சிற்பங்கள்
சிற்பங்கள்

“எம்.ஜி.ஆர் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் உருவத்தைச் செதுக்குவது மிகவும் கடினம்!”

னிதர்களின் உருவகங்களுக்கு உயிர் கொடுக்கும் ஓர் உன்னதமான கலைதான் சிற்பங்கள் செதுக்கும் கலை. இறைவனால் உருவாக்கப்பட்ட உருவத்தினை வடிப்பதற்கான சக்தியானது சிலைகளைச் செதுக்கும் சிற்பிகளுக்கு உண்டு. அந்தவகையில் தன்னுடைய பதினாறு வயதில் துவங்கி இன்று வரை தொடர்ந்து 33 ஆண்டுகளாக சிற்பங்களைச் செதுக்குவதில் அனுபவம் கொண்டவர்தான் சென்னை மாங்காடைச் சேர்ந்த சிற்பி கார்த்திகேயன்(48). இவர் ஒரு சிற்பியாக மட்டுமின்றி சினிமாத் துறையில் ஒரு ‘ஆர்ட் டைரக்டராகவும்’ பணியாற்றி வருகிறார். இவரோடு நடத்திய ஒரு சுவாரஸ்யமான உரையாடல் பின்வருமாறு:

சிற்பி கார்த்திகேயன்
சிற்பி கார்த்திகேயன்
Q

நீங்கள் இந்தச் சிற்பம் செதுக்கும் துறையைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?

A

இந்தக் கலையின்மீது கொண்ட அதீத ஆர்வம்தான். என்னுடைய சிறுவயதிலிருந்தே  படிப்பைவிட படம் வரைவதில் எனக்கு  ஆர்வம் கொஞ்சம் அதிகம். எனவேதான் இந்தச் சிற்பங்கள் வடிக்கும் கலையைக் கற்கத் துவங்கினேன்.

Q

இந்தத் தலைமுறையினரில் எத்தனைப் பேர் இந்தத் துறையைத் தேர்வு செய்யத் தயாராக இருக்கின்றனர்?

A

பொதுவாகவே சிற்பக் கலை வேலை என்பது அழுக்கு படியக்கூடிய ஒரு வேலை ஆகும். என்னதான் பயிற்சியகங்கள் மற்றும் கற்றுக்கொடுக்க ஆர்வம் உள்ளவர்கள் இருந்தாலும்கூட இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் இக்கலையைக் கற்க தானாக முன்வருவதில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. 

Q

நீங்கள் இதுவரையில் எத்தனை சிலைகளை வடித்துள்ளீர்கள்? அதில் உங்களுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான சிலை என்றால் அது எது?

A

நான் இதுவரை சுமாராக 44,000த்திற்கும் அதிகமான சிலைகளை வடித்துள்ளேன். நான் வடிக்கும் சிலைகள் ஒவ்வொன்றுமே என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான சிலைதான். ஆனால், நம்முடைய  தேசத் தலைவர்கள் மற்றும் சித்தர்கள் சிலைகளை வடிக்கும்பொழுதுதான் என்னுடைய மனதிற்கு மிகவும் நிறைவாகவும் ஒருவகையில் மிகவும் பெருமையாகவும் இருக்கும்.

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா
Q

உங்களுக்குச் சவாலாக இருக்கக்கூடிய ஒரு விஷயம் எது?

A

இந்தக் கலையை பொறுத்தவரையில் ஒருவருடைய முக அமைப்பைக் கொண்டுவருவது என்பது மிகவும் கடினம். அதிலும் எம்.ஜி.ஆர் மற்றும் நம்முடைய முதல்வர் மு.க ஸ்டாலினின் முக அமைப்பானது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.  இந்த இருவேறு உருவங்களின் அடிப்படையில்தான் பலருடைய முக அமைப்புகளும் வரும் என்பது சுவாரஸ்யம். எனவே, அவர்களின் முகத்தைக் கொண்டுவருவது கொஞ்சம் நமக்குச் சவாலாகத்தான் இருக்கும். ஆனால், ஒருவரது உருவத்தின் தனித்துவத்தைக் கண்டுபிடித்துட்டால் இதுவும்கூட சுலபம்தான்.

Q

சிலைகளை வடிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்கள் உங்களுக்குச் சரிவரக் கிடைக்கின்றனவா?

A

முன்னர் இருந்ததைவிட இப்பொழுது மூலப்பொருட்கள் அனைத்துமே எளிதாகத்தான் கிடைக்கிறது. ஆனால், அவை அனைத்தும் தரமாகக் கிடைப்பதில்லை. உணவுகள் மட்டுமின்றி இதுபோன்ற பொருட்களிலும்கூட கலப்படம்தான் நிறைந்திருக்கிறது.

