
தெற்கு மும்பையின் (பம்பாய்) மலபார் மலையில் அமைந்துள்ளது. ஜின்னா ஹவுஸ். சவுத் கோர்ட் மேன்ஷன் என்று அழைக்கப்பட்ட இந்த வீடு, 1936ஆம் ஆண்டு மவுண்ட் ப்ளசண்ட் சாலையில் 2.5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது. இப்போது மலபார் மலையில் உள்ள வீட்டின் பகுதி பௌசாஹேப் ஹிரே மார்க் என்று அழைக்கப்படுகிறது.
இத்தாலிய பளிங்கு வேலைப்பாடுகளைக் கொண்ட ஜின்னாவின் கனவு இல்லம் இது. அன்றைய 2 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது. தற்போது தனிமையில் நிற்கும் ஒரு ஆளில்லாத மாளிகை, ஆனாலும் பல வரலாற்று நிகழ்வுகளுக்கு சான்றாக நின்று கொண்டிருக்கிறது.
மும்பையில் உள்ள தெற்கு கோர்ட் மேன்ஷன் என்று அழைக்கப்படும் ஜின்னா ஹவுஸ் ஒரு காலத்தில் பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் அன்பான இல்லமாக இருந்தது. வால்நட் மர வேலைப்பாடுகள் நிறைந்த இந்த வீட்டை ஜின்னா ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்து பார்த்து கட்டினாராம்.
வீட்டின் முதல் தளத்தில் 8 அறைகள், அட்டாச் பாத்ரூமுடன், நீண்ட வாரண்டா கொண்டது. வீட்டு வேலையாட்களுக்கென 5 அறைகள் கொண்டது.
இது புகழ்பெற்ற பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞரான கிளாட் பேட்லியின் கலை வழிகாட்டுதலின் கீழ் வடிவமைக்கப்பட்டது. பேட்லி 1930களில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த கட்டிடக் கலைஞர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர் 1933 முதல் 1943 வரை சர்.ஜே ஜே ஆர்ட் ஸ்கூலில் பிரின்ஸ்பாலாக இருந்தவர். இவர் தான் ஜின்னாவின் வீட்டை அரபிக் கடலை பார்த்தபடி முழுக்க முழுக்க இத்தாலிய கட்டிட கலைஞர்களை கொண்டு கட்டினார்.
1947ஆம் ஆண்டு கராச்சிக்கு குடிபெயர்வதற்கு முன்பு ஜின்னா அங்கு பத்து ஆண்டுகள் வசித்து வந்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் தான், 1944 செப்டம்பரில் ஜின்னாவிற்கும் மகாத்மா காந்திக்கும் இடையே இந்தியப் பிரிவினை குறித்த பேச்சுவார்த்தைகளுக்கான இடமாகவும் இருந்தது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சரியாக ஒரு வருடம் முன்பு, ஆகஸ்ட் 15, 1946 அன்று, ஜின்னாவிற்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் இடையில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை இங்கு நடைபெற்றது.
மகாத்மா காந்திக்கும் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கும் இடையே பாகிஸ்தான் - உருவாவது குறித்து நடந்த விவாதங்களுக்கு இந்த வீடு வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த கனவு மாளிகை பங்களாவில் தான் ஜின்னா தனது மனைவி ருட்டியுடன் வசித்து வந்தார். அதே காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனி நாடு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. பிரிவினையின் கொடூரங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ஆகஸ்ட் 7, 1947 அன்று அவர் தனது அன்புக்குரிய ஜின்னா வீட்டை விட்டு வெளியேறினார். ஜின்னா பம்பாய்க்குத் திரும்பி தனது அன்பான வீட்டில் வசிக்க விரும்பினார். ஆனால் காலம் அனுமதிக்கவில்லை.
ஜின்னாவின் மனம் பம்பாய் மற்றும் டெல்லியில் உள்ள அவரது இரண்டு வீடுகளில் மட்டுமே இருந்தது, அவர் கராச்சி செல்லும் முன் டெல்லி வீட்டை டால்மியாவிற்கு விற்பனை செய்து விட்டார். அவர் மிகவும் நேசித்த பம்பாய் வீட்டைப் பொறுத்தவரை, அதை இந்திய அரசு அவருக்கு மரியாதை நிமித்தமாக தொந்தரவு செய்யாமல் விட்டு வைத்திருந்தார்.
1948 ஆம் ஆண்டு, அந்த வீடு பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, 2007-ம் ஆண்டு, ஜின்னாவின் ஒரே மகள் தினா வாடியா, ஜின்னாவின் ஒரே சட்டப்பூர்வ வாரிசாக, அந்தச் சொத்தை வாரிசாகப் பெற வேண்டும் என்று கூறி மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இருப்பினும், மாளிகை கட்டப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஜின்னா ஒரு உயில் எழுதி, தனது திருமணமாகாத சகோதரி பாத்திமா ஜின்னாவை தனது சொத்துக்களின் ஒரே வாரிசாக ஆக்கினார். இதனால் ஜின்னாவின் ஜின்னா வீடு உட்பட சொத்துக்களின் சட்டப்பூர்வ வாரிசாக தினா வாடியாவின் கூற்றை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது. முகமது அலி ஜின்னாவின் 1939-ம் ஆண்டு உயில் குடும்பத்தில் பரம்பரைப் பிரச்சினையைத் தீர்க்கிறது என்று வெளியுறவு அமைச்சகம் மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஜின்னா வீடு பாத்திமா ஜின்னாவுக்கு சொந்தமானது என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஆனால் பாத்திமா ஜின்னா பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்ததால், ஜின்னா மாளிகை இந்திய அரசாங்கத்தின் கீழ் வரும் எதிரி சொத்துக்களின் பாதுகாவலரின் சட்டப்படி இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தற்போது அந்த ஜின்னாவின் வீட்டை புதுப்பிக்க மும்பை நகராட்சி இந்திய வெளியுறவுத்துறை அனுமதிக்காக காத்துக் கொண்டு இருக்கிறது!