Interview: 'நீரோவியத்தின் காதலன்' முனைவர் இளங்கோ
பல ஊடக தொழில்நுட்பங்கள் இன்று வளர்ந்திருந்தாலும், ஆதி காலம் தொட்டு இருக்க கூடிய ஊடகமான 'ஓவிய ஊடகம்' தன் மதிப்பை இழந்து விடாமல் இருக்கிறது. பல ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை ஊடகமாக பயன்படுத்தி மனித சமூகத்தினரிடம் உரையாற்றுகின்றனர். இதுபோல ஓவியத்தின் வழியாக, தான் பார்த்து ரசித்த விஷயத்தை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பேராசிரியர் முனைவர் இளங்கோ அவர்கள் 'மீடியம் இஸ் த மெசேஜ்' (medium is the message) என்ற தலைப்பில் ஓவிய புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இளங்கோ அவர்கள் சென்னை தூய தாமஸ் கல்லூரியில் உள்ள electronic media துறை தலைவராகவும், தமிழ்நாடு ஜெயலலிதா கவின் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
நீரோவியம் என்று அழைக்கப்படும் 'வாட்டர் கலரிங் ' முறையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ள இந்த புத்தகத்தில், கார்ல் மார்ஸ், அடூர் கோபாலகிருஷ்ணன், வைக்கம் முகமது பஷீர், இந்திரா காந்தி, அருந்ததி ராய், பாடகி சௌமியா, இளையராஜா, மணிரத்னம், நல்ல கண்ணு போன்ற ஆளுமைகளும், ஓவிய துறையில் பிரபலமாக இருக்கும் ஓவியர்களும், பறவைகள், கோவில் சிற்பங்கள் மற்றும்இளங்கோ அவர்கள் தன் வாழ்க்கையில் சந்தித்த நபர்களும் நீரோவியமாக இடம் பிடித்துள்ளார்கள். இளங்கோ அவர்கள் கல்கி ஆன்லைன் இதழுக்கு அளித்த பேட்டி....
உங்களுக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் வந்தது எப்படி?
என் அப்பா பதிப்பகம் ஒன்றை நடத்தி வந்தார். நான் பள்ளி நேரம் போக மீதி நேரம் அந்த பதிப்பகத்திலேயே இருப்பேன். அந்த பதிப்பகத்தில் பல புத்தகங்களை பார்க்க, படிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் எனக்கு ஏதோ ஒரு விஷயத்தை சொல்வது போல் உணர்ந்தேன். இந்த உணர்வு தான் என்னை தூரிகை பிடிக்க ஆர்வத்தை தூண்டியது. நான் சிறுவயதில் வாழ்ந்த சென்னை தம்பு செட்டி தெரு, சென்னை நகரத்து ஆங்கிலேயர் காலத்து அடையாளங்களாக இருக்கும் சென்னை பல்கலைகழகம், மாநில கல்லூரி, மியூசியம் சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட பல கட்டிடங்கள் இயல்பாகவே ஓவியத்திற்கான கூறுகளை கொண்டிருப்பதாக உணர்ந்தேன். நான் பார்த்த எளிய மனிதர்கள், இதுபோன்ற கட்டிடங்கள் போன்றவைகளை வரைய ஆரம்பித்தேன். நான் படித்த சென்னை முத்தயால் பேட்டை பள்ளி ஓவிய ஆசிரியர் திரு. கோபி என்னை ஊக்குவித்தார். இந்த ஊக்குவிப்பு நான் பின்னாட்களில் சென்னை ஓவிய கல்லூரியில் சேர்ந்து படிக்க தூண்டுதலாக அமைந்தது.
ஓவியம் தொடர்பான புத்தகம் எழுத தூண்டுதலாக அமைந்தது எது?
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கல்லூரியிலும், பல்கலைகழகத்திலும், ஓவிய பேராசிரியராக பணிபுரிகிறேன். நான் புரிந்து கொண்ட ஓவியத்தின் அடிப்படை கூறுகளை ஓவியதுறை மாணவர்கள் மற்றும் வேறு துறையில் இருந்தாலும் ஓவியம் வரைய ஆர்வம் இருப்பவர்களுக்கும் பயன்படும் விதத்தில் ஒரு புத்தகம் எழுத விரும்பி Medium is the message என்ற புத்தகத்தை எழுதி உள்ளேன். ஒரு ஓவியத்தை எப்படி அணுக வேண்டும், பார்க்கும் விதம் போன்றவைகளை தியரியாகவும் விளக்கி உள்ளேன்.
