வெளிநாடுகளில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலைகளின் சுவாரஸ்யமான பின்னணி!

உலகெங்கிலும் உள்ள சுமார் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் மகாத்மா காந்திக்கு 200க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் உள்ளன.
Mahatma Gandhi statue
Mahatma Gandhi statue
Published on
Kalki Strip
Kalki Strip

ஜனவரி 30- மகாத்மா காந்தி நினைவு தினம்

அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமாக விளங்கும் மகாத்மா காந்திக்கு உலக நாடுகள் மலைக்க வைக்கும் அளவுக்கு அவரின் சிலைகளை வைத்து அவரை பெருமைப்படுத்தி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள சுமார் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் மகாத்மா காந்திக்கு 200க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் உள்ளன.

காந்திஜிக்காக முதன் முதலில் சிலையை நிறுவிய வெளிநாடு, கென்யா. அந்நாட்டின் நைரோபியில் உள்ள 'கென்யா ராயல் தொழில்நுட்ப கல்லூரியில்' 1956ம் ஆண்டு அந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.

இரண்டாவது சிலை இங்கிலாந்து நாட்டின் லண்டன் டேவிஸ்டாக் சதுக்கம் என்ற அமைதிப் பூங்காவில் 1968ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த பூங்காவின் அருகில் உள்ள கல்லூரியில் தான் காந்திஜி 1968ம் ஆண்டு சட்டம் பயின்று வந்தார். அதனை நினைவு கூறும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டது.

லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் இரண்டாம் உலகப் போரின் போது, இந்தியத் தலைவர்களை கேலி செய்த பிரிட்டனின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலைக்கு அருகில் மகாத்மாவின் சிலை அமைக்கப்பட்டது. நாடாளுமன்ற சதுக்கத்தில் உள்ள முதல் இந்தியரின் சிலை மகாத்மா காந்தியின் சிலை தான். இந்த சிலை 9 அடி உயரமும் வெண்கலத்தால் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
மற்றவர்களை ஈர்க்கும் தன்மை கொண்ட காந்திஜி!
Mahatma Gandhi statue

தன் வாழ்நாளில் ஒரு முறை கூட அமெரிக்கா செல்லாத காந்திஜிக்கு அங்கே 40க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. அமெரிக்காவின் முக்கிய தலைவர்களுக்கு கூட இவ்வளவு சிலைகள் அங்கு கிடையாது. அதில் வாஷிங்டன் (தூதரகம் அருகில்), நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ நகர சிலைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அமெரிக்காவின் கொலம்பஸ் கலைக்கல்லூரியில் நிறுவப்பட்டிருக்கும் காந்திஜியின் ராஜ் தோரணையில் இருக்கையில் அமர்ந்து இருப்பது போன்ற சிலை வித்தியாசமானது. இது போன்ற சிலை உலகில் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான நாடுகளில் காந்திஜியின் வயதான தோற்றத்தில் இருக்கும் சிலைகள் தான் இருக்கும். அதிலிருந்து மாறுபட்டு வக்கீல் உடையில் அவர் இருக்கும் அவரின் இளவயது தோற்றமுடைய சிலையை தென்னாப்பிரிக்கா ஜோகன்ஸ்பர்க்கில் 2003ம் ஆண்டு நிறுவியது.

தென்னாப்பிரிக்கா பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் காந்திஜியை அவமானப்படுத்தப்பட்ட இடத்தில் 1996-ல் மண்டேலாவால் திறக்கப்பட்ட சிலை மற்றும் டால்ஸ்டாய் பண்ணையில் உள்ள சிலைகள் தென்னாப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்கவை.

1921ம் ஆண்டு மகாத்மா காந்தி தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் போது மதுரைக்கு வந்தார். அப்போது அங்கே ஏழை விவசாயிகள் வயல்களில் இடுப்பில் மட்டும் வெறும் துண்டோடு வேலை செய்வதைக் கண்டு. 'தானும் இனி அதே கோலத்தில் தான் இருப்பேன் 'என்று வெறும் வேஷ்டியை மட்டுமே கட்டினார். அந்த கோலத்தில் அன்று எடுக்கப்பட்ட முதல் புகைப்படத்தின் பின்னணியில் டென்மார்க்கில் 1984ம் ஆண்டு நிறுவப்பட்டது காந்திஜி சிலை. இந்த சிலையை டென்மார்க்கிற்கு பரிசாக வழங்கியது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.

கம்யூனிஸ்ட் நாடுகளான ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் கூட காந்திஜிக்கு சிலைகள் உள்ளன. ரஷ்யாவில் 3 இடங்களில் காந்திஜி சிலை நிறுவப்பட்டுள்ளது. கனடாவில் சஸ்கடூன், வின்னிபெக், ஒன்டாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல்வேறு இடங்களில் மகாத்மா காந்தியின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள அரியானா பூங்காவில் (Ariana Park) மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை, அமைதி மற்றும் நட்புறவின் அடையாளமாக அமைந்துள்ளது.

நவம்பர் 14, 2007 அன்று திறக்கப்பட்ட இந்தச் சிலை, இந்திய அரசால் ஜெனிவா நகரத்திற்கு இந்தோ-சுவிஸ் நட்பின் 60-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் வழங்கப்பட்ட பரிசாகும், மகாத்மா காந்தி மார்பளவு சிலையை ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரத்திற்கு இந்திய அரசு 2003ம் ஆண்டு பரிசளித்தது. இந்த 42 அங்குல உயரமுள்ள வெண்கல மார்பளவு சிலை மோட்டோயாசு நதியையோட்டியுள்ளது.

ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரத்தின் புறநகர்ப் பகுதியான ரோவில் என்ற இடத்தில் ஆஸ்திரேலிய இந்தியக் கம்யூனிட்டி சென்டரில் காந்திஜியின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை அனுசரிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவுக்கு மகாத்மா காந்தி சிலை வழங்கப்பட்டு, ஆஸ்திரேலிய பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்க்கையை அழிக்கும் 7 பாவங்கள்: காந்திஜி சொன்ன ரகசியம்!
Mahatma Gandhi statue

காந்திஜியின் சிலைகளை வெளிநாடுகளுக்கு வடிவமைத்து கொடுப்பது இந்தியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேசன்ஸ் ( ஐ.சி.சி.ஆர்) என்ற அமைப்பு. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அபுல் கலாம் ஆசாத்தால் 1950ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் இருக்கும் பெரும்பாலான சிலைகளை வடிவமைத்தவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ராம் சுந்தர் என்ற சிற்பி. இவரின் சிலைகள் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளன. இவரையடுத்து கவுதம் பால் என்ற சிற்பி வடித்த சிலைகள் 15 நாடுகளில் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com