Interview: "சிம்ரன் ஜோடி என்றதும் ஷாக்கானீங்களா?" - சசிகுமார் open talk
"உங்களை இனிமேல் 'தோழர்' சசிகுமார் என்று அழைக்கலாமா?" என்று கேட்டால் சிரிக்கிறார் நடிக்கரும், இயக்குனருமான சசிகுமார். சசிகுமாரும், சிம்ரனும் இணைந்து நடித்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் வரும் மே 1 அன்று திரைக்கு வர உள்ளது. படத்தின் ரிலீஸ் வேலைகளில் பரபரப்பாக இருந்த சசிகுமார் நேரம் ஒதுக்கி நம் கல்கி ஆன்லைனுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணல்...
இந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு டைரக்டர், நடிகர் என்ற அடையாளத்துடன் இனி தோழர் என்ற அடையாளமும் சேர்ந்து கொண்டது போல் தெரிகிறதே..?
இந்த மாத தொடக்கத்தில் மதுரையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதை மனதில் வைத்து கொண்டு இப்படி கேட்கிறீகள் என்று புரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷன் என் நீண்ட நாள் நண்பர். மதுரையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேச வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். தோழர் வெங்கடேஷ் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மதுரை மாநாட்டில் கலந்து கொண்டு பேசினேன். அவ்வளவுதான்.
நீங்கள் கம்யூனிஸ சிந்தனை உடையவரா?
இடது சாரி சிந்தனை எளிய மக்களை பற்றியது. இடது சாரி தலைவர்கள் மிக எளிமையாக மக்களுடன் பழகுகிறார்கள். என்னுடைய படங்களும் எளிய மனிதர்களை பற்றி பேசுகிறது. இதை தான் நான் மேடையிலும் குறிப்பிட்டேன். எளிய மக்களை பற்றி நான் சொல்வதால் எனக்குள் கம்யூனிஸ சிந்தனை இருக்கிறது என்றும் சொல்லாம்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக நடிக்கிறீர்கள்? சிம்ரன் ஜோடி என்றதும் ஷாக்கானீங்களா? அல்லது மகிழ்ச்சியானீங்களா?
ஏன் எல்லாரும் இதே கேள்வியை கேட்கிறீங்க? ஏம்பா நாங்களெல்லாம் சிம்ரனுக்கு ஜோடியா நடிக்க கூடாதா? நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே சிம்ரன் ஹீரோயினாக நடிக்கிறாங்க. என் கூட நடிக்கும் போது எனக்கு அதிர்ச்சி இல்லை; மகிழ்ச்சிதான். சிம்ரன் சினிமாவில் தான் சந்தித்த பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் சூட்டிங் ராமேஸ்வரம் பகுதியில் நடந்தது. அப்போது தான் நடித்த 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் ஷூட்டிங் இதே ராமேஸ்வரம் பகுதியில் நடந்தது என்று கூறி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
டூரிஸ்ட் எந்த வகை ஃபேமிலி?
இலங்கை தமிழர்கள் படம் என்றாலே ஒரு வித சோகம் இருக்கும். முதல் முறையாக இலங்கையிலிருந்து இங்கே வரும் ஒரு குடும்பத்தின் கதையை ஒரு நகைச்சுவை பின்னணியில் சொல்லி இருக்கிறார் படத்தின் டைரக்டர் அபிஷந்த். இதற்காக சிறிது இலங்கை தமிழ் பேச கற்றுக் கொண்டேன். படத்தில் நகைச்சுவை இருக்கும். ஆனால் ஒரு சோகம் இழையோடிக் கொண்டிருக்கும்.
ஏன் இப்போது படங்கள் இயக்குவதில்லை?
நான் சொந்த படங்கள் தயாரித்து கடன் ஆகி விட்டது. இந்த கடனை அடைக்க நான் நடித்தால்தான் முடியும் என்ற சூழ்நிலை உருவானது. அதனால் டைரக்ஷனில் கவனம் செலுத்தி வந்தேன். இப்போது நிலைமை பரவாயில்லை. நான் இந்த சினிமா துறைக்கு வந்த புதிதில் 22 இயக்குனர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். என் நடிப்பில் இதுவரை 11 டைரக்டர்கள் வரை அறிமுகம் செய்து விட்டேன். இன்னும் 11 பேர் பாக்கி இருக்கிறார்கள்.
உங்கள் தயாரிப்பு நிறுவனம் பல சிறந்த கலைஞர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்துள்ளது. மீண்டும் தயாரிக்கும் எண்ணம் உள்ளதா?
இல்லை மீண்டும் படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை.
உங்களையும், சமுத்திரக்கனியையும் எப்போது திரையில் சேர்ந்து பார்க்கலாம்.
சமுத்திரக்கனி இப்போது பான் இந்தியா நடிகர் ஆகி விட்டார். இந்த ஆண்டு கனியும், நானும் சேர்ந்து நடிக்கும் படத்தை நீங்கள் எதிர் பார்க்கலாம்.
நீஙகள் பல மலையாள படங்களில் நடிக்கிறீர்கள். மலையாளத்தில் திரில்லர் படங்கள் பல மொழிகளில் வெற்றி பெற்று வருகின்றன. நீங்கள் ஏன் திரில்லர் படங்களை முயற்சிக்க கூடாது?
நான் அடுத்து நடிக்கும் படம் திரில்லர் கதை பின்னணியை கொண்டது. மாறுபட்ட திரில்லர் கதையில் என் நடிப்பை மிக விரைவில் பார்க்கலாம்.
'சுப்பிரமணியபுரம்' படத்தின் இரண்டாம் பாகம் வருமா?
சுப்பிரமணியபுரம் இன்று வரை ஏதோ ஒரு இடத்தில் பேசப் பட்டும், கொண்டாடப்பட்டும் வருகிறது. இதை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. இரண்டாம் பாகம் உருவாக்குவது என்பது சரியாக இருக்காது.