'Water Warrior' Nimal
'Water Warrior' Nimal

188 நீர்நிலைகளைப் புதுப்பித்திருக்கும் 'Water Warrior' நிமல் - சந்திப்போமா?

Published on

நீர் இன்றி அமையாது உலகு – நாம் அறிந்ததே! வெப்பத்தின் தாக்கம் ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க நீரின்  தேவையும்  அதற்கான பற்றாக்குறையும் அதிகரிக்கிறது. இதற்கான முக்கியக் காரணம் நீர் மற்றும் நீர் நிலைகளைச் சரியான முறையில் கையாளாமல் இருப்பதுதான். மேலும் இதுகுறித்த போதிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கும்  இருக்கிறதா என்றால் அதுவும் கேள்விக்குறிதான். இந்நிலையில் நீர் நிலைகளின் பராபரிப்புக்கான முக்கியத்துவத்தையும் நீரின் இன்றியமையாத தேவையையும் பொதுமக்களுக்கு விளக்க களமிறங்கி இருக்கிறார் ‘வாட்டர் வாரியார்’.

வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கனவுகளைக்கொண்ட ஒருசில மனிதர்கள் நமது சமூகத்திற்கு ஒரு ஹீரோவாக தென்படுகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இந்த ‘வாட்டர் வாரியார்’ நிமல்.

யார் இந்த நிமல் ராகவன்?

தஞ்சாவூர் மாவட்டம் நாடியம் என்ற கிராமத்தில் பிறந்தவர் நிமல். இவர் ஒரு பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பொறியியல் படிப்பை முடித்த கையோடு தனது பணிக்காக துபாய் சென்றார். நிமல் துபாயில் ஒரு நல்ல தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊழியராக போதுமான அளவு வருமானத்தைக்கொண்டு வசதியான வாழ்க்கையில் பயணித்து வந்தார்.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு விடுமுறைக்காக இவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். அப்போது கஜா புயலின் தாக்கம் தமிழகம் முழுவதும் சூறைக்காற்றாய் வீசியது. இந்தப் புயலானது காவேரி டெல்டா கரையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போதுதான் பிறந்து வளர்ந்த ஊரும், விவசாயமும் அழிவுப் பாதையை நோக்கி நகர்வதை நிமல் உணர்ந்தார். இதையடுத்து தனக்கு துபாயில் கிடைத்த வேலையை விட்டு, தன் மண்ணின் இயற்கையை  மீட்டெடுக்கும் பணியில் களமிறங்கினார்.

அதன் முதல் கட்டமாக  கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்கான நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. #BounceBackDelta என்ற சமூக ஊடகப் பிரசாரத்தை நிமல் முன்னின்று நடத்தினார். அதன் ஒரு பகுதிதான்  பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது. இதையடுத்து நிமலின் பணியால் ஈர்க்கப்பட்ட,  அதே கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் குழுவும் ஒன்றாக இவரோடு சேர்ந்தது. இது பெரிய அளவிலான திட்டங்களுக்கு வழி வகுத்தது.

188 நீர் நிலைகள் 

நீர் தட்டுப்பாடு என்பது நாம் சந்திக்கும் பிரச்னைகளுள் முக்கியமான ஒன்று. அதே சமயம் நீர் நம்முடைய வாழ்வாதாரத்திற்கும் விவசாயத்திற்கும் முதுகெலும்பாக விளங்குகிறது. இதனால் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த நிமல் அதனை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக இறங்கினார். இந்தப் பயணத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில், நீர் சேமிப்பு, அறுவடை, நீர்நிலைகள் மறுசீரமைப்பு, நீர் நெருக்கடி மேலாண்மை, மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற அபாரமான பணிகளைச் சிறப்பாக செய்துவருகிறார். அதன்படி இதுவரை பல பகுதிகளிலும் உள்ள 188 நீர் நிலைகளைப் புதுப்பித்து உள்ளார்.

நிமலுடன் நேர்காணல் நமது கல்கி ஆன்லைனுக்காக...

'Water Warrior' Nimal
'Water Warrior' Nimal
Q

உங்களது முதலாவது நீர்நிலை சீரமைப்பு அனுபவம் எப்படி இருந்தது?

A

பேராவூரணி பகுதியில் உள்ள  பெரியகுளம் என்ற நீர்நிலை தான் எங்களுடைய முதலாவது பிராஜெக்ட்டாக இருந்தது. சுமார் நான்கு மாத கால அளவில் நடந்த அந்த சீரமைப்பு பணியில் எங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு போதுமான அளவிற்கு கிடைத்தது. இந்த சீரமைப்பு பணி தொடங்குவதற்கு முன்பாக அங்கு தண்ணீர் வெறும் 350 அடி மட்டுமே இருந்தது. அதற்கு பிறகு நீர் மட்டம் சுமார்  50 அடி உயர்ந்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த முதல் முயற்சியும் அதன் ரிசல்ட்டும்தான் என்னுடைய அடுத்தடுத்த திட்டங்களுக்கான ஒரு நம்பிக்கையை தந்தது.

இதையும் படியுங்கள்:
“உழைப்பாளிகளின் வலி... எளியோரின் கோபம்.... நெருங்கிப் பார்த்தால், சாக்லேட்கூட கசக்கும்!” - வசந்த பாலன்!
'Water Warrior' Nimal
Q

இதுவரை எத்தனை நீர்நிலைகளை சீரமைத்து இருக்கிறீர்கள்?

