ஜனவரி 30 வள்ளலார் சித்தி பெற்ற தினம்! வள்ளலார் வாழ்க்கையில் ...
அருட்பிரகாச வள்ளலார் 5-10-1823ம் ஆண்டு - சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் இருபத்தோராம் நாள் - ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5.30 மணியளவில் இராமையபிள்ளை- சின்னம்மையார் தம்பதிகளுக்கு ஐந்தாவது மகனாகத் தோன்றினார். அவரது நட்சத்திரம் சித்திரை.
ஏராளமான அற்புதங்களை அவர் தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்டினார்.
அருள் மழையென கவிதைகளைப் பொழிந்தார். ஏராளமான இரகசியமான தத்துவ உபதேசங்களைத் தெளிவாக விளக்கினார்.
பின்னர் 1874ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் நாள், ஶ்ரீ முக வருடம் தை மாதம் 19ம் நாள் வெள்ளிக்கிழமையன்று சித்தி பெற்று இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அன்று பூச நட்சத்திரம்.
அவரது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை இங்கு காணலாம். இவை அனைத்தும், “திருவருட்பிரகாச வள்ளலார் தலை மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் எழுதிய உண்மைகள்” என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டதாகும்.
தண்ணீர் விளக்கு எரிந்த தன்மை!
ஒரு சமயம் கருங்குழி என்னும் ஊரில் உள்ள வேங்கட ரெட்டியார் வீட்டில் சில நாட்கள் வள்ளலார் பெருமான் தங்கி இருந்தார்.
ஒரு நாள் வீட்டில் இருந்த அனைவரும் வெளியூருக்குச் சென்றனர். செல்லும் முன்னர் அங்கிருந்த விளக்கிற்கு எண்ணெய் இட்டு ஏற்றி, அருகே ஒரு மண்பாத்திரத்தில் பருகுவதற்காக தண்ணீரை வைத்துச் சென்றனர்.
பெருமான் வழக்கம் போல அவ்விளக்கருகே அமர்ந்தவாறே பாக்களைப் புனைந்து கொண்டிருந்தார். எண்ணெய் தான் என்று எண்ணி பானையிலிருந்த தண்ணீரை எடுத்து விளக்கில் ஊற்றியவாறே இரவு முழுவதையும் கழித்தார். அந்த நீராலேயே விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
அடுத்த நாள் காலை வீடு வந்து சேர்ந்த அந்த இல்லத்துத் தலைவியாகிய முத்தாலம்மாள் விளக்கு நிறைய நீர் இருப்பதையும் அந்த விளக்கு எரிந்து கொண்டிருப்பதையும் பார்த்தார். அன்று முதல் சுவாமிகளை அவர் தெய்வமாகக் கொண்டாட ஆரம்பித்தார்.
சுவாமிகள் தண்ணீரில் விளக்கெரித்த அந்த அறையினை இன்றும் தைப்பூச காலத்தில் அன்பர்கள் தரிசித்து வருகின்றனர்.
தீண்டிய பாம்பு மாண்டது!
கூடலூர் அப்பாசாமி செட்டியார் என்ற அன்பரின் வாழைத்தோட்டத்தில் ஒரு நாள் வள்ளல் பிரான் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒரு பேயன் வாழைமரத்தின் மீதிருந்த பாம்பு ஒன்று அவரது தலையில் தீண்டி விட்டது. அதனைக் கண்ட மற்றவர்கள், “சுவாமிகளைப் பாம்பு கடித்து விட்டதே” என்று பதறி சிகிச்சை செய்ய முயன்றனர். ஆனால் பெருமானோ, “அந்த அரவம் எம்மை ஒன்றும் செய்யாது. அப்பாம்பு இறந்து போவதற்காகவே எம்மைத் தீண்டியது. அதுவும் இன்னும் சிறிது நேரத்தில் தானாகவே நடந்து விடும். அதனை நீங்கள் அடிக்கவும் வேண்டாம்,” என்றார். அவர் கூறிய படியே பாம்பின் விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. பாம்பும் சிறிது நேரத்தில் இறந்தது.
வடலூரில் சிதம்பரக் காட்சி!
ஆனித் திருமஞ்சனத் திருவிழா சிதம்பரத்தில் நடைபெறும் நாள் நெருங்கவே, பெருமானுடன் சிதம்பரம் செல்வதற்காக பல அன்பர்கள் வடலூர் வந்தனர். ஆனால் பெருமான் கிளம்பவே இல்லை. 'அடடா, சிதம்பர தரிசனம் பார்க்க முடியாமல் போய்விட்டதே' என்று அவர்கள் வருந்தினர். உடனே பெருமான் சத்திய தருமச்சாலையில் ஓரிடத்தில் ஒரு திரையைத் தொங்கவிட்டார். 'இத்திரையில் பாருங்கள்' என்றார். அத்திரையில் சிதம்பரத்தில் நடைபெற்ற அம்பலவாணரின் விழாக் காட்சி அப்படியே தோன்றியது. அனைவரும் அம்பலவாணனையும் பெருமானையும் வணங்கினர்.
அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெரும் கருணை!
ஜனவரி 30 காந்திஜி நினைவு தினம் காந்திஜி : சில சுவாரசியமான எழுத்துக்கள்!
