
தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பேசு பொருளாக மாறி இருக்கிறது கச்சத்தீவு விவகாரம். ஆனால் தமிழக அரசியல் களத்திற்கு இது புதியது அல்ல. கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமா இலங்கைக்கு சொந்தமா என்கிற சர்ச்சை 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது.
எங்கிருக்கிறது கச்சத்தீவு?
கச்சத்தீவு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் அமைந்திருக்கும் முக்கியமான பகுதியாகும். தற்போது கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கச்சத்தீவு 285 ஏக்கர் மட்டுமே கொண்ட ஒரு சிறிய தீவாகும். இதனுடைய அகலம் 300 மீட்டர், நீளம் 1.6 km ஆகும். இது இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும் இலங்கை யாழ்ப்பாணத்தின் நெடுந்தொலைவில் இருந்து 10.5 ml தொலைவிலும் பாக் நீரணி பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தத் தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. இங்கு புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்று அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெறும் விழாவில் இந்தியா மற்றும் இலங்கை சேர்ந்த மக்கள் பங்கேற்பார்கள்.
கச்சத்தீவு வரலாறு:
பதினாறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட போர்த்துக்கீசியர்கள் கச்சத்தீவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் கச்சத்தீவு தங்களுக்கு தான் சொந்தம் என்று இலங்கை கூறுகிறது. ஆனால் கச்சத்தீவு தமிழக மாநிலம் ராமநாதபுரம் ஜமீனின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆவணங்கள் இருக்கின்றன. இலங்கைக்கு எந்த கப்பமும் கட்டவில்லை என்று ராமநாதபுரம் ஜமீன் ஆவணங்கள் கூறுகின்றன. அதனால் அது தங்களுக்கே சொந்தம் என்று இந்தியா கூறியது.
1921 இல் சென்னை மாகாண அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரும் தமக்கே கச்சத்தீவு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதில் மீன்பிடி உரிமையை விட்டு தருவதாக இந்தியா ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டது. ஆனால் அப்போதைய காலனி அலுவலகம் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாததால் அது நிறைவேறவில்லை.
தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு:
கச்சத்தீவு அமைந்திருக்கும் இடம் மிகக்குறுகியது. இந்தியப் பொருளாதார மண்டலம் முடிவடையும் இடத்திலேயே இலங்கையின் பொருளாதார மண்டலம் தொடங்குகிறது. அதனால் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கையின் பொருளாதார மண்டலத்துக்குள் நுழையும் நிலை ஏற்படுகிறது. 2009க்கு பிறகு இலங்கை அரசு தனது கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி தமிழக மீனவர்களை கைது செய்வதும் துன்புறுத்துவதும் படகுகளை கைப்பற்றுவிதமான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது எப்படி?
1974 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கையின் பிரதமர் சிரிமாவோ பண்டார நாயக்காவும் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை வரையறுக்கப்பட்டு கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என்று முடிவானது.
ஆனாலும் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் உரிமையும், பயணிகள் விசா இன்றி கச்சத் தீவிற்கு சென்று வரும் உரிமையும் உண்டு, மீன்வலைகளையும் உணர்த்திக் கொள்ளலாம் என்கிற அனுமதியும் இருந்தது. ஆனால் 1976 ஆம் ஆண்டு ஏற்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தின்படி தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் இலங்கை பட்சத்தில் நுழையக்கூடாது என்கிற ஒப்பந்தம் கையெழுத்தானது.
கச்சத்தீவு விவகாரம்:
தற்போது தமிழகத்தில் உள்ள கட்சிகள் மட்டும் அல்லாது, தேசியக் கட்சிகளும் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசி வருகின்றன. புதிய பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடியிடம், மதுரை ஆதீனம் கச்சத்தீவை விரைவில் மீட்க வேண்டும் என்று வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலினும் கச்சத்தீவு மீட்பு பற்றி உறுதியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி இலங்கை அரசிடம் வலியுறுத்தி கச்சத்தீவை மீட்க வேண்டும். நிரந்தர தீர்வை எட்டும் வரை இடைக்காலத் தீர்வாக 99 வருட குத்தகையாக கச்சத்தீவை பெற வேண்டும் என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.