நாய்கள் எப்போதும் மனிதர்களுடன் நெருங்கி பழகும் ஒரு விலங்கு. பல வீடுகளில் நாய்களை ஒரு குடும்ப உறுப்பினர் போலத்தான் நடத்துகிறார்கள். நாய்களுக்கு நிறைய அன்பினை வாரி வழங்குகிறார்கள். நாய்களும் பதிலுக்கு அன்பாகவும், நன்றி மற்றும் விசுவாசத்தோடும் இருக்கின்றன. ஆனாலும் நாய்களை சரிவர பராமரிக்காமல் வீட்டில் வைத்திருந்தால், அது உங்களுக்கு சில நோய்களை ஏற்படுத்தக்கூடும். நாய் கடித்தால் ரேபிஸ் நோய் வரும் என்பது அனைவருக்கும் தெரியும். அது அல்லாமல் நாய்கள் மூலம் பரவுகின்ற சில நோய்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.
சிறிய நாய் குட்டிகள் பெரும்பாலும் கேம்பிலோ பாக்டர் பாக்டீரியா தாக்குதலுக்கு ஆளாகின்றன. இந்த பாக்டீரியாக்கள் நாய்குட்டிகளின் கழிவின் மூலம் நோயெதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு பரவுகிறது. நாய்க்குட்டிகளுடன் விளையாடும் சிறுவர்கள் முதன்மையாக நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு காய்ச்சல், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் காணப்படும்.
பொதுவாக சால்மோனெல்லோசிஸ் பாக்டீரியா பழைய முட்டை மற்றும் நீண்ட நேரம் வைக்கப்பட்ட கோழிக்கறியில் தோன்றக் கூடியது. இது நாய்களின் உணவு தட்டுகள், கிண்ணங்கள் மூலம் பரவுகிறது.
நாய்கள் பயன்படுத்திய உணவுப் பொருட்கள் மற்றும் தட்டுகளை தொடும் பொது சால்மோனெல்லா தொற்று ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகும் மனிதருக்கு தலைவலி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி ஆகியவை ஏற்படும். உடனடியாக கவனிக்கா விட்டால் உடல்நிலையை மோசமாக்கும்.
லெப்டோஸ்பிரோசிஸ் என்பது பாதிக்கப்பட்ட நாய்களின் சிறுநீர் மூலம் பரவும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இந்த பாக்டீரியா தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இது கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும். கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்வலி இதன் அறிகுறிகளாக உள்ளன.
நாய்களின் கழிவுப் பொருட்களிலிருந்து உருவாகும், கொக்கிப்புழு லார்வாக்கள் மனிதர்களிடம் பரவி சருமம் சார்ந்த நோய்களை ஏற்படுத்துகின்றன. மழைக் காலங்களில் இந்த தொற்று அதிகம் பரவுகிறது. இதனால் மனிதர்களுக்கு கடுமையான அரிப்பு, சருமம் தடித்தல், சிவத்தல் போன்றவை உருவாகின்றன.
நாய்களின் எச்சில் அல்லது அவற்றின் காயங்கள் மூலம் புருசெல்லா கேனிஸ் தொற்று பரவுகிறது. நாய்களை பராமரிப்பவர்களுக்கும் அடிக்கடி நாயை தொடுபவர்களுக்கும் இந்த நோய் தாக்குகிறது. இந்த நோய் மிகவும் அரிதாகத்தான் தோன்றுகிறது என்றாலும் நீண்ட நாள் காய்ச்சலையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
நாய்களுடன் அடிக்கடி தொடர்பில் இருப்பவர்களுக்கு எளிதில் பாஸ்டுரெல்லா தொற்று பரவுகிறது. நாயின் பல் பட்டாலோ அல்லது நகக் கீறல்கள் படுவதால் பரவுகிறது. இந்த வகைப் பாக்டீரியா விரைவாக மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த தொற்று வேகமாக உடலில் பரவும் தன்மை கொண்டது. இது செல்லுலிடிஸ் நோயையும் உண்டாக்கி அதிக உடல்நல சீர்கேட்டை உருவாக்கும்.
நாய்களின் கழிவுகளில் இருந்தும், அதன் மீது ஒட்டி உரசி பழகுபவர்களுக்கும் நாடாப்புழு மற்றும் பூஞ்சை தொற்று எளிதில் பரவுகிறது. நாடாப்புழு வயிற்று வலி, சரும பிரச்சனைகள், வைட்டமின் குறைபாடுகள் ஆகியவற்றை ஏற்படுத்தி மனிதர்களை பலவீனமாக்கும். பூஞ்சை தொற்று உடலில் படர்தாமரை உள்ளிட்ட பல தோல் நோய்களை உண்டாக்குகிறது.
தற்காப்பு நடவடிக்கைகள்:
வளர்ப்பு நாய்களை வாரம் மூன்று முறை கிருமிநாசினி சோப்பு போட்டு நன்கு குளிப்பாட்ட வேண்டும். நாய்களுக்கு போட வேண்டிய தடுப்பு ஊசிகள் அனைத்தும் அந்தந்த நேரத்தில் போடப்பட வேண்டும். நாய்கள் உடலில் ஏதேனும் வாடை வந்தாலும், சிறிய தோல் நோய் போன்றவை ஏற்பட்டாலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அதற்குரிய மருத்துவத்தை பார்க்க வேண்டும்.
நாய்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி நாய்களுக்கு ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்று கண்காணிக்க வேண்டும். நாய்களை தொடும்போது கையுறைகளை அணிவதும், தொட்ட பின் கிருமிநாசினி சோப்பு போட்டு நன்கு கை கால்களை கழுவுவதும் அவசியமானது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மனிதர்களையும், முதியவர்களையும், சிறுவர்களையும் நாய்க்கு அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.