

பெருமாள்சாமிக்கு அவரது பெற்றோர், உடன்பிறப்புகள் உள்ளிட்ட அவரது வழிச் சொந்தங்களோடும் நெருங்கிய பழக்கம் கிடையாது. சுக – துக்க காரியங்களின்போது மட்டுமே போக்குவரவு. அவரது உடன்பிறப்புகளுக்கு மட்டுமல்ல; பெற்றோர்களுக்கே அவர் மீது பாச நேசம் இல்லை. அப்படித்தான் அவரது மனைவி, மக்களிடமும். சங்கவியும் அபிநயாவும் இருப்பது ஞாபகத்தில் இருக்குமா என்பதே சந்தேகம்.
தாய் வழி ரத்த உறவுகளான செங்கமலமும் பாமாவும் மட்டுமே இவர்களோடு நெருங்கிய பழக்கம் கொண்டிருப்பவர்கள். போக்குவரவு குறைவு எனினும் அலைபேசி வழி அடிக்கடி பேசிக்கொள்வார்கள். லோகாவின் சாதா அலைபேசியில் பணமும் அவ்வளவாக இராது என்பதால் தாயும் தங்கையுமே அழைத்து, அவர்களின் ஆண்ட்ராய்ட் அலைபேசியின் அன்லிமிட்டட் சேவையைப் பயன்படுத்தி மணிக் கணக்காகப் பேசுவார்கள். அதையும் பெருமாள்சாமி வீட்டில் இல்லாத நேரங்களில்தான் செய்ய இயலும்.
செங்கமலம் தாய், பாமா உடன்பிறப்பு என்பதாலும், இவர்கள் மீது மிகுந்த பரிதாபம் கொண்டிருப்பதாலும், அவர்கள் மட்டும் பெருமாள்சாமியின் இடக்குகளை மீறி இவர்களைப் பார்ப்பதற்காக அவ்வப்போது நேரில் வருவார்கள். அப்போதும் பாமா இவர்களின் வீட்டில் சாப்பிடவோ, காப்பி – டீ குடிக்கவோ கூட செய்யாமல், ஒரு மணி நேரத்தில் கிளம்பிவிடுவாள். செங்கமலம் மட்டும் இவளுக்காகப் பொறுத்துக்கொண்டு ஒரு வேளை சாப்பிட்டுவிட்டுச் செல்வாள்.