ஓவியத்தின் அழகை சொல்லும் The Beauty Of Drawing, உருவத்தின் பின்புலத்தை விளக்கும் 'Figure and Ground', நீரோவியத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டதைசொல்லும் 'My story of water colour' , நீரோவியத்தில் உருவங்களை வரைய கற்றுதரும் 'Portrait making in water colour', நாம் பார்க்கும் பல்வேறு கட்டிடங்களை, கோவில் சிற்பங்களை நீரோவியாத்தில் வரைய கற்றுத்தரும் 'water colour landscape Art', ஒரு நபரை நம் முன் அமரவைத்து அந்த நபரை அப்படியே தத்ரூபாமக வரைய சொல்லித்தரும் 'Live model portrait in water colour', வெளியில் நாம் பார்க்கும் இயற்கையை தூரிகையால் தீட்டும் கை வண்ணத்தை பேசும் 'out door sketching in water colour', கருமை வண்ணமை கொண்டு வரையப்படும் ஓவியங்களை விளக்கும் 'The art of scribbling', நவீன காலத்தை சொல்லும் 'digital art ', ஓவியத்தில் பறவைகளின் தேவைகளை சொல்லும் 'The world of Bird art ' என பத்து தலைப்புகளில் தகவல்களை விவரமாக எழுதி அதற்கான படங்களை வரைந்துள்ளேன்.
ஒரு மீடியம் தகவலை தருகிறது. ஆனால் ஒரு மீடியமே ஒரு தகவல் தான் என்பதை போல் 'medium is the message' என்று உங்கள் புத்த கத்திற்கு தலைப்பு வைத்துள்ளீர்களே எப்படி?
'மார்ஷல் மாக் லூகன்' என்ற தொடர்பியல் அறிஞர் "எந்த ஒரு ஊடகமும், அதன் வடிவத்தை நாம் பார்க்கும் போதே ஒரு தகவல் நமக்கு பரிமாறப்படுகிறது" என்கிறார். இந்த வார்த்தை நீரோவியத்திற்கு மிகவும் பொருந்தும். இந்த வகை ஓவியத்தில் ஒருவரின் ஓவியத்தை பார்க்கும்போதே அதிலுள்ள நபரின் சூழ்நிலை பார்வையாளர்களின் மனதில் ஓட ஆரம்பித்துவிடும். நீரோவியத்தில் வரையப்படும் வீடுகள், கோவில் சிற்பங்கள் போன்றவற்றை நாம் பார்க்கும் போது நம் மனதில் அதன் பின்னணியில் இருக்கும் காலம், கலாசாரம் ஆகியவை 'பிளாஷ்' போல் வந்து செல்லும். இதை மனதில் வைத்து தான் மார்ஷலின் தத்துவமான 'Medium is the message' என்று தலைப்பு வைத்துள்ளேன்.
தஞ்சை, காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கோவில்களில் வரைந்த ஓவிங்களை இங்கே உதாரணமாக தந்துள்ளேன்.
டிஜிட்டல் ஆர்ட் எதற்காக?
ஓவியம் வரைய பயன்படும் பேப்பர் போல் கணினியும் ஒரு தளம் தான். டிஜிட்டல் வரைகலையை இன்று தவிர்க்க முடியாது.
பறவைகளுக்கு முக்கியத்துவம் தந்து பறவை ஓவியம் தந்துள்ளீர்கள்... ஏன்?
இயற்கையின் வளர்ச்சிக்கு பறவையின் பங்களிப்பு முக்கியமானது. அதேபோல் ஓவியத்தில் பறவை ஓவியம் என்பது மிக முக்கியமானது. அதன் சிறகுகள், கண்கள், நிறங்கள் என ஓவியனின் படைப்பு திறனுக்கு தீனி போடும் விஷயங்கள் ஏராளமாக பறவைகளில் உள்ளன. உலக நாடுகளில் ஓவியர்கள் பறவை ஓவியத்தை இயக்கமாகவே செய்கிறார்கள்.
எல்லாம் சரி! ஓவிய படிப்பிற்கான எதிர்காலம் எப்படி உள்ளது?
இன்று மல்டிமீடியா, அனிமேஷன் துறைகளில் சிறந்து விளங்க ஓவிய படிப்பு கை தரும். டிசைன் தொடர்பான அறிவை பெற ஓவியம் கைகொடுக்கும். எதிர்காலத்தில் வர உள்ள AI நுட்பத்திற்கு ஓவிய கல்வி பயனுள்ளதாக இருக்கும்.