காந்திஜியின் வாழ்க்கை புனிதமான வாழ்க்கை; ஒளிவு மறைவற்ற வாழ்க்கை. அதில் அவர் எழுதியது ஏராளம். அவை தொகுக்கப்பட்டு பெரிய பெரிய தொகுதிகளாக நமக்குப் பொக்கிஷமாகக் கிடைத்துள்ளது. அவர் எழுதியவற்றில் சில சுவாரசியமான பகுதிகளை இங்கே காணலாம்.
நான் ஏன் ஒரு ஹிந்து? - எங் இந்தியா 20-10-1927
பரம்பரையின் செல்வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனவே நான் ஓர் ஹிந்துக் குடும்பத்தில் பிறந்ததால், நான் ஹிந்துவாக இருந்து வருகிறேன். எனக்குத் தெரிந்த எல்லா மதங்களிலும் ஹிந்து மதம் ஒன்றே தான் மிகவும் சகிப்புத் தன்மை வாய்ந்தது என்பதை நான் அறிந்து கொண்டிருக்கிறேன். அதில் கண்மூடித்தனமான பிடிவாதத்திற்கு இடமில்லை. இது தான் என் மனத்தை மிகவும் கவர்ந்திருக்கிறது.
ஹிந்து மதம் அழியாது திகழ ஒரு ஸ்லோகம்! - ஹரிஜன் – 30-1-1937
மற்ற எல்லா உபநிஷதங்களும் மற்ற எல்லா வேத நூல்களும் திடீரென்று எரிந்து சாம்பலாகி விடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது ஈசோபநிஷத்தின் முதல் ஸ்லோகம் மட்டும் ஹிந்துக்களின் மனதில் பதிந்திருந்தால் ஹிந்து மதம் எக்காலத்திலும் அழிவின்றித் திகழும்.
அந்த ஸ்லோகம் இது தான்:
ஈஸாவாஸ்ய மிதம் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத:: கஸ்யவித் தனம்
இதன் மொழிபெயர்ப்பு இது:
“இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றிலும் சிருஷ்டிகர்த்தாவான இறைவன் வியாபித்துள்ளார். எனவே, எல்லாவற்றையும் தியாகம் செய்து அவருக்கு அர்ப்பணம் செய்யுங்கள். பிறகு உங்களுக்குக் கிடைக்கும் ஒரு பங்கை மாத்திரம் உபயோகப்படுத்திக் கொண்டு அனுபவியுங்கள். யாருடைய உடைமைகளுக்கும் ஒருக்காலும் பேராசைப்படாதீர்கள்.”
பாதுகாக்கும் கவசம் கடவுளே! - எங் இந்தியா 27-6-1929
நீங்கள் சுயநம்பிக்கையை வளர்த்து கடவுளை உங்களைப் பாதுகாக்கும் கவசமாகச் செய்து கொள்ள வேண்டும். அவரைக் காட்டிலும் வல்லமை வாய்ந்தவர் யாருமே இல்லை. கடவுளின் பாதங்களில் விழுந்து விடும் ஒரு மனிதன், வேறு எவரையும் கண்டு அஞ்சுவதில்லை.
பிரார்த்தனையே மனிதனுடைய உயிர்நாடி! - எங் இந்தியா 23-1-1930
பிரார்த்தனை மனிதனுடைய வாழ்க்கையின் உயிர்நாடியாகும். அது, மதத்தின் மூலாதாரமான அம்சமே. கடவுளை வேண்டிக் கொள்வதே பிரார்த்தனை. அல்லது பரந்த அர்த்தத்தில் உள்ளுக்குள் இறைவனுடன் தொடர்பு கொள்ளுவதும் பிரார்த்தனையே. எப்படி இருந்தாலும் பலன் ஒன்று தான்.
எனது உணர்வினாலேயே செயல்களைச் செய்தேன்! - ஹரிஜன் – 14-5-1938
இன்னும் ஒரு விஷயத்தையும் கூறி முடித்து விடுகிறேன். வாழ்க்கையில் நான் செய்த குறிப்பிடத்தக்க காரியங்கள் எதுவாயினும், அதை நான் பகுத்தறிவால் தூண்டப்பட்டு செய்யவில்லை. எனது உணர்வினால் தூண்டப்பட்டே செய்தேன். அந்த உணர்வை நான் கடவுள் என்றே கூறுவேன். 1930ல் நிகழ்ந்த தண்டி உப்பு சத்தியாக்ரஹத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உப்புச் சட்டத்தை மீறுவதால் என்ன பலன் ஏற்படும் என்பது பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லை. பண்டித மோதிலால்ஜியும் மற்ற நண்பர்களும் கோபமடைந்தார்கள். நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு நானும் எதுவும் கூற முடியவில்லை. ஏனெனில் எனக்கே அதைப்பற்றி எதுவும் தெரியாது. எனினும் அந்த எண்ணமானது என் மனத்தில் மின்னல் போலத் தோன்றியது. பின்னர் உப்புச் சத்தியாக்ரஹம், ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரையில் தேசம் முழுவதையுமே உலுக்குவிட்டதென்பது உங்களுக்குத் தெரியும்.
மஹாத்மாவைப் போற்றுவோம்; அவர் காட்டிய வழியில் நடப்போம்!