உங்கள் வாழ்க்கையை அழிக்கும் 7 பாவங்கள்: காந்திஜி சொன்ன ரகசியம்!

அக்டோபர் 2, மகாத்மா காந்தி பிறந்த தினம்
7 sins that destroy life
gandhi jeyanthi
Published on

ந்தியாவில் முக்கியமான தெருக்களுக்கு பெயர் வைக்கப்படுவதில் நம்பர் 1 இடம் பிடிப்பவர் மகாத்மா காந்தியே. நாடு முழுவதும் எல்லா பெரு நகரங்களிலும் ஏதாவது ஒரு முக்கியமான தெருவுக்கு காந்தி பெயர் இருக்கும். இந்தியாவின் முக்கியமான 53 வீதிகளுக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, உலகில் 48 நாடுகளில் காந்தி பெயரில் தெருக்கள் உள்ளன.

1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி, குஜராத் மாநிலம் போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்தார். உலகில் அகிம்சை வழியில் போராடி வெற்றி பெற்ற முதல் உலகத் தலைவர் அவர்தான். அதனை பெருமைப்படுத்தும் விதமாக காந்தி பிறந்த அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக ஐ.நா சபை அறிவித்தது.

‘தீயவற்றை பேசாதே, தீயவற்றை கேட்காதே, தீயவற்றை பார்க்காதே’ என்ற வாழ்வியல் தத்துவத்தை விளக்கும் ‘மூன்று அறிவாளி குரங்குகள்’ பொம்மை ஜப்பான் நாட்டில் புகழ் பெற்றவை. சீனாவிலிருந்து காந்தியை பார்க்க வந்த நண்பர் ஒருவர் இதை காந்திஜிக்கு பரிசாக அளித்தார். பொதுவாக, வெளிநாட்டு பரிசுகளை காந்தி வாங்குவதில்லை. ஆனால், இதை ஆசையாக வாங்கி வைத்திருந்தார்.

இதையும் படியுங்கள்:
மகாத்மா காந்தி பிறந்த நாளில் பண்ணை விலங்குகளின் கண்ணீர் கதை: மனதை உலுக்கும் உண்மை!
7 sins that destroy life

காந்திஜி - கஸ்தூரிபாய் தம்பதிக்கு அவர்களது மண வாழ்வில் 4 மகன்கள். ஹரிலால் காந்தி, ராம்தாஸ் காந்தி, மணிலால் காந்தி, தேவ்தாஸ் காந்தி. முத்த மகன்கள் இருவரும் இந்தியாவில் பிறந்தவர்கள். அடுத்த இரு மகன்கள் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்கள்.

உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசுக்கு 5 முறை காந்திஜியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. கடைசியாக 1948ம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டபோது அவருக்கே நோபல் பரிசு வழங்கப்படும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் தரப்படவில்லை. அப்போது மறைந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும் வழக்கம் இல்லை. அந்த ஆண்டில் ‘தகுதியானவர்கள் யாரும் இல்லை’ எனக் கூறி,யாருக்குமே நோபல் அமைதி பரிசு வழங்கப்படவில்லை.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக காந்திஜி மொத்தம் 6 ஆண்டுகள், ஐந்து மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். எப்போதும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதால் அவருக்கு சிறை வாழ்க்கை ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. தன்னுடைய சிறை வாழ்வை படிப்பதற்கும், எழுதுவதற்கும் அவர் பயன்படுத்திக் கொண்டார்.

இதையும் படியுங்கள்:
தனிக்குடும்ப வாழ்வில் வயோதிகம் ஏன் 'சுமை' ஆகிறது? நெஞ்சை உலுக்கும் உண்மை!
7 sins that destroy life

ஒருவரை அழிக்கும் பாவங்கள் என 7 விஷயங்களை காந்திஜி வலியுறுத்துவார். அந்த 7 பாவங்கள் உழைக்காமல் சேர்க்கும் செல்வம், மனசாட்சிக்கு விரோதமாக பெறும் மகிழ்ச்சி, நற்பண்புகள் இல்லாத கல்வி, அறநெறி இல்லாத வியாபாரம், மனிதத்தன்மை இல்லாத விஞ்ஞானம், தியாகம் இல்லாத வழிபாடு, கொள்கை இல்லாத அரசியல்.

இந்திய வரலாற்றில் மிக விரைவாக நடந்து முடிந்த கொலை வழக்கு மகாத்மா காந்தி கொலை வழக்குதான். 1948ம் ஆண்டு மே இறுதியில் தொடங்கிய வழக்கு 7 மாதங்கள் மட்டுமே நடந்தது. நீதிபதி ஆத்மசரண் விசாரித்தார். விசாரணை வெளிப்படையாக நடந்தது. பார்வையாளர்கள் நேரில் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். 22 மாதங்களில் கோட்சே தூக்கிலிடப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல்: நிலவில் ஆம்ஸ்ட்ராங் படித்த முதல் வாக்கியம்!
7 sins that destroy life

காந்திஜி மறைந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த இறுதி ஊர்வலம் 8 மைல் தூரத்திற்கு நீண்டிருந்தது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இடுப்பில் ஒற்றை வேட்டி அணிந்து காந்தி எந்தக் கோலத்தில் பிரிட்டிஷ் மகாராணியை சந்தித்தாரோ, அதே தோற்றத்தில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் பிரிட்டிஷ் பாராளுமன்ற சதுக்கத்தில் காந்திஜியின் 9 அடி உயர வெண்கல சிலை உள்ளது. எந்த நாட்டிற்கும் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ இல்லாத ஒரு தலைவருக்கு பாராளுமன்ற சதுக்கத்தில் சிலை வைக்கப்பட்டது அதுவே முதல் முறை. ஒரு இந்தியருக்கு வைக்கப்பட்ட முதல் சிலையும் அதுதான்.

உலகிலேயே மிக அரிதான தபால்தலை எனக் கருதப்படுவது, இந்திய அரசு வெளியிட்ட காந்திஜியின் 10 ரூபாய் சர்வீஸ் ஸ்டாம்ப். உலகிலேயே மிகக் குறைவாக அச்சிடப்பட்ட தபால்தலை அதுதான்.1948ம் ஆண்டு இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தன்று காந்திஜியை கெளரவிப்பதற்காக அவரது அஞ்சல் தலை ஒன்றை வெளியிட மத்திய அரசு முடிவெடுத்தது.10 ரூபாய் மதிப்பில் இந்த அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி தனது பயன்பாட்டுக்காக என அஞ்சல்தலை கேட்டார். அரசு பயன்பாட்டுக்கான அஞ்சல்தலைகளில் ‘சர்வீஸ்’ என்ற வார்த்தை அச்சிடப்படும். இப்படி அச்சிட்டு 100 ஸ்டாம்ப்கள் வெளியாகின. இதில் ஒரு ஸ்டாம்ப் பின்னர் 92 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com