2547 வகையான இட்லியை அறிமுகப்படுத்திய ‘இட்லி’ இனியவனின் உலக சாதனை!
கோயம்புத்தூரில் ஒரு ஆட்டோ ஓட்டுநராக தொடங்கிய இனியவனின் பயணம் இன்று அவரது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக, ‘இட்லி இனியவன்’ என்ற அடைமொழியோடு மக்கள் மத்தியில் வழங்கப்பட்டு வரும் அளவிற்கு அவரை உயர்த்தியுள்ளது.
கோவை டூ சென்னை: கோவையில் ஒரு எளிமையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்தான் இனியவன். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்தபொழுது கோவை சாய் பாபா காலனியைச் சேர்ந்த, இட்லி விற்பனை செய்யக்கூடிய சந்திரா அம்மாவின் நட்பு இவருக்குக் கிடைக்க, அதன் மூலம் அந்தத் தொழிலில் ஈடுபட்டு செம்மையான லாபத்தை ஈட்டி, பின்பு படிப்படியாக உயர்ந்துள்ளார்.
பின்னர் சென்னைக்கு வந்து சுய தொழில் தொடங்க முடிவு செய்த இனியன் கே.கே.நகர் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் தங்கி தனது முதலாவது ஆர்டருக்கான பணியில் தீவிரமாக இறங்கிருக்கிறார். ஆனால், அது உச்சகட்ட தோல்வியை தழுவியுள்ளது. ஏனெனில், அன்று சென்னையில் அதிகன மழை. குடிசைகளில் தண்ணீர் புகுந்து, இனியவன் ஆர்டருக்காக தயாரித்த இட்லிகள் அதில் முழுவதுமாக மூழ்கிப்போயின.
இவ்வாறான பல போராட்டங்கள், மிகவும் கரடுமுரடான பாதைகளைக் கடந்து இட்லி இனியவன் இன்று உலகளவில் நம்முடைய பாரம்பரிய உணவான இட்லியைப் பிரபலப்படுத்திய பெருமைக்கு உரியவராக உள்ளார். அதுமட்டுமின்றி, இவர் சுமார் 2547 வகையான இட்லியை அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.
உலக இட்லி தினம்!
இனியவன் 2015ம் ஆண்டு, மார்ச் 15ம் தேதியன்று சுமார் ஆயிரம் வகையான இட்லிகளைத் தயாரித்து விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தியுள்ளார். அந்த நிகழ்வில் சுமார் 14,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், அந்த விழாவிற்கு நீதிபதி வள்ளிநாயகம், நீதிபதி ஞானசம்பந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வணிகர் சங்கத் தலைவர் மற்றும் சமையல் சங்கத் தலைவர் என பலர் பங்கேற்றுள்ளனர். அந்த சபையில் இனியவனின் பிறந்தநாளான மார்ச் 30 இனி ‘உலக இட்லி தினமாக’ கொண்டாடும்படி அறிவிக்கப்பட்டது.
ஒரு இனிய மாலை வேளையில் இனியவனுடன் உரையாடியதிலிருந்து…
ஒரு சாதாரண இட்லி… இதைக் கொண்டு சாதிக்கணும்னு எப்படி சார்…?
அது என்ன இப்படி ‘சாதாரணமா’ சொல்லிட்டீங்க! இட்லி என்பது தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக இருக்கும் ஒரு உன்னதமான உணவுப் பொருள் என்பதை முதல்ல புரிஞ்சுக்கோங்க. நம்மில் பலரும், ‘ஐயோ இட்லியா?’ என்று சலித்துக்கொள்வது வருத்தத்துக்குரிய விஷயம். என்ன செய்யலாம்? முதலில் அது ஏன் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என சிந்தித்தேன். அதில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று யோசித்தேன். இன்று இந்த சாதனைகளுக்கு அந்த யோசனையே காரணமாக இருந்தது. மேலும் இட்லியின் வடிவம் மற்றும் சுவை இவை இரண்டிலும் பல்வேறு வேறுபாடுகள் காட்டுவதன் முயற்சிதான் இது.
என்னென்ன வகையான இட்லியை நீங்கள் இதுவரை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்?
பொதுவாகவே, இந்தக் காலத்து பிள்ளைகள் காய்கறிகளையும், பழங்களையும் விரும்பி உண்ணுவது கிடையாது. எனவே, அவர்களுக்கு அந்த உணவை மிகவும் பிடித்தமான உணவாக மாற்றுவதற்காக நான் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது தான், ‘சாக்லேட் இட்லி’ மற்றும் ‘பீட் ரூட்’ இட்லி. குழந்தைகளிடையே அதற்கான வரவேற்பு ஆரவாரமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து பல வகையான இட்லிகளை அறிமுகப்படுத்தினேன். அன்னாசிப் பழ இட்லி, மல்லிப்பூ இட்லி, தட்டு இட்லி, புதினா இட்லி, பீசா இட்லி, கம்பு, சோளம், கேழ்வரகு, ஆரஞ்சு, ஆப்பிள், முளைக்கட்டிய பயிர் வகை இட்லி என சுமார் 2547 வகையான இட்லியை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
உங்களுடைய ஸ்பெஷல் இளநீர் இட்லி பற்றி சொல்லுங்களேன்?
