பார்வைக்குப் புலப்படாத பேராபத்து! பிழைத்தது என்னவோ 'அவன்' செயல்!

Speed break
Speed break
Published on

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு இரவு 9.30 மணிக்கு வீடு திரும்பிகொண்டிருந்தேன். திடீரென்று நான் பயணித்த ஆட்டோ அப்படியே தூக்கிப் போட்டது. நான் மேலே வீசப்பட மேற்கூரை கம்பியில் என் தலை இடித்துக் கொண்டது. டிரைவரும் பெரிதும் தடுமாறி, பிறகு ஓரிரு  விநாடிகளில் சுதாரித்துக் கொண்டு ஆட்டோ கவிழ்ந்துவிடாதபடி, பத்தடி தள்ளிச் சென்று  நிறுத்தினார். 

அவரைப் போலவே நானும் தலையைத் தேய்த்துக் கொண்டு எங்களை இப்படி நிலைகுலைய வைத்தது யார் அல்லது எது என்று பார்ப்பதற்காகக் கீழே இறங்கினேன். தெரு விளக்குகள் இருந்தும் போதிய வெளிச்சம் இல்லாததால் சாலையில் படுத்திருந்திருக்கக் கூடிய மாடு மீது மோதிவிட்டோமா என்று எனக்குச் சந்தேகம். ஆனால் அந்த குலுக்கல் அதிர்ச்சிக்குக் காரணம், ஐயோ பாவம், மாடு அல்ல, சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த தடை மேடுதான் என்று தெரிந்தபோது திகைத்தோம். 

வேகத்தடைக்காகப் போடப்பட்டிருந்த அந்த மேடு இப்போது விபரீத விபத்துக்கு வழி வகுத்து விட்டது; அவ்வாறு பதிக்கப்பட்டிருந்த அதன் நோக்கமே கேலிக்குரியதாகி விட்டது! 

ஆமாம், அந்தத் தடை மேடு, அங்கே இருப்பதற்கான அடையாளமே தெரியாமல் சாலையின் கருமை நிறத்தோடு ஒன்றியிருந்ததால்தான் வாகனத்தில் முகப்பு விளக்கு எரிந்தும்கூட அதை கவனிக்க இயலவில்லை. 

சில நாட்களுக்கு முன்னால் இதேபோன்ற சம்பவத்தில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தூக்கி வீசப்பட்டு தலை சாலையில் மோதி அவர் இறந்துவிட்ட செய்தி வந்திருந்தது. அவர் தலைக்கவசம் அணியாமல் டூவீலரை ஒட்டிச் சென்றார் என்று காரணம் காட்டி அவருக்கான ஆயுள் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்றும் அறிந்தபோது மிகவும் வேதனையுற்றேன். 

இதையும் படியுங்கள்:
நம் அறிவை சோதிக்கும் கண்ணுக்குத் தெரியாத குரு! அது யாருடா?
Speed break

நம் பாதுகாப்புக்காக நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டு பயணிப்பதுதான் நல்லது என்றாலும், இப்படி எனக்கு நேர்ந்தது போல கண்ணுக்குத் தெரியாத ஆபத்து காத்திருந்தால் அதை எப்படித்தான் தவிர்ப்பது?

சாலையில் வேகத்தடை மேடுகளை அமைப்பதற்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட சாலையில் சராசரியாக செல்லக் கூடிய வாகனங்கள், அந்தச் சாலையில் இருக்கக் கூடிய மருத்துவமனை, பள்ளிக்கூடம், வழிபாட்டு ஆலயம், குறிப்பிட்ட அந்த சாலை சந்திக்கக் கூடிய பிரதான பெரிய சாலை அதில் செல்லக் கூடிய கனரக வாகனங்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே சாலைகளில் தடை மேடுகள் அமைக்கப்படுகின்றன.

சரி, இப்படி தடை மேடுகளை அமைக்கும்போது அந்த மேடு அங்கே இருக்கிறது என்பதை அடையாளம் காட்ட, ஒளி பிரதிபலிக்கக் கூடிய மஞ்சள் வண்ணத்தைக் குறிப்பிட்ட இடைவெளியில் பட்டையாக தீட்டி வைக்க வேண்டும் என்றும் ஒரு விதி இருக்கிறதே, அதை ஏன் யாரும் பின்பற்றுவதில்லை என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமா?

அப்படி எச்சரிக்கை ஒளி இருந்தால், இரவு நேரத்தில் வேகமாக வரக்கூடிய வாகனங்களும் அதன் பிரதிபலிப்பை தம் வாகன விளக்குகளால் அடையாளம் கண்டுகொண்டு வேகத்தைக் குறைத்து எந்த ஆபத்தும் நேராதபடி பார்த்துக் கொள்ளலாமே!

இதையும் படியுங்கள்:
வருமான வரி... விட்டில் பூச்சியாக மாறும் சாமான்ய மக்கள்!
Speed break

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், இந்தத் தடை மேடுகளைப் போலவே பாதாள கழிவுநீர்க் குழாய்களைப் பழுது பார்ப்பதற்காக சாலையில் ஆங்காங்கே மூடிகளை அமைத்திருக்கிறார்கள். ஏதேனும் பழுதென்றால் இந்த மூடியைத் திறந்து உள்ளே அடைத்துக் கொண்டிருக்கும் குப்பைகளை நீக்கி கழிவு நீர் சீராக ஓட வழி செய்வார்கள். இந்த மூடிகளும் சில சாலைகளில் தரையோடு தரையாக இல்லாமல் ஒரு மேடாக, வேகத்தடை மேடுகளைப் போல ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக அமைந்திருக்கின்றன.  குறிப்பிட்ட தெருவில் பாதாள கழிவுநீர்க் குழாயில் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்வதற்காக அதாவது அந்த இடத்தை அடையாளம் தெரிந்து கொள்வதற்காக, அப்படி மேடாக அமைத்திருப்பதாக சமாதானம் சொல்கிறார்கள். 

வேகத்தடை மேடு போலவே இந்த சாக்கடை மேடுகளும் ஆபத்தை வரவழைப்பவை என்பதையும் சில விபத்துகள் நிரூபித்திருக்கின்றன. இவற்றிற்கும் வண்ணம் பூசி வைத்தால் எளிதாக அடையாளம் தெரிந்து கொள்ளலாமே என்று தோன்றியது.

என்ன, போக்குவரத்து காரணமாக அந்த பிரதிபலிப்பு வண்ணப் பூச்சின் நிறம் மங்கவோ அல்லது முற்றிலும் மறைந்து போகவோ நேரும். அப்படியானால் குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த வண்ணத்தை மீண்டும், மீண்டும் பூசி அடையாளம் காட்டலாம். பார்வைக்குப் புலப்படாத இத்தகைய கறுப்பு மேடுகளுக்கு வண்ணம் பூச அரசிடம் நிதி இல்லை என்று யாராவது சொல்லுவார்களா என்ன?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com