மதுரை ஜிகர்தண்டாவிற்கே சவால் விட்ட 'ஜெல்லி ஐஸ்கிரீம்' - ஒரு சுவையான நினைவூட்டல்!

jelly-ice-cream
jelly-ice-cream
Updated on
Kalki Strip
Kalki Strip

-சாந்தி சந்திரசேகரன்

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் ‘’நண்பர்களுடன் ஊர் சுற்ற பொய் சொல்லி மாட்டிய அனுபவம்’’! பற்றி கேட்டிருந்தோம். அதில் தேர்வான ஐந்து சுவாரஸ்யமான கட்டுரைகளில் முதல் கட்டுரை இதோ…

எங்கள் ஊரின் மிகப்பெரிய பெண்கள் பள்ளியில் நான் பத்தாவது படித்த சமயம். சில மாணவியர் பதினோராம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்குச் செல்வார்கள். எனவே அவர்களுக்கு ஒரு பிரிவு உபசார விழா எடுத்து வழியனுப்ப முடிவு செய்தோம். அவரவர் கையிலிருந்த சில்லறைகளை சேர்த்து 'பள்ளி முடிந்தவுடன் பக்கத்திலிருக்கும் பாண்டியன் ஐஸ்லாண்ட் போகலாம். அங்கே ஜெல்லி ஐஸ்கிரீம் வாங்கலாம்' என்பதே திட்டம்.

challenge-memory
சாந்தி சந்திரசேகரன்

பொதுவாக மறுப்பு சொல்லாததால், நான் எதையும் அப்பா அம்மாவிடம் மறைத்ததில்லை. ஆனால் திடீர் முடிவு என்பதால் இதை வீட்டில் சொல்லவில்லை. வீட்டிற்குச் சொல்லாமல் பஜாருக்கு செல்வது என்பது, எட்டு அண்ணன் தம்பிகளுடன் பிறந்த அப்பா இருக்கும் எங்கள் வீட்டில் சிரமம்.

திரும்பும் திசையெங்கும் என் சொந்தங்கள் இருப்பார்கள். குனிந்த தலை சகிதம் எப்படியோ சித்தப்பா, பெரியப்பா கடைகளைக் கடந்து இலக்கை வெற்றிகரமாக அடைந்துவிட்டோம். ஆளுக்கொரு ஜெல்லி ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தோம். அப்போது அதன் விலை 15 ரூபாய். அது பெரிய தொகை எங்களுக்கு.

தினமும் கிடைத்தால் திருநெல்வேலி அல்வாக் கூட திகட்டி விடும். எப்போதாவது கிடைத்ததால், எட்டாத மாங்கனிபோல அது அத்தனை சுவை எங்களுக்கு. சிவப்பு நிற.. ஜெல்லித்தீவின் மத்தியில் மிதக்கும் வெள்ளை நிற ஐஸ்கிரீம்..!!

ஐஸ்கிரீம்குள்ளிருந்து மொசக்குட்டிபோல ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் குட்டிக்குட்டி முந்திரித்துண்டுகள், அதன் மீது தூவப்பட்ட கலர் கலர் செர்ரிப்பழங்கள், ! மதுரைக் காரர்களின் ஜிகர்தண்டாவிற்கு எள்ளளவும் சளைத்ததல்ல இந்த ஜெல்லி ஐஸ்கிரீம். எண்ணும்போதே எச்சில் ஊரும்..! கண்ணால் அதைக் காணும்போது.. கையால் அதைத் தீண்டும்போது.. ஜெல்லியின் ருசியுடன் ஐஸ்கிரீமின் இனிமையும், குழுமையும் கலக்கும். முதலில் நாவில் நர்த்தனமாடி.. தொண்டையில் சில்லென இறங்கும்போது... இந்திரலோகமே மண்ணிற்கு.. இல்லை.. இல்லை.. வயிற்றுக்குள் வந்தது போன்ற மையல் இருக்கும் ..!!

ஜெல்லிக் கனவுகளுடன் காத்திருந்த எனக்கு.. எதிர் வீட்டிலிருக்கும் என் சித்தப்பா உருவில் வந்தது சோதனை. ஒரு ரோஸ்மில்க் வாங்கியவர் எதிர் டேபிளில் அமர்ந்தார். அப்பாவிடம் சொல்லாத என் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க.. தில்லானா மோகனாம்பாள் சிவாஜி போல.. மறைந்து, ஒளிந்து.. முக்காடிட்டு... ஆசையாய் திங்க வேண்டிய ஐஸ்கிரீமை.. விரக்தியில் நான் விழுங்கியிருந்தேன்.

இதையும் படியுங்கள்:
பொய் சொல்லத் தெரியாத மழலைகள்! நீதியின் குரலாக மாறும் குழந்தைகளின் சாட்சியம்!
jelly-ice-cream

சித்தப்பா கிளம்பிய பிறகுதான் சீவன் வந்தது. சென்ற தடம் தெரியாமல் வாய் கொப்பளித்து, பில்லை கிழித்து குப்பையிலிட்டு வீடு வந்தேன். வாசலில் நுழையும்போதே.. அப்பாவும் சித்தப்பாவும் ஏதோ கணக்கு வழக்கு பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். உள்ளமெல்லாம் பயம். ஆனாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. 'வாங்க சித்தப்பா' என்று விட்டு, முகம் பாராமல் ஓடிவிட்டேன். நான் உடை மாற்றி வருகையில் சித்தப்பா வெந்நீர் குடித்துக்கொண்டிருந்தார்.

"மைனி அவளுக்கும் கொஞ்சம் வெந்நீர் குடுங்க.. ரோஸ்மில்க் குடிச்சதே எனக்கு தொண்டைய கவ்வுது. பரீட்சை சமயத்துல ஐஸ்கிரீம் சாப்டுட்டு வந்துருக்கால்ல.. சளி-கிளி பிடிச்சிடப்போகுது" என்று அக்கறையாய் அவர் உரைக்க… அம்மா முறைக்க… நான் பதைபதைக்க... என்று ஒரே திரைப்படக்காட்சி போல சிறப்பான கூத்துதான் அன்று வீட்டில். இன்று பாண்டியன் ஐஸ்லேண்ட் இல்லை. ஆனால் இப்போதும் எங்காவது ஜெல்லி ஐஸ்கிரீம் பார்த்தாலே சிரிப்பு தானாய் இதழில் ஒட்டிக்கொண்டு இன்பமாய் இம்சிக்கும்!

logo
Kalki Online
kalkionline.com