‘பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்...’

Past Vs Present
Past Vs Present - Human psychology in daily lifeImage credit: AI image
Published on
Kalki Strip
Kalki Strip

"இந்தப் பக்கமா வந்தேன் அப்படியே உங்களையும் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்.."

தினசரி வாழ்க்கையில் இதை அடிக்கடி கேட்டிருப்போம். நண்பர்கள், சொந்தபந்தங்கள் இந்த வட்டத்துக்குள் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தை இது.

அப்படி எதுவும் சொல்லாமலே வண்டுகள், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் அடிக்கடி வந்து பூக்களை நலம் விசாரித்து செல்வதையும் நாம் பார்த்து இருக்கிறோம். மகரந்தச் சேர்க்கை நடைபெற அவை காரணமாகின்றன.

அலைகள் வந்து வந்து கரையைத் தொட்டுச் செல்கின்றன. சும்மா பாத்துட்டுப் போலாம்னு வந்தேன் என்று அலைகள் சொல்லாமல் சொல்கின்றன.

காலையில் சின்ன இடுக்கு வழியாக நம் வீட்டு உள்ளே வரும் சூரிய ஒளி, நம்மை பாத்துட்டுப் போகத்தான் வருகிறது.

பாத்துட்டு போலாம்ன்னு சொல்றதுல இரண்டு வகை உண்டு.

ஒன்று நட்பு அடிப்படையில் பார்க்க வருவது.

இன்னொன்று மிக முக்கியமானது. அது எதிர்பார்ப்போடு பார்க்க வருவது. இதை ரொம்ப ஜாக்கிரதையா கையாளணும். நம் மேல் அக்கறை இருப்பதுபோல பேச ஆரம்பித்து பின்னர் அவர்கள் தேவைக்கான கோரிக்கை விண்ணப்பம் கொடுப்பார்கள்.

கேட்பது தவறில்லை. விண்ணப்பத்தைப் பரிசீலித்து தீர்த்து வைப்பதும் தவறில்லை, கொடுப்பவர் நொந்துபோகும் அளவுக்கு வேறு மாதிரியான விஷயங்கள் நடக்கும் வரையில்..

"பாத்துட்டு போலாம்னு வந்தேன்" பேச்சுத்தமிழில் பயன்படுத்துவது. ஏழ்மையில் வாடும் புலவர்கள் தங்கள் வறுமையைப் போக்க மன்னர்கள் தேடிச் சென்று அவர்களை போற்றிப் பாடி பரிசு பெற்று வருவது சங்க கால வழக்கம். மன்னர்களும் அதை தங்கள் கடமையாக நினைத்து அவர்களை ஆதரித்து வந்தார்கள். அதன் மூலம் தமிழும் வளர்ந்தது. கீழ்க்கண்ட பாடல்கள் அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மோசடி!
Past Vs Present

"இம்பர்வான் எல்லை இராமனையே பாடி

என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள், பாணி"

பள்ளிப்பாடங்களில் இடம்பெற்ற பாடல். அந்தகக் கவி (பார்வைத் திறன் இழந்தவர்) வீரராகவ முதலியார் எழுதிய பாடல் இது.

மன்னனை போற்றிப் பாடி யானையை பரிசாக வாங்கி வந்த ஒரு பாணன் தன் மனைவிடம் சொல்வதை அப்படி பாடியுள்ளார். பத்துப்பாட்டில் இரண்டாவது பாட்டு 'பொருநராற்றுப்படை. 'முடத்தாமக்கண்ணியார்' இதன் ஆசிரியர்.

இதில் பாட்டுடைத்தலைவன் கரிகால் சோழன். வறுமையால், பசியால் வாடிய ஒரு பொருநனை (அரசர்களை புகழ்ந்து பாடி பரிசு பெரும் கலைஞன்) கரிகாலனிடம் பரிசு பெற்று வந்த மற்றொரு பொருநன், அவனிடம் சென்று "பாத்துட்டு போலாம்னு வந்தேன்" என்று சொன்னால் வறுமை நீங்கும் என்ற எண்ணத்தில் வழிகாட்டுகிறான்.

"பாத்துட்டு போலாம்னு வந்தேன்" வார்த்தை நம் நிர்வாகத் திறமைக்கும் முடிவு எடுக்கும் திறனுக்கும் வைக்கும் ஒரு சோதனை. வங்கியில் மேனேஜரை பார்ப்பதற்கு நிறைய பேர் வந்து போவார்கள். சிலர் தினசரி வந்து வந்து பார்த்து செல்வார்கள். சிலர் ரொம்ப பவ்யமாக பேசுவார்கள். இவர்கள் நோக்கம் கடன் வாங்க வேண்டும் என்பது மட்டுமே. கடன் வாங்கும் முன்பு அடிக்கடி வருவார்கள். அதன் பிறகு கொடுத்தவர்தான் அடிக்கடி சென்று அவரை பார்க்க வேண்டி இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஒரு நூறு ரூபாய் சமாச்சாரம்...
Past Vs Present

தற்போது நிலைமை தலைகீழ். ‘லோன் வேண்டுமா?, கிரெடிட் கார்ட் வேண்டுமா?’ என்று நிதி நிறுவனங்கள் போனில் கேட்கின்றன. அறிமுகம் இல்லாத குரல். "சும்மா பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்" பாணியில் மொபைல்!

இது போன்ற விஷயங்களில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. நிதி மேலான்மையோடு நெருங்கிய தொடர்பு உடையது இந்த 'பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்' தலைப்பு. மனித வளம் எப்படி இருக்கிறது என்பதையும் கற்றுக் கொள்ளலாம்.

உங்களை சுற்றி "பாத்துட்டு போலாம்னு வந்தேன்" மனிதர்கள் இருப்பார்கள். அவர்களிடம் நிறைய கற்றுக்கொள்ளலாம் (Human psychology in daily life) இலவசமாக.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com