச்சந்தைக்கு வரும் மாணவர்கள் தமக்கு ஏற்ற பணியை தேர்ந்தெடுக்க முடியும். பணிநாடுனர்கள் சுயவேலைவாய்பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இது சார்ந்து வங்கிகள் தரும் கடன் வசதிகளை தொழில் முனைவோர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். 

படித்த அனைவரும்  தனக்கு தெரிந்த ஏதோ ஒரு பணியில் சேர்ந்து பணம் ஈட்ட முனைப்பு காட்டவேண்டும்.

பொதுவாழ்வில் தலைவர்கள் நேர்மையான வாழ்விற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இது வளமான எதிர்கால இந்தியாவிற்கு உறுதியான அடித்தளமாக அமையும்.

பல நாடுகள் மக்கள் தொகை குறைவால் கவலைப்படுகின்றன. இக்காலகட்டத்தில்,  நம்மிடையே காணப்படும் மக்கள் பெருக்கத்தை, நாடு முன்னேற நாம் ஒரு வாய்ப்பாகவும், வரமாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com