
டெல்லி - என்சிஆர் பகுதிகளில் தெரு நாய்களால் பலர் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் தெருநாய் கடியில் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, ‘‘டெல்லி - என்சிஆர் பகுதிகளில் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் பராமரிக்க வேண்டும். அவற்றை மீண்டும் தெருக்களில் விடக்கூடாது’’ என்று கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர்.
இந்த பிரச்சனை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியதால், ஒரு புறம் நாய் விரும்பிகளும், நாயால் பாதிப்பு என்று சொல்லக்கூடியவர்களும் இணையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது வலுவெடுத்து வந்த நிலையில், பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் இந்த தலைப்பு குறித்து தான் பேசப்பட்டது. இதில் நாய்க்கு சம உரிமை வேண்டும் என பேசிய பலரும் ட்ரோலில் சிக்கியுள்ளனர். மனிதர்களை விட நாய்களுக்கு இத்தனை பேர் வாதாடுகிறார்கள் என்று மக்கள் கொதித்தெழுந்து வருகின்றனர்.
உண்மையில் 5 அறிவு உள்ள அந்த ஜீவராசியை மாநகராட்சி அழைத்து போவது சரியா, அந்த நாய்களில் மனநிலை எப்படி இருக்கும், இந்த தீர்ப்பு சரியானதா, இதற்கு தீர்வு என்ன?
விலங்குகளின் வாழ்க்கை சூழலை உணர்ந்த கால்நடை மருத்துவர் பிரியா என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
முதலில் சரியாக ஆராயாமல், நீதிபதி தீர்ப்பை வழங்கியதாக கூறிய அவர், ஒரு சில இடங்களில் நடக்கும் பிரச்னையை மையமாக வைத்து ஒட்டு மொத்த தெருநாய்களையும் வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது நியாயமா என்று கேள்வி எழுப்பினார். சமூக ஊடங்களால் தான் நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.
நாய் கடி தொடர்பான வீடியோக்கள் அதிகரித்துள்ளதால் தான் இந்த பிரச்னை வலுத்துள்ளதாக கூறினார். தானும், தன்னை சார்ந்தவர்களும் நாய் கடி அனுபவித்துள்ளதாகவும், இதனால் அச்சமடைய வேண்டாம், தடுப்பூசி போட்டு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
நாய்களுடன் தினசரி பழகுவதால், அவர்களின் குணம் தனக்கு தெரியும் என்றும், அதற்கு ஒரு பிஸ்கட் கொடுத்தால் போதும், அது அன்பால் அடங்கிவிடும் என்றும் கூறினார். இந்த பிரச்சனைக்கு தீர்வு நாய்களை அழைத்து செல்வதில்லை என்றும், மனிதர்களுக்கு எப்படி செயல்பட வேண்டும், எப்படி பழக வேண்டும் என்ற அதிக விழிப்புணர்வும் தான் என்றும் தெரிவித்தார்.
நாய் கடி பட்டவர்களுக்கு வழங்கப்படும் immuno globulin என்ற தடுப்பூசி ஒரு தனியார் மருத்துவமனையில் ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாகவே வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
அப்போ தெருநாய்களை என்ன செய்யலாம்?
ஒவ்வொரு தெருக்களிலும் உள்ள நாய்கள் கடிக்கிறது என்று மக்கள் சொல்லலாம். அந்த தெரு மக்கள் ஒன்றிணைந்து அந்த நாய்களை மாநகராட்சி அல்லது தனியார் என் ஜி ஓக்களிடம் அழைத்து சென்று கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி போட்டு அழைத்து வந்தால் எந்த பிரச்னையும் வராது. இதை ஒட்டு மொத்த மக்களும் ஒன்றிணைந்து உடனடியாக செய்யலாம். ஒரு தெருவில் குறைந்தது 4 நாய் விரும்புவர்களாவது இருப்பார்கள். அவர்கள் ஒன்றிணைந்து இந்த செயலை உடனடியாக செய்யலாம்.
voice of animals, b mad, jaws, bluecross உள்ளிட்ட பல என் ஜி ஓக்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கெல்லாம் 3500 ரூபாய்க்கே அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார்கள். இதனால் மக்கள் ஒன்றிணைந்து இந்த செயலை செய்ய வேண்டும். நாய்களும் பாதுகாக்கப்படும், மக்களும் பாதுகாக்கப்படுவார்கள் என்று கூறினார். நாய்கள் மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ பழகிவிட்டன. அதை தனியாக அடைத்து வைப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது என கவலையுடன் தெரிவித்தார்.