Interview: "எனக்கு ரொமான்ஸ் பண்ணணும்னு ஆசை இருக்கு" காளி வெங்கட்டின் ஏக்கம்!
2009 - 2013 கால கட்டங்களில் குறும்படங்கள் வழியாக பல இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்கள். இந்த இயக்குனர்கள் பல இளம் நடிகர்களை தங்களின் படங்களில் அறிமுகப்படுத்தினார்கள். அந்த கால கட்டத்தில் அறிமுகமான நடிகர்களில் மிக முக்கியமானவர் காளி வெங்கட்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மெட்ராஸ் மேட்னி' மக்களிடமும், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சூட்டிங் இடைவெளியில் நம் கல்கி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணல்...
பதினைந்து வருடங்களாக நடித்து வருகிறீர்கள்... இப்போது திரும்பி பார்த்தால் எப்படி இருக்கிறது..?
ஏதோ நேற்று தான் என் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கத்தாழம்பட்டியிலிருந்து வந்தது போல் இருக்கிறது. சின்ன படம் பெரிய படம் என பல படங்கள் நடித்து விட்டேன். நிறைய பாராட்டுகள், விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து வந்து கொண்டிருக்கிறேன். "இந்த கேரக்டருக்கு நம்ம காளி வெங்கட் சரியா இருப்பான்" என டைரக்டர்கள் நினைக்கும் இடத்தில் இருப்பதே எனக்கு மகிழ்ச்சிதான்.
இன்று உங்கள் சொந்த ஊரான கத்தாழம்பட்டிக்கு செல்லும் போது நடிகர் காளி வெங்கட்டிற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது..?
என் ஊரில் என்னை நடிகனாக பார்ப்பதை விட நம்ம ஊர் பையன் சென்னையிலிருந்து வந்திருக்கான் என்ற அன்புதான் அதிகம் இருக்கும். எங்க ஊரில் இருந்து சென்னைக்கு வந்து நிறைய பேர் வேலை செய்றாங்க. அவங்கலாம் ஊருக்கு வரும்போது கிடைக்கும் அதே வரவேற்புதான் எனக்கும் கிடைக்கும்.
உங்களின் சொந்த மண் என்பதும் உங்களின் நினைவுக்கு வருவது எது?
என் அப்பா அம்மாதான். இருவரும் இப்போது உயிருடன் இல்லை. (சொல்லும் போது சற்று சோகமாகிறார்). கத்தாழம்பட்டியில் என் அப்பாவின் கரம் பிடித்து நடந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. எங்கள் பகுதி வானம் பார்த்த பூமி தான். மானாவாரி பயிர் சாகுபடி தான் நடக்கும். தீப்பெட்டி தொழிற்சாலை இங்கே பரவலாக உள்ளது. சமீபத்தில் ஊருக்கு சென்று இருந்த போது பல வீடுகளே தீப் பெட்டி தொழிற்சாலையாக மாறியதை பார்க்க முடிந்தது.
நீங்கள், ரமேஷ் திலக், கருணா, சதீஷ் போன்றவர்கள் ஒரே கால கட்டத்தில் அறிமுகம் ஆனீர்கள்... இவர்களில் நீங்கள் அதிக படம் நடிக்கிறீர்கள். எப்படி சாத்தியம்?
யோசிக்க பெரிதாக ஒன்றும் இல்லை. அவர்களெல்லாம் செலக்ட்டிவாக நடிக்கிறார்கள். நான் எனக்கு வரும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி கொள்கிறேன். எனக்கு EMI போன்ற விஷயங்கள் இருப்பதால் வரும் படங்களில் எல்லாம் நடித்து விடுகிறேன். இனி எதிர் காலத்தில் செலக்ட்டிவான கேரக்டரில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
மெட்ராஸ் மேட்னி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் "ரொமான்டிக்கா நடிக்க ஆசை" என்று சொன்னீர்களே... இது உங்களுக்கே நியாயமாபடுதா?
இது ஒண்ணும் அநியாயம் இல்லை. நியாயம் தான். படப்பிடிப்பில் நம்மை சுற்றி ஐம்பது, நூறு பேர் இருப்பார்கள். இவர்கள் முன் நடிக்கும் போது அழுகலாம், சண்டை போடலாம், அடி வாங்கலாம். ஆனால் ரொமான்ஸ் செய்வது என்பது கடினமான விஷயம். நமது வாழ்க்கையில் ரொமான்ஸ் என்பது இரண்டு பேரின் நடுவில் நடக்கும் தனிப்பட்ட விஷயம். ஆனால் சினிமாவில் இது பல பேர் முன்னிலையில் செய்ய வேண்டிய நடிப்பு. நடிப்பில் ரொமான்டிக் ஆக்ட்டிங் கஷ்டமான விஷயம். இந்த கஷ்டமான நடிப்பை நான் திரையில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருக்கிறது என்பதை தான் அன்று நிகழ்வில் குறிப்பிட்டேன். பெரிய ஹீரோக்கள் போல் இல்லை என்றாலும் எனக்கு தகுந்தார் போல் ரொமான்ஸ் கேரக்டர் செய்ய விருப்பம்.
ரொம்ப ரொமான்டிக்கான... ஆளா இருந்திருப்பீங்க போலயே?
யார் வாழ்க்கையில் தான் ரொமான்ஸ் இல்லை. என் வாழ்க்கையிலும் பள்ளி நாட்களில் ரொமான்ஸ் நடந்ததுள்ளது.
நீங்கள் நடித்த ஹீரோக்களிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன?
விஜய் சார் எளிமையாக இருப்பார். பழகும் போது பெரிய ஹீரோ என்ற உணர்வு நமக்கு வராது. மாதவன், சூர்யா இருவருமே சினிமாவில் காட்சிகளை விளக்குவதில் (டீடெயிலிங்) சிறந்தவர்கள்.