

கல்லூரி விட்டு வீடு திரும்பிய சங்கவிவின் முகம் உம்மணாமூஞ்சியாக இருப்பதைப் பார்த்தபோதே என்னவோ, ஏதோ என்றிருந்தது லோகநாயகிக்கு. வந்ததும் வராததுமாகக் கேட்க வேண்டாம் என்று பட்டது. சலவை ஆடைகளை மடித்து வைத்துக்கொண்டிருந்த தனது வேலையைத் தொடர்ந்தாள்.
சங்கவி கல்லூரிப் பையை தொப்பென்று டீப்பாய் மீது வைத்துவிட்டு, “ம்மா…! இனிமே நான் காலேஜுக்குப் போக மாட்டேன்!” என்றாள்.
லோகநாயகி அதிர்ந்தாள். “ஏன், என்னாச்சு?”
“பளைய ட்ரஸ்ஸைப் போட்டுட்டுப் போறேன்னு எங்க க்ளாஸ் பொண்ணுகல்லாம் கிண்டல் பண்றாங்கம்மா. எனக்கு அவமானமா இருக்கு.”
நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், “ஃப்பூ…! இவ்வளவுதானா? நான் கூட வேற ஏதாவது பெரிய விவகாரமா இருக்குமோன்னு பயந்துட்டேன்,” என்றாள்.
“என்னம்மா இவ்வளவு சாதாரணமாச் சொல்ற? எனக்கு எவ்வளவு அவமானமா இருக்குன்னு தெரியுமா…?” குரல் தழுதழுத்து, கண்கள் நீர் துளிர்த்தன.
அருகே சென்று ஆதுரமாக தோள் மீது கை வைத்தாள். குரலில் பரிவு தொனிக்க,
“பொண்ணுங்க, பொம்பளைங்க எல்லாருக்குமே ட்ரஸ்லயும் நகைலயும் ஆசை இருக்கும். நெறைய நகை - நட்டு வேணும்; பீரோ முளுக்க, வித விதமா பட்டுச் சீலை, சாதாச் சீலை, மத்த துணிமணிக வேணும்னு எல்லாப் பொம்பளைகளும் ஆசைப்படுவாங்க.