A

இந்த பணியானது நமது தமிழகத்தில் தான் முதன்முதலாக தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது சுமார் 25 மாவட்டங்கள், இந்தியாவில் சுமார் 10 மாநிலங்கள், மேலும் கென்யா நாட்டிலும் இதுபோன்ற நீர்நிலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன். அந்த வகையில் நான் இதுவரை 188 குளங்களைச் சீரமைத்து இருக்கிறேன்.

'Water Warrior' Nimal
'Water Warrior' Nimal
Q

இராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் நீர் தட்டுபாட்டைப் போக்குவது சாத்தியமா?

A

நான் தற்போது இராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள 400-க்கும் அதிகமான கிராமங்களில்தான் நீர்நிலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இராமநாதபுரம் தண்ணீர் இல்லாத பகுதி கிடையாது தண்ணீரைச் சரியான முறையில் சேமிக்காத பகுதியாகும். நாங்கள் அப்பகுதியில் சரியானபடி திட்டமிட்டபடி வாய்க்கால்கள் அமைத்து பணியைத் தொடங்கினோம். இதனால் பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீரின் வரத்து அதிகரித்தது. இதையடுத்து தொடர்ந்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

Q

சென்னை, பெங்களுரு பகுதிகளில் நிலவும் நீர் தட்டுபாடு சார்ந்த சர்ச்சைகளை சரி செய்வது சாத்தியமா?

A

சென்னை போன்ற பகுதிகளில் நீர்த் தட்டுபாடு சார்ந்த பிரச்னைகளை சரிசெய்வது மிகவும் சுலபம்தான். ஏனெனில் அப்பகுதியில் மழைக்குப் பஞ்சமே கிடையாது. நீர்நிலைகளை முறையாக பாராமரித்து, வடிகால் வசதியை மேம்படுத்தி, கழிவுநீரை முறையாக கையாள்வதன் மூலம் சென்னையை நீர் தட்டுப்பாட்டில் இருந்து எளிதாக காக்கலாம். அதேபோலதான் பெங்களுரு பகுதியும்.

'Water Warrior' Nimal
'Water Warrior' Nimal
Q

கென்யாவில் உங்கள் சீரமைப்பு பணியின் அனுபவம் குறித்து சொல்லுங்க?

A

கென்யாவில் சீரமைப்பு பணி நடந்த இடமானது  மிகவும் மோசமான நிலையில்தான் இருந்தது. ஆனால், தற்போது அப்பகுதியில் ஏழு குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், நம்மாழ்வார் பெயரால் ஒரு குருங்காடு அமைக்கப்பட்டு மரம் செடிகளோடு அந்த இடம் மிகவும் செழிப்பாக இருக்கிறது. அதனைதொடர்ந்து நான் நைஜீரியா, சூடான் ஆகிய  எட்டு நாடுகளில் நீர்நிலை சீரமைப்பு பணியைத் தொடர இருக்கிறேன்.

Q

இந்தப் பணியின்போது இந்தியர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் நீங்கள் கண்ட வித்தியாசம் என்ன?

A

நீர்நிலைகளைச் சீரமைப்பது மட்டுமின்றி அதனை சரிவர பராமரிப்பதில் வெளிநாட்டவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால், நம் நாட்டு மக்கள் நீர்நிலைப் பராமரிப்பில் இன்றளவும் பின்தங்கி இருக்கின்றனர். எடுத்துகாட்டாக சொல்லப்போனால் சென்னை  பள்ளிக்கரணையில் ஒரு சதுப்பு நிலக் காடானது  அழிந்து,  கிட்டத்தட்ட ஒரு குப்பைக்கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதெல்லாம் மிகவும் கொடுமையான ஒரு விஷயம்.

'Water Warrior' Nimal
'Water Warrior' Nimal
Q

இயற்கைக்கு எதிராக இருக்கும் கருவேலம் மரம் மற்றும் மணல் திருட்டு குறித்து உங்கள் கருத்து என்ன?

A

கருவேலம் மரம் என்பது நிலத்தின் நீர்மட்டத்தை அடியோடு உரியக்கூடிய தன்மைகொண்டது. ஆனால் அதைத்  தாண்டி கருவேலம் வேறு எந்தவொரு மரம், செடியையும் அப்பகுதியில்  வளர அனுமதிக்காது. அதிலும் குறிப்பாக இராமாநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் அளவிற்கு கருவேலம்  மரங்கள் எந்த பகுதியிலும் கிடையாது. என்னுடைய இந்த சீரமைப்பு பணியில் நான் கிட்டத்தட்ட 6000 ஏக்கர் அளவிலான கருவேலம் மரங்களை அழித்திருக்கிறேன். அதேபோல மணல் திருட்டு  மிகக் கொடுமையான பாவம். இதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Q

இன்றைய இளைஞர்களுக்கு நீர்நிலைகளின் பராமரிப்புத் தொடர்பாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

A

இயற்கைக்கு எதிராக நாம் பல தவறுகளை செய்துவிட்டோம். இதற்கு நான் மட்டும் முன்னெடுத்து அதனை சரி செய்ய நினைப்பது இயலாத காரியம். எனவே இளைஞர்கள் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவதை குறைத்துக் கொண்டு நம்மை சுற்றி நடக்கும் சூழலை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளைப் பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்துங்கள். இதுதான் நமது சுற்றுச்சூழலுக்கு தற்போதைய முக்கியத் தேவையாக இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com