‘நீட் தேர்வு’ எதிர்ப்பு ஹிந்தி எதிர்ப்பின் நீட்சியா?

Neet exam
Neet exam

டந்த மூன்றாண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க தேசிய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வில் கணிசமான அளவு தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.

இந்த வருடம் மே 5 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் இந்தியா முழுவதும் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 4075 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயந்தி பூர்வஜா, ரோஹித், ரஜினீஷ், சபரீஸ் ஆகியோர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதல் நான்கு இடங்களைப் பெற்றுள்ளனர். இதில், திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயந்தி பூர்வஜா எந்த தனியார் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல் என்.சி.ஆர்.டி பாடத் திட்டத்தை மட்டும் படித்து தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

இவர்கள் மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கிராமப்புறங்களில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் பரவலாகத் தேர்ச்சி பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டு தவறான கேள்விகளுக்குக் கருணை மதிப்பெண் வழங்க உள்ளார்கள். கருணை மதிப்பெண்கள் வழங்கும் பட்சத்தில் இந்திய அளவிலும், தமிழ்நாட்டு அளவிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இன்னும் பல மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நீட் தேர்வை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகின்றன. ‘நீட் தேர்வில் குளறுபடிகள் இருப்பதால் இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் ராம்தாஸ். (தேர்தலில் குளறுபடிகள் நடப்பதால் தேர்தலே வேண்டாம் என்று மருத்துவர் சொல்லி விடுவாரோ என்று பயமாக இருக்கிறது). நீட் எதிர்ப்பு என்பதை ஹிந்தி எதிர்ப்பின் நீட்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஹிந்தி திணிப்பை எதிர்த்து மிகக் கடுமையாகக் குரல் கொடுத்து வரும் திராவிட முன்னேற்ற கழகம் இன்று வரை மத்திய அரசின் கல்வி திட்டங்களைப் புறக்கணித்தே வந்திருக்கிறது. ஆனால், திமுக மத்திய அமைச்சரவையில் பல ஆண்டுகள் அங்கம் வகித்துள்ளது என்பது தனிக்கதை.

கிராமப்புற ஏழை மாணவர்கள் நல்ல தரமான கல்வி பயில மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியால் நவோதயா பள்ளிகள் இந்தியா முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தப் பள்ளிகளில் ஹிந்தி இருக்கிறது எனும் ஒரே காரணத்தால் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் இந்தப் பள்ளிகளை ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரால் கொண்டு வராமல் தடுத்துவிட்டன.

நீட் தேர்வில் கேள்விகள் பெரும்பாலும் மத்திய அரசு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுவதால் நவோதயா பள்ளிகளில் படிக்கும் பிற மாநில மாணவர்கள் நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடிகிறது. நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் மாநில அரசு பள்ளிகள் அனைத்துமே மத்திய அரசு பாடத்திற்கு மாறி வருகின்றன.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. நீட் எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பின்னால் இந்தக் கல்லூரி நிர்வாகங்களின் ஆதரவும் இருக்கிறது என்கிறார்கள் சிலர்.

நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து சில மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களை ஏதோ தியாகிகளைப் போலவும் வீரர்களைப்போல சித்தரிக்கும் போக்கை ஊடகங்களும், அரசும் கைவிட வேண்டும். இன்றைய மாணவர்களுக்குத் தேர்வை எதிர்கொள்ள கவுன்சிலிங் தேவைப்படுகிறது.

நீட் தேர்வு காலத்தின் கட்டாயம் என்பதைப் புரிந்துகொண்ட, இதற்கு முன்பு ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப் போராடி இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார். இன்று நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய இந்த இட ஒதுக்கீடும் முக்கியக் காரணமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
விழித்திருந்தால் வெற்றி நிச்சயம்!
Neet exam

இது போதாது. நமது மாணவர்கள் மேலும் மேலும் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவர்களாக வேண்டும். இதற்கு கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். செய்வார்களா நம் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள்?

1970களில் எம்.ஜி.ஆர். கல்லூரியில் இருந்த பியூசி படிப்பை நீக்கிவிட்டு பள்ளியில் பிளஸ் டூ முறையை அறிமுகம் செய்தார். இதற்கும் அப்போது எதிர்ப்பு கிளம்பியது. 'பொம்பள புள்ள பத்தாவது வரை படிச்சா போதும்' என்று நினைத்த பல குடும்பங்கள் பன்னிரண்டாவது வரை பெண்களைப் படிக்க வைத்தன. இன்று தமிழ்நாட்டில் பலர் உயர் கல்வி பெறுவதற்கு இந்த சிஸ்டமும் ஒரு காரணம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது கல்விக்கும் முழுமையாகப் பொருந்தும்தானே.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு, நீட்டிலும் சிறந்த தமிழ்நாடு என்று பெயர் பெறுமா? பெறும் என்று நம்புவோம். தமிழகத்தின் பெருமையை உயர்த்தும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து கூறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com