ரொம்ப சிம்பிள். ஆனால், டேஸ்டி அண்ட் டிரெஸ்டி. சராசரியாக இட்லி என்பது தண்ணீரை பயன்படுத்தி மாவை கரைத்து சுடுவதுதான். அதேபோல இளநீரைப் பயன்படுத்தி மாவை அரைத்து சுடுவதுதான் இளநீர் இட்லி.
உங்களுக்கு மார்ச் 30 எவ்வளவு ஸ்பெஷல்?
மார்ச் 30 என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். என்னுடைய பிறந்த நாளை உலக இட்லி தினமாக அறிவித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். மக்களின் ஆரவார கரகோஷங்கள் முழங்க எனக்குக் கிடைத்த அப்பெருமை… இன்றும் அந்த நாளை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது.
சுயதொழில் செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கு உங்களோட அட்வைஸ்?
சுயதொழில் செய்யக்கூடிய இளைஞர்கள் முதலில் தாங்கள் வேலை செய்யக்கூடிய நிறுவனத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொள்ளவேண்டும். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நாம் பணிபுரிந்தாலே போதும். அந்த ஒழுக்கமே நம்மை வாழ்வில் உயர்த்தும்.
என் கதையே, என் வெற்றியே அப்படிப்பட்டதுதான். கோவையில் அந்த இட்லி விற்பனை செய்யக்கூடிய அம்மாவிடம் ஒரு ஆட்டோ ஓட்டுநராக பணியில் சேரும்பொழுது அங்கு வெறும் 250 முதல் 300 இட்லிகள் வரைதான் வியாபாரம் செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர் நான் அந்த அம்மாவின் இட்லி குறித்து வெளியே பிரபலப்படுத்த, ஒரு நாள் இட்லியின் வியாபார எண்ணிக்கையானது 3000ஆக உயர்ந்தது.
உங்களுடைய இந்தப் பயணத்திற்கான ஆபார வெற்றிக்கு முக்கியக் காரணம்?
வெற்றிக்கு முக்கியக் காரணமே என்னுடைய விடாமுயற்சி மற்றும் உத்வேகம்தான். ஒரு சராசரி ஆட்டோ ஓட்டுநராக இருந்தபோது, அந்த சாய்பாபா காலனியின் மிகச் சிறந்த ஆட்டோ ஒட்டுநராகவே திகழ்ந்தேன். ஒரு ஓட்டுநராக பலராலும் மதிக்கப்பட்டேன். பாராட்டப்பட்டேன். அதேபோலத்தான் இந்த இட்லி விற்பனையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வம்தான் என்னை இந்த வெற்றிக்கு உரியவனாக மாற்றி இருக்கிறது.
உங்களுடைய வாழ்வில் உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத அங்கீகாரம் எது?
நான் குடும்ப வறுமையின் காரணமாக வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். ஆனால், இன்று நான் பல்வேறு முன்னணி கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு என்னுடைய இந்த சாதனை, பயணம் மற்றும் உணவு குறித்த பாடங்களைக் கற்பிக்கிறேன். இதுதான் எனக்குக் கிடைத்த மிகச்சிறந்த அங்கீகாரமாகும்.
உங்களுடைய கனவு?
எனக்கு ஐ.நா. சபைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய தலைவர்களுக்கெல்லாம் ஒரு நாள் நம்முடைய பாரம்பாரிய உணவான இட்லியை சமைத்துக் கொடுக்க வேண்டும். மாஸ்கோ எனக்கு மிகவும் பிடித்தமான நாடுகளுள் ஒன்று. அங்கு இதுவரையில் நான் மூன்று உணவுத் திருவிழாக்கள் நடத்தி இருக்கிறேன். எனவே, இதுபோல பல்வேறு நாடுகளுக்கும் சென்று இந்த உணவை பிரபலப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாகும்.
உங்களுடைய இட்லி பிரியர்களின் வரிசையில் இருக்கும் பிரபலங்கள் யார் யார்?
முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவியார் துர்கா அம்மா என்னுடைய இட்லியைப் பாராட்டி இருக்கிறார். அதுமட்டுமின்றி, அவர் வீட்டின் விசேஷங்களுக்கும் என்னுடைய இட்லியைத்தான் வாங்குவார். அடுத்ததாக வைரமுத்து ஐயா அவரது கவிதையின் மூலமாகவே என்னைப் பாராட்டி பெருமைப்படுத்தி இருக்கிறார். பல பிரபலங்களின் இல்லத் திருமண விழாக்களிலும் கூட என்னுடைய இட்லி, பந்திகளில் பரிமாறப்படிருக்கிறது என்பது எனக்கு மிகவும் பெருமை அளிக்கக்கூடிய விஷயமாகும்.