Q

உங்களுக்கு இந்தத் துறையில் கிடைத்த மறக்க முடியாத அங்கீகாரம்?

A

ஒவ்வொரு சிலையை வடித்து அதனை வாடிக்கையாளர் களிடம் ஒப்படைக்கும்பொழுதும் அவர்களுடைய அளவில்லா மகிழ்ச்சியில் வெளிவரும் வார்த்தைகள்தான் எனக்கு மிகச்சிறந்த அங்கீகாரமாகும். அண்மையில்கூட ஒருவருடைய தந்தையின் சிலையை அவருடைய மகனுக்கு வடித்துக்கொடுத்தோம். சிலையை பெற்றுக் கொண்ட மகன் எங்களை மனதார வாழ்த்தினார். இதுபோன்ற தருணங்கள் ஏராளம்.

முக்கிய பிரபலங்கள்...
முக்கிய பிரபலங்கள்...
Q

மிக முக்கிய பிரபலங்கள் எவரேனும் உங்களை சிலை வடிக்க அணுகியிருக்கிறார்களா?

A

ஆம்! நிச்சயமாக. நடிகர் விஜய் சேதுபதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் போன்றவர்கள் எங்களை அணுகியது உண்டு. அதுமட்டுமின்றி மெரினா கடற்கரைக்கு அருகில் இருக்கும்  ஜெயலலிதாவின் சிலை மற்றும் கலைஞரது சிலையை வடித்திருக்கிறோம். தற்போதும்கூட திருமாவளவனின் தந்தையினுடைய சிலை மற்றும் அண்ணா மேம்பாலத்தில் வைப்பதற்காக கலைஞர் கருணாநிதியின் சிலை போன்றவை வடித்துக் கொண்டிருக்கிறோம்.

Q

ஒரு சிலையை வடிப்பதற்கான செய்முறைகள் என்னென்ன?

A

முதலில் வாடிக்கையாளர்களிடம் மெட்டிரியல் மற்றும் சிலையின் அளவு  குறித்து  தேர்வு செய்துகொள்வதுதான் மிகமுக்கியம். இயல்பாகவே தெய்வ சிலைகள் என்றால் நேரடியாக கருங்கற்களில் வடிக்கலாம். ஆனால், மனித உருவங்களை நேரடியாக வடிப்பது கடினம்தான். மனித உருவங்களைச் செதுக்குவதற்கு முன்னதாக சிலையின் மாடலை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கவேண்டும். அதன்பின்னர் டை பயன்படுத்தி ஒவ்வொரு கட்டங்களாக அவரவர் விருப்பதிற்கேற்றார்போல  கேட்கும் உருவச் சிலையை வடிவமைத்து வழங்க வேண்டும்.

 சிலைகள்...
சிலைகள்...
Q

நீங்கள் வடிக்கும் சிலைகளின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

A

சிலைகளின் விலை என்பது அதன் அளவு மற்றும் தரத்தைப் பொறுத்தேதான் நிர்ணயிக்கப்படும். அதோடு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பொருத்தும் அமையும். குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் சிலையானது ரூபாய் பத்தாயிரம் என்றால் நீண்ட நாட்கள் வரை பயன்படுத்தும் சிலையின் விலை ஐம்பதாயிரத்தையும் தொடும். இது முழுக்க முழுக்க சிலையின் அளவு, தரம் மற்றும் தனித்துவத்தின் அடிப்படையில்தான் வரும்.

இதையும் படியுங்கள்:
நயாகரா நீர்வீழ்ச்சியை வற்ற வைத்ததன் காரணம் தெரியுமா?
சிற்பங்கள்
Q

ஒரு நல்ல சிற்பியாக உங்களின் எதிர்கால நோக்கங்கள் என்னென்ன?

A

தரமான இனி வரும் தலைமுறை பேசும்படியான சிலைகளைச் செதுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமே.

Q

நீங்கள் அரசாங்கத்திடம் வைக்கும் வேண்டுகோள் என்ன?

A

நம்முடைய அரசாங்கம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல  விருதுகள் வழங்கு வருகிறது. ஆனால், அவை சரியானவர்களைச் சென்று அடைகிறதா என்பது சந்தேகம்தான். இங்கு பெரும்பாலான அங்கீகாரங்கள், சிபாரிசுகளின் அடிப்படையில்தான் கொடுக்கப்படுகிறது என்பதுதான் என்னுடையக் கருத்து. இங்கு நல்ல திறமையான கலைஞர்களின் எண்ணிக்கை என்பது அதிகம். ஆனால், அவர்கள் அனைவருமே திரைக்கு பின்னால்